வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது


வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது
x
தினத்தந்தி 17 Nov 2022 12:15 AM IST (Updated: 17 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

முதுமலை புலிகள் காப்பகத்தில் வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது.

நீலகிரி

கூடலூர்,

முதுமலை புலிகள் காப்பகத்தில் வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது.

வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் கூடலூர், பந்தலூர் தாலுகாக்களின் வனப்பகுதியில் காட்டு யானைகள், புலிகள், சிறுத்தைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. ஆண்டுதோறும் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இதைத்தொடர்ந்து ஒவ்வொரு காலகட்டத்தில் வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.

முதுமலை புலிகள் காப்பகத்தில் பருவமழைக்கு முன்பு மற்றும் பிந்தைய என 2 கட்டமாக வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் காப்பக கள இயக்குனர் வெங்கடேஷ் உத்தரவின் பேரில் தெப்பக்காடு, கார்குடி, நெலாக்கோட்டை, முதுமலை, மசினகுடி சரகத்தில் நேற்று காலை 8 மணிக்கு வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது. தொடர்ந்து மாலை 5 மணி வரை நடைபெற்றது.

150 பேர் ஈடுபட்டனர்

கார்குடி சரகத்தில் வனச்சரகர் விஜயன் தலைமையிலும், முதுமலையில் மனோஜ் தலைமையிலும், தெப்பக்காடு சரகத்தில் மனோகரன் தலைமையிலும், மசினகுடியில் பாலாஜி தலைமையில் வன ஊழியர்கள், தன்னார்வலர்கள் இணைந்து 150 பேர் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டனர். வனப்பகுதியில் ரோந்து சென்று வனவிலங்குகளை நேரில் காணுதல், எச்சம், கால் தடயங்களை அடையாளம் கண்டு வனவிலங்குகளின் விவரங்களை சேகரித்தல், தொலைநோக்கி உள்ளிட்ட கருவிகள் மூலம் வன ஊழியர்கள் கணக்கெடுத்தனர்.

இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது:-

பருவமழைக்கு முன்பு மற்றும் பின்பு வனவிலங்குகள் கணக்கெடுக்கப்பட்டு, அதன் விவரங்கள் தேசிய புலிகள் ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்படும். இதன் மூலம் வனவிலங்குகளின் எண்ணிக்கைகள் குறித்த விவரங்கள் பதிவு செய்து வைக்கப்படும். நடப்பாண்டில் பருவமழைக்கு பிந்தைய கணக்கெடுப்பு வருகிற 20-ந் தேதி வரை முதுமலை புலிகள் காப்பகத்தின் உள் மண்டல பகுதியில் நடக்கிறது. அதன் பின்னர் வெளி மண்டல பகுதியில் 2-வது கட்டமாக கணக்கெடுக்கும் பணி நடக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story