விழல்கோட்டகத்தில் புதிய பாலம் கட்டப்படுமா?
கூத்தாநல்லூர் அருகே விழல்கோட்டகத்தில் புதிய பாலம் கட்டப்படுமா ? என கிராம மக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
கூத்தாநல்லூர்:
கூத்தாநல்லூர் அருகே விழல்கோட்டகத்தில் புதிய பாலம் கட்டப்படுமா ? என கிராம மக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
பழமையான பாலம்
கூத்தாநல்லூர் அருகே உள்ள விழல்கோட்டகம் கிராமத்திற்கும், மண்ணுக்கு முண்டான் கிராமத்திற்கும் இடையேயான பழமையான இணைப்பு பாலம், 30 ஆண்டுகளுக்கு முன்பு கோரையாற்றின் குறுக்கே சிறிய அளவில் கட்டப்பட்டது. இந்த பாலத்தை விழல்கோட்டகம், மண்ணுக்கு முண்டான், சித்தாம்பூர், வெள்ளக்குடி, லெட்சுமாங்குடி, மரக்கடை, அதங்குடி, வாழச்சேரி, கிளியனூர், தேவங்குடி, கற்கோவில், பொதக்குடி, கூத்தாநல்லூர், கொரடாச்சேரி போன்ற 50 -க்கும் மேற்பட்ட பகுதிகளை சேர்ந்த மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த பாலத்தை கடந்து தான் பள்ளி-கல்லூரிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் கூத்தாநல்லூர், திருவாரூர், மன்னார்குடி போன்ற ஊர்களுக்கு சென்று வருகின்றனர். இந்த நிலையில், இந்த பாலம் கடந்த சில ஆண்டுகளாக சேதமடைந்த நிலையில் உள்ளது. பாலத்தின் முகப்பில் உள்ள தடுப்பு சுவர் மற்றும் பாலத்தின் இரண்டு பக்கமும் உள்ள தடுப்பு கம்பிகள் சேதமடைந்த நிலையில் உள்ளது.
அகலமான புதிய பாலம்
மேலும், நடந்து செல்லக்கூடிய தரைத்தளமும் வழுவிழந்த நிலையில் உள்ளது. இதனால் பாலத்தை கடந்து சென்று வருவதில் சிரமம் உள்ளதாகவும், மேலும் கார், வேன், ஆட்டோ, பள்ளி வாகனங்கள் உள்ளிட்ட வாகனங்கள் சென்று வரும் வகையில் அகலமான சிமெண்டு பாலம் கட்டித்தர வேண்டும் என பல ஆண்டுகளாக அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும், அதனால் நடப்பாண்டில் சேதமடைந்த பாலத்தை அகற்றி விட்டு அதே இடத்தில் அகலமான புதிய பாலம் கட்டித் தர வேண்டும் என்று அப்பகுதி கிராம மக்கள் எதிர்பார்க்கின்றனர்.