பலா பிஞ்சுகளை பறித்து சுவைக்கும் காட்டு யானைகள்
கோத்தகிரி பகுதியில் பலா பிஞ்சுகளை காட்டு யானைகள் பறித்து சுவைத்து வருகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.
கோத்தகிரி,
கோத்தகிரி பகுதியில் பலா பிஞ்சுகளை காட்டு யானைகள் பறித்து சுவைத்து வருகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.
பலா பிஞ்சுகள்
கோத்தகிரி அருகே குஞ்சப்பனை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான பலா மரங்கள் உள்ளன. கோடை சீசன் தொடங்க உள்ள நிலையில், இந்த பலா மரங்களில் தற்போது சீசன் காரணமாக பலா பிஞ்சுகள் காய்க்க தொடங்கி உள்ளன. சீசன் சமயத்தில் காய்த்து குலுங்கும் பலா பழங்களை உண்பதற்காக சமவெளி பகுதிகளில் இருந்து ஆண்டுதோறும் காட்டு யானைகள் இப்பகுதிக்கு வந்து முகாமிட்டு வருகின்றன.
ஆனால், கடந்த ஆண்டு பலா பழங்களை உண்ண வந்த காட்டு யானைகள் வழக்கம் போல் சமவெளிக்கு திரும்பிச் செல்லாமல், இதே பகுதியில் முகாமிட்டு சுற்றி வந்த வண்ணம் உள்ளன. இவ்வாறு முகாமிட்டுள்ள காட்டு யானைகள் சாலையோரங்களில் உள்ள பலா மரங்களில் உள்ள பலா பிஞ்சுகளை உண்பதற்காக கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் அடிக்கடி உலா வருகின்றன.
வாகன ஓட்டிகள் அறிவுரை
இந்தநிலையில் நேற்று குஞ்சப்பனை அருகே செம்மனாரை கிராம பகுதியில் காட்டு யானை அங்குள்ள பலா மரத்தில் காய்த்திருந்த பிஞ்சுகளை, தனது காலை உயர்த்தி துதிக்கையால் பறித்து சுவைத்தது. அங்கிருந்த தொழிலாளர்கள் அந்த காட்சியை தங்களது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். அந்த காட்சி தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, பலாப்பழ சீசன் தொடங்கி உள்ளதால், குஞ்சப்பனை, மாமரம், முள்ளூர், கீழ்த்தட்டப்பள்ளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள், கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையோரங்களில் காட்டு யானைகள் தொடர்ந்து உலா வந்த வண்ணம் உள்ளதால், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும். வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை கவனமாக இயக்குவதுடன், யானைகளை பார்த்தால் அவற்றிற்கு தொல்லை அளிக்கவோ அல்லது அருகில் சென்று புகைப்படம் எடுக்கவோ முயற்சி செய்யக்கூடாது என்றனர்.