மலைச்சாலையில் காட்டாற்று வெள்ளம்


மலைச்சாலையில் காட்டாற்று வெள்ளம்
x
தினத்தந்தி 8 Sept 2022 1:45 AM IST (Updated: 8 Sept 2022 1:45 AM IST)
t-max-icont-min-icon

ஏற்காட்டில் நேற்று மாலை மீண்டும் கனமழை பெய்ததால், மலைச்சாலையை மூழ்கடித்தப்படி காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் மலைச்சாலை சீரமைக்கப்பட்டு போக்குவரத்து தொடங்கப்பட்ட 7 மணி நேரத்தில் மீண்டும் நிறுத்தப்பட்டு உள்ளது.

சேலம்

ஏற்காடு:-

ஏற்காட்டில் நேற்று மாலை மீண்டும் கனமழை பெய்ததால், மலைச்சாலையை மூழ்கடித்தப்படி காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் மலைச்சாலை சீரமைக்கப்பட்டு போக்குவரத்து தொடங்கப்பட்ட 7 மணி நேரத்தில் மீண்டும் நிறுத்தப்பட்டு உள்ளது.ஏற்காட்டில் நேற்று மாலை மீண்டும் கனமழை பெய்ததால், மலைச்சாலையை மூழ்கடித்தப்படி காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் மலைச்சாலை சீரமைக்கப்பட்டு போக்குவரத்து தொடங்கப்பட்ட 7 மணி நேரத்தில் மீண்டும் நிறுத்தப்பட்டு உள்ளது.

மண் சரிவு

சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக ஏற்காடு மலைப்பாதையில் கடந்த 5-ந் தேதி இரவு பெய்த கனமழையின் காரணமாக 50-க்கும் மேற்பட்ட இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. இதனால் நேற்று முன்தினம் ஏற்காட்டிற்கு போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

இதையடுத்து மாவட்ட கலெக்டா் கார்மேகம் உத்தரவின் பேரில், 50-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் இரவு-பகலாக சீரமைப்பு பணியில் முழு வீச்சில் ஈடுபட்டனர். சாலையில் குவிந்து கிடந்த கற்கள் மற்றும் மண்ணை நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் அப்புறப்படுத்தினர்.

மேலும் தடுப்புச்சுவர் சேதம் அடைந்த இடங்களில் தற்காலிகமாக கம்புகள் கட்டப்பட்டது. அதிகாரிகள் மற்றும் பணியாளர்களின் இந்த துரித முயற்சியால் நேற்று காலை முதல் ஏற்காடு பிரதான மலைப்பாதையில் போக்குவரத்து தொடங்கப்பட்டது.

தடுப்புச்சுவர் இடிந்தது

இந்த நிலையில் நேற்று மாலை 5½ மணி அளவில் ஏற்காட்டில் மீண்டும் பலத்த மழை பெய்ய தொடங்கியது. சுமார் 3 மணி நேரத்துக்கு மேல் நீடித்த இந்த கனமழையால் ஏற்காடு படகு இல்லம் அருகே உள்ள தமிழ்நாடு ஓட்டல் தடுப்புச்சுவர் இடிந்து விழுந்தது. இதில் 2 தள்ளுவண்டி கடைகள் சேதமடைந்தன. ஆனால் கடையில் இருந்த யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

இதைத்தொடர்ந்து தடுப்புச்சுவர் மேலும் இடியும் தருவாயில் இருப்பதாக ஓட்டல் நிர்வாகத்திற்கு பொதுமக்கள் தகவல் அளித்தனர்.

உடனடியாக அசம்பாவிதம் ஏதும் நடக்காமல் தவிர்க்க தாசில்தார் விஸ்வநாதன், வட்டார வளர்ச்சி அலுவலர் முருகன், போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் ராஜ்மோகன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு ஓட்டலின் தடுப்புச்சுவர் முழுமையாக இடித்து அகற்றப்பட்டது. இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மீண்டும் போக்குவரத்து நிறுத்தம்

இந்த தொடர் மழையால், மலைப்பாதைகளில் மழைநீர் காட்டாற்று வெள்ளமாக பெருக்கெடுத்து ஓட தொடங்கியது. ஒரு சில இடங்களில் சாலையை முற்றிலுமாக மூழ்கடித்தபடி வெள்ளம் பெருக்கெடுத்தது. இதன் காரணமாக சேலம்-ஏற்காடு பிரதான சாலையில் மீண்டும் இரவு 6:30 மணி முதல் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டது.

ஏற்காட்டில் பெய்த பலத்த மலையின் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. அதே நேரத்தில் விடிய, விடிய தொடர்ந்து மழை நீடித்தது. இதனால் ஏற்காடு மலைச்சாலையில் 40 அடி பாலத்தின் அருகே மரம் ஒன்று வேரோடு சாய்ந்து விழுந்தது. இதை அகற்றும் பணியிலும் நெடுஞ்சாலைத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டனர்.

ஏற்காடு மலைச்சாலையில் நேற்று முன்தினம் 50 இடங்களில் ஏற்பட்ட மண்சரிவு சீரமைக்கப்பட்டு நேற்று காலையில் போக்குவரத்து தொடங்கிய நிலையில், 7 மணி நேரத்தில் பலத்த மழை காரணமாக போக்குவரத்து மீண்டும் நிறுத்தப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story