அரியலூரில் பஸ்நிலையம் கட்டப்படுமா?-பயணிகள் எதிர்பார்ப்பு
அடிப்படை வசதிகளுடன் அரியலூரில் பஸ்நிலையம் கட்டப்படுமா? என பயணிகள் எதிர்பார்த்து உள்ளனர்.
பஸ்நிலையம்
அரியலூர் நகரின் மையப்பகுதியில் சிவபெருமாள் பஸ் நிலையம் உள்ளது. இங்கு நாள்தோறும் சென்னை, திருச்சி, தஞ்சாவூர் சேலம், கோவை, சிதம்பரம், நாகர்கோவில், பட்டுக்கோட்டை, விருத்தாச்சலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு நூற்றுக்கணக்கான பஸ்கள் இயக்கப்படுகிறது. இதேபோல் அரியலூர் மற்றும் அதன்சுற்றுவட்டார பகுதிகளுக்கு செல்ல நகர பஸ்கள் இயக்கப்படுகின்றன.
இந்த பஸ்நிலையத்தில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் சென்று வருகின்றனர். ஆனால் இந்த பஸ்நிலையத்தில் பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மட்டும் இதுவரை செய்து தரப்படவில்லை. இதனால் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் வெயில் மற்றும் மழையில் நனைந்து அவதியடைந்து வருகின்றன. கடந்த ஆண்டு நகராட்சி துறை அமைச்சர் நேரு, பஸ் நிலையத்தை பார்வையிட்டு விரைவில் புதிய கட்டிடங்கள் கட்டப்படும் என்று தெரிவித்தார். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதுகுறித்து பயணிகள் கூறியதாவது:-
2 முறை விரிவாக்கம்
பஸ் நிலையத்தில் கடை வைத்திருக்கும் சங்கர்:- அரியலூர் மார்க்கெட் தெருவில் கடந்த 1975-ம் ஆண்டு வாரச்சந்தையாக இருந்த இடத்தில் பஸ் நிலையம் சிறிய அளவில் கட்டப்பட்டது. அதன்பின்னர் 2 முறை விரிவாக்கம் செய்யப்பட்டன. இந்த பஸ் நிலைய கட்டிடம் மிகவும் பழுதடைந்தது. மேலும், பல்வேறு இடங்களில் இடிந்து விழுந்து கொண்டிருந்ததால் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பயணிகள் தங்குவதற்காக கட்டப்பட்டிருந்த 100 அடி நீள கட்டிடம் முழுமையாக இடிக்கப்பட்டன. மற்ற பகுதிகளும் இடிக்கப்பட்டு புதிய பஸ்நிலையம் கட்டப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் இதுவரை எந்த பணிகளும் தொடங்கப்படவில்லை.
பஸ் நிலையத்தில் 60 கடைகள் தான் நகராட்சி நிர்வாகம் ஏலம் விட்டுள்ளது. ஆனால் 100-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. அவைகளை முறைப்படுத்த வேண்டும். பஸ்நிலையத்தில் உள்ள கடைகளில் மழைநீர் கசிவு ஏற்பட்டு வருகிறது. இதனை அதிகாரிகள் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இருசக்கர வாகனங்கள்
மீன்சுருட்டியை சேர்ந்த கொளஞ்சியப்பன்:- அரியலூரில் இருந்து வெளியூர்களுக்கு செல்லும் பயணிகள் தங்களது இருசக்கர வாகனங்களை பஸ் நிலையத்தில் நிறுத்திவிட்டு செல்கின்றனர். ஆனால் மேற்கூரைகள் எதுவும் அமைக்கப்படாததால் வாகனங்கள் மழையிலும், வெயிலிலும் நிற்கின்றன. இதேபோல் பஸ்நிலையத்தில் பயணிகள் அமர இருக்கை வசதிகள் செய்து தரப்படவில்லை. இதன்காரணமாக அவர்கள் மரத்தடியில் அமர்ந்து வருகிறார்கள். பஸ்கள் முறையாக நிறுத்தப்படுவதில்லை.
கடும் துர்நாற்றம்
தேளூர் கிராமத்தை சேர்ந்த இளவரசி:- தற்போது உள்ள பஸ் நிலையத்தில் பயணிகள் தங்குவதற்கு எந்த வசதியும் இல்லை. தாய்மார்கள் குழந்தைகளுக்கு பால் கொடுக்கும் அறையின் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. கட்டண கழிவறைகள் பூட்டப்பட்டுள்ளன. இடிந்து விழும் நிலையில் உள்ள சமுதாயக்கூடம் திறந்தவெளி கழிப்பிடமாக மாறிவிட்டன. இதனால் பஸ் நிலையம் முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுகிறது. பொதுக்கழிப்பிடம் மிகவும் துர்நாற்றம் வீசி வருகிறது. தண்ணீர் வசதி இல்லை. இதனால் பொதுக்கழிப்பிடத்தை பயன்படுத்த பெரும்பாலானோர் தயக்கம் காட்டி வருகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இந்த கழிப்பிடத்தை தூய்மையாக வைத்திருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புதிய பஸ்நிலையம்
தஞ்சாவூரை சேர்ந்த நீலகண்டன்:- மாவட்ட தலைநகரான அரியலூரில் அனைத்து வசதிகளுடன் கூடிய பஸ் நிலையம் புதிதாக கட்ட வேண்டும். இங்கு ஏராளமான தொழிற்சாலைகள் உள்ளன. மருத்துவக்கல்லூரி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் பயணிகள் வந்து செல்வதற்கு தொலைதூர பஸ்கள் விட வேண்டும். மேலும் வெளியூர்களுக்கு செல்லும் பஸ்கள் எங்கு நிறுத்தப்பட்டு உள்ளன என்ற அறிவிப்பு பலகை வைக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.