சாலை விபத்துகளை தடுக்க தண்ணீர்பந்தலில் மேம்பாலம் அமைக்கப்படுமா?


சாலை விபத்துகளை தடுக்க தண்ணீர்பந்தலில் மேம்பாலம் அமைக்கப்படுமா?
x

சாலை விபத்துகளை தடுக்க தண்ணீர்பந்தலில் மேம்பாலம் அமைக்கப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

பெரம்பலூர்

உயிர்பலி வாங்கும் சாலை

சென்னை- திருச்சி இடையிலான தற்போதைய தேசிய நெடுஞ்சாலையான நான்கு வழிச்சாலை கடந்த 2000-ம் ஆண்டில் அமைக்கப்பட்டது ஆகும். தற்போது இந்த தேசிய நெடுஞ்சாலையில் வாகன போக்குவரத்து நிறைந்து காணப்படுகிறது. மேலும் இந்த தேசிய நெடுஞ்சாலை செல்லும் பகுதியான பெரம்பலூர் மாவட்டத்திலும் அதிக விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக பெரம்பலூர் அருகே தண்ணீர் பந்தலில் நான்கு ரோடு என்னும் பகுதியில் அதிக சாலை விபத்துகள் நடைபெற்று, உயிர்பலி வாங்கும் சாலையாக மாறியுள்ளது.

அந்த நெடுஞ்சாலையில் இருந்து கிழக்கு பகுதியில் பிரியும் சாலை பெரம்பலூர் அரசு தொழிற்பயிற்சி நிலையம், விவசாய நிலங்கள், கல்குவாரிகளுக்கு செல்கிறது. மேற்கு புறம் பிரியும் சாலை எளம்பலூர், புறவழிச்சாலையை இணைக்கும் பகுதிக்கு செல்கிறது. அருகே பள்ளி, கல்லூரிகள், வட்டார போக்குவரத்து அலுவலகம், மாவட்ட ஆயுதப்படை மைதானம் உள்ளிட்டவை உள்ளன. மேலும் அரியலூர் மாவட்டத்தில் உள்ள சிமெண்டு தொழிற்சாலைகளுக்கு இந்த சாலை வழியாக அதிகளவில் லாரிகள் சென்று வருகின்றன.

ஏற்றம், இறக்கமாக...

இதனால் அந்த பகுதியில் எப்போதும் போக்குவரத்து நிறைந்து காணப்படுவது வழக்கம். தண்ணீர் பந்தல் நான்கு ரோடு பகுதியில் நெடுஞ்சாலை அமைக்கும் போது அந்த பகுதியில் ரவுண்டானா அல்லது மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் அந்த பகுதியில் ேமம்பாலம், ரவுண்டானா என நெடுஞ்சாலைத்துறை எதுவும் அமைக்காமல் வடிவமைப்பு இல்லாமல் ஒரு புறமும் ஏற்றமாகவும், மற்றொரு புறம் இறக்கமாகவும் சாலையை அமைத்து விட்டது.

இதனால் கிராமங்களில் இருந்து வரும் வாகனங்கள் தண்ணீர்பந்தல் தேசிய நெடுஞ்சாலைக்குள் நுழையும் போது, அதிவேகத்தில் வரும் வாகனங்களுடன் மோதி விபத்தில் சிக்குவது அடிக்கடி நடைபெற்று, உயிர்கள் பறிபோகும் நிலை உள்ளது. எனவே இந்த பகுதியில் விபத்துகளை தடுக்க மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர். இது குறித்து பொதுமக்களின் மனநிலையை காணலாம்.

போக்குவரத்து நெருக்கடி

தண்ணீர்பந்தலை சேர்ந்த லாரி உரிமையாளர் சந்தோஷ்குமார்:- இந்த சாலையில் எப்போதும் போக்குவரத்து நிறைந்து காணப்படும். சாலையில் வாகனங்கள் திரும்பும்போது போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. இதனால் நெடுஞ்சாலையில் வரும் வாகனங்கள் விபத்துகளில் சிக்குகின்றன. கனரக வாகனங்கள், லாரிகள் திரும்புவதற்கு மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. எனவே இந்த பகுதியில் மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தீர்வு

லாரி டிரைவர் வெங்கடாஜலபதி:- வடிவமைப்பு இல்லாத இந்த சாலையில் லாரியை திருப்புவதற்குள் கடும் சிரமத்திற்கு உள்ளாக வேண்டியிருக்கிறது. சாலையில் மேம்பாலம் அமைத்து கொடுத்தால் பாலத்தின் கீழே பிரிவு சாலைகளுக்கு செல்லும் வாகனங்கள் சென்று விடும். இதனால் போக்குவரத்து நெருக்கடிக்கும், சாலை விபத்துகளுக்கும் ஒரு தீர்வு ஏற்படும்.

மேம்பாலம் அமைக்க வேண்டும்

பெரம்பலூர்-வடக்கு மாதவி ரோடு தில்லை நகரை சேர்ந்த அகமது இக்பால்:- தண்ணீர் பந்தல் பகுதியில் சாலை விபத்துகளை தடுக்க மேம்பாலம் அமைக்க கோரி பல்வேறு அரசியல் கட்சியினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் நெடுஞ்சாலைத்துறை கண்டுகொள்ளவில்லை. இதனால் அந்த பகுதியில் தற்போது அதிக சாலை விபத்துகள் நடைபெற்று வருகிறது. பண்டிகை காலங்களிலும், விடுமுறை நாட்களிலும் இந்த சாலையில் வாகனங்கள் அணிவகுத்து செல்லும். மேலும் அந்த சாலையோரத்தில் லாரி உள்ளிட்ட வாகனங்களை நிறுத்திவிட்டு செல்கின்றனர். இரவு நேரத்தில் நின்று கொண்டிருக்கும் வாகனங்கள் மீது, அந்த சாலை வழியாக வரும் வாகனங்கள் மோதி விபத்துக்கு உள்ளாகின்றன. மேலும் இருசக்கர வாகன ஓட்டிகள், பாதசாரிகள் இந்த பகுதியை கடக்க மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே தண்ணீர் பந்தல் பகுதியில் மேம்பாலத்தை விரைந்து அமைக்க நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story