தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்படுமா?; விவசாயிகள் எதிர்பார்ப்பு
தண்ணீரை சேமித்து வைக்கும் வகையில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்படுமா? என விவசாயிகள் எதிர்பார்க்கிறார்கள்.
தண்ணீரை சேமித்து வைக்கும் வகையில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்படுமா? என விவசாயிகள் எதிர்பார்க்கிறார்கள்.
தென்பெண்ணை ஆறு
கர்நாடகா மாநிலம் சிக்கபள்ளாபூர் மாவட்டத்தில் உள்ள நந்தி மலையில் (நந்தி துர்க்கம்) தென்பெண்ணை ஆறாக பிறந்து தமிழகத்தில் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் வழியாக சென்று கடலூர் அருகே வங்காள விரிகுடாவில் கலக்கிறது.
இந்தத் தென்பெண்ணை ஆறு வழிநெடுக பல்லாயிரக்கணக்கான மக்களின் தாகத்தைத் தீர்த்து வருவது மட்டுமின்றி, விவசாயிகளின் முதுகெலும்பாகவும் பயன்பட்டு வருகிறது.
மழைக்காலங்களில் கரை புரண்டு ஓடும் தண்ணீரால் பல்லாயிரக்கணக்கான விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. அத்துடன் மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வருகிறது.
சாத்தனூர் அணை
அந்த வகையில் திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு பகுதியில் இருக்கும் சாத்தனூர் அணை மிக முக்கிய பங்கு வகித்து வருகிறது. இந்த அணையில் தேக்கி வைக்கப்படும் தண்ணீர் கோடைக்காலங்களில் அவ்வப்போது விவசாய பயன்பாட்டுக்கும், திருவண்ணாமலை பகுதிகளுக்குக் குடிநீர் தேவையை பூர்த்தி செய்தும் வருகிறது.
மேலும் வாழவச்சனூரில் அரசு வேளாண்மை மற்றும் ஆராய்ச்சி கல்லூரி செயல்பட்டு வருகிறது. இப்பகுதிகளில் விவசாயம் சார்ந்த தானியங்களின் ஆராய்ச்சிக்காக வேளாண் பண்ணை செயல்பட்டு வருவதால் இங்கு தண்ணீர் தேவை அதிகளவில் இருப்பதால் பெரும்பாலும் தென்பெண்ணை ஆற்றை நம்பியே ஆராய்ச்சி மையம் செயல்பட்டு வருகிறது.
மழைக்காலங்களில் இந்த ஆற்றில் தண்ணீர் அதிகளவில் செல்வதால் அதனை சேமிக்கும் அளவுக்கு இதுவரை எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. குறிப்பாக சாத்தனூர் அணையில் இருந்து வரும் தண்ணீர் இடதுபுற கால்வாய் வழியாக 40 ஏரிகளுக்கு செல்கிறது. மேலும் மீதி உள்ள தண்ணீர் தென்பெண்ணை ஆற்றின் வழியாகச் சென்று வீணாகக் கடலில் கலக்கிறது.
தடுப்பணைகள்
தண்ணீரை சேமிக்கும் வகையில் தென்பெண்ணை ஆற்றில் தடுப்பணைகள் கட்ட வேண்டும் என்பது இப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வருகிறது.
இதுகுறித்து வாழவச்சனூர் பகுதிையச் சேர்ந்த பழனி கூறுகையில், தென்பெண்ணை ஆறு எங்கள் பகுதிக்குக் கிடைத்த மிகப்பெரிய வரம். இந்த ஆற்றில் தண்ணீர் வரும்போது நாங்கள் அதிகளவில் மகிழ்ச்சியாக இருப்பது மட்டுமல்லாமல் தேவைப்படும்போது நெற்பயிர்கள் பயிரிடுவோம். மாற்றுப் பயிராக கரும்புகளையும் பயிரிடுவோம். தொடர்ந்து வறட்சியான காலங்களிலும் தென்பெண்ணை ஆற்றில் வரும் தண்ணீர் மூலம் கிணற்றின் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்த நிலையில் இருப்பதால் தொடர்ந்து நாங்கள் விவசாயம் செய்வதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
இப்பகுதிகளில் தடுப்பணை இல்லாத காரணத்தினால் மழைக்காலங்களில் வரும் தண்ணீர் எந்தஒரு பயன்பாடும் இல்லாமல் ஆற்றோடு சென்று கடலில் கலந்து மழைநீர் வீணாகி வருகிறது. எனவே இப்பகுதி விவசாயிகளாகிய நாங்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டி தண்ணீரை சேமிக்க வேண்டும் என்று மனுக்களாகவும், புகாராகவும் தெரிவித்தும் தற்போது வரை நடவடிக்கை இல்லை. இங்கு தடுப்பணை கட்டினால் விவசாயம் செழிப்பது மட்டுமல்லாமல் இப்பகுதி மென்மேலும் வளர்வதற்கு ஒரு வாய்ப்பாக இருக்கும் என்று தெரிவித்தார்.
தண்ணீர் பற்றாக்குறை
தென்பெண்ணை ஆற்று விவசாயி அய்யாசாமி கூறுகையில், இப்பகுதி விவசாயம் சார்ந்த மிக முக்கிய பகுதி என்பதால் நாங்கள் தொடர்ந்து விவசாயத்தைத் தவிர வேறு எந்தத் தொழிலும் செய்ய முடியாது. அப்படி இருக்கும்போது தண்ணீரை சேமிக்க தடுப்பணை மிக முக்கியமாகத் தேவைப்படுகிறது. கடந்த 2 ஆண்டுகளாக மழை நன்றாகப் பெய்து ஆற்றில் தண்ணீர் செல்வதினால் இப்பகுதிகளில் தண்ணீர் பற்றாக்குறை இல்லை. ஆனால் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு மழை இல்லாத காரணத்தினால் ஆறு முழுவதும் வறண்ட நிலையில் காணப்பட்டது.
இதனால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்ததால் விவசாயம் செய்ய முடியாத நிலையில் நாங்கள் இருந்து வந்தோம். இதுபோன்ற காலங்களில் மிகவும் சிரமப்படுவது மட்டுமல்லாமல் குடிநீருக்கு கூட தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனை போக்கும் வகையில் நிலத்தடி நீர்மட்டம் உயர்வது மட்டுமல்லாமல் விவசாயம் செழித்து வளர்வதற்கு வாழவச்சனூரை மையமாகக் கொண்டு தடுப்பணை கட்டி தண்ணீரை சேமித்து வைக்க வேண்டும், என்றார்.
குடிநீர் தட்டுப்பாடு
சதாகுப்பம் பகுதியைச் சேர்ந்த விவசாயி ராமமூர்த்தி கூறுகையில், நாங்கள் பெரும்பாலும் நெல், கரும்பு, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்களை அதிக அளவில் பயிரிட்டு பராமரித்து வருகிறோம், ஆனால் சில நேரங்களில் கடும் வறட்சியையும் எதிர்நோக்கி போராடக்கூடிய சூழல் நிலவி வருகிறது. ஆற்றின் கரையோர பகுதிகளில் இருந்தும் நாங்கள் சில நேரங்களில் வறட்சி காலத்தில் கடுமையான தண்ணீர் பற்றாக்குறையை எதிர் நோக்கக்கூடிய நிலையும் உள்ளது.
குறிப்பாக பல 100 கிலோ மீட்டரை தாண்டி வரும் இந்த ஆற்றின் குறுக்கே ஒன்று, இரண்டு இடங்களில் மட்டுமே தடுப்பணை உள்ளது. அதனால் எங்கள் பகுதிக்கு எந்த ஒரு பயன்பாடும் இல்லை. எங்கள் பகுதி பள்ளமாகக் காணப்படுவதால் தண்ணீர் தேங்குவது கிடையாது. தண்ணீர் சென்று விடுகிறது. இதனால் ஆற்றில் மழைக்காலங்களில் தண்ணீர் வந்தும் எந்த ஒரு பயன்பாடும் இல்லாமல் கடலில் கலந்து வீணாகிறது. எனவே சம்பந்தப்பட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு தண்ணீரை சேமிக்கும் வகையில் தென்பெண்ணை ஆற்றில் தடுப்பணை கட்டினால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைவது மட்டுமல்லாமல் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதற்கு வசதியாக இருக்கும்.
மேலும் குடிநீர் தட்டுப்பாடு முழுவதுமாக தீர்க்கப்படும். எங்கள் பகுதிகளில் அதிகளவில் கால்நடைகள் வளர்ப்பதால் சில நேரங்களில் அவற்றின் குடிநீர் தேவைக்காகக் கடும் சிரமப்படக்கூடிய சூழலும் இருந்து வருகிறது. எனவே, ஆற்றில் தண்ணீர் தேக்கி வைக்கப்படுவதால் கால்நடைகளுக்கு வசதியாக இருக்கும் என்றும் கூறினார்.
நீரை கணக்கிட முடியாது
இதுகுறித்து சம்பந்தப்பட்ட நீர்வளத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் கூறுகையில், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மாவட்டங்களில் மிக முக்கியமான ஆறாக தென்பெண்ணை ஆறு விளங்கி வருகிறது. இங்கு மத்திய நீர்வள துறை சார்பில் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகம் ஆற்றில் தண்ணீர் வரும் அளவை கணக்கீடு செய்து அவ்வப்போது அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கிறது.
மேலும் திருவண்ணாமலை மாவட்டத்தையும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தையும் இணைக்கும் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே மேம்பாலம் உள்ளது. எனவே, வாழவச்சனூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை மையமாகக் கொண்டு தென்பெண்ணை ஆற்றில் அணை கட்ட இயலாது. அவ்வாறு கட்டினால் தண்ணீர் செல்வதை துல்லியமாக கணக்கிட முடியாது. காரணம் இது பள்ளமான பகுதி. தண்ணீரும் தேங்கி நிற்காது. எனவே, இந்த பகுதியை தவிர்த்து 5 முதல் 10 கிலோமீட்டர் தூரத்தில் தான் அணை கட்ட வாய்ப்புள்ளது என்றனர்.
தொண்டாமனூர், மேலந்தலில் அணை கட்டலாம்
தென்பெண்ணை ஆற்றில் அணை கட்டுவதால் விவசாயம் வளர்ச்சி அடைவது மட்டுமல்லாமல் பல்வேறு பகுதியைச் சார்ந்த தொழிற்சாலைகளும் பயன் பெறும் என்பதைக் கருத்தில் கொண்டு தண்ணீரை சேமிப்பதினால் நிலத்தடி நீர் மட்டம் உயர்த்தப்படும் என்பது விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.
எனவே தென்பெண்ணை ஆற்றில் ெதாண்டாமனூர் அல்லது மேலந்தல் கிராம பகுதியில் தடுப்பணை கட்டி இப்பகுதி பொதுமக்களின் வாழ்வாதாரத்தை மேலும் வளமாக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.