வாகனங்களை வழிமறித்த காட்டு யானைகள்
பந்தலூர்-உப்பட்டி சாலையில் வாகனங்களை வழிமறித்த காட்டு யானைகளால் பரபரப்பு ஏற்பட்டது.
பந்தலூர்,
பந்தலூர் அருகே மேங்கோரேஞ்ச், தொண்டியாளம், இரும்புபாலம் உள்ளிட்ட பகுதிகளில் காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து வருகின்றன. இந்தநிலையில் நேற்று மதியம் 12 மணிக்கு உப்பட்டியில் இருந்து பந்தலூர் செல்லும் சாலையில் அம்ரூஸ்வளைவு அருகே குட்டிகளுடன் 4 காட்டு யானைகள் சாலையில் உலா வந்தன. சாலையில் நடந்து சென்றதோடு, வாகனங்களை வழிமறித்தன. இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் பீதி அடைந்தனர். மேலும் அருகே தேயிலை தோட்டத்தில் பணிபுரிந்த தொழிலாளர்கள் ஓட்டம் பிடித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த தேவாலா வனச்சரகர் சஞ்சீவ் தலைமையில், வனத்துறையினர், வேட்டை தடுப்பு காவலர்கள் காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர். மீண்டும் ஊருக்குள் நுழையாமல் இருக்க கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.