புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்படுமா?


புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி  கட்டப்படுமா?
x
தினத்தந்தி 2 July 2023 12:15 AM IST (Updated: 2 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சேதமடைந்த தொட்டியை அகற்றிவிட்டு புதிய மேல்நிலை நீர்த்தேக்கதொட்டி கட்டப்படுமா? என அப்பகுதி பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

மயிலாடுதுறை

சேதமடைந்த தொட்டியை அகற்றிவிட்டு புதிய மேல்நிலை நீர்த்தேக்கதொட்டி கட்டப்படுமா? என அப்பகுதி பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

மேல்நிலை நீர்த்தேக்கதொட்டி

மயிலாடுதுறை ஒன்றியம் கடுவங்குடி ஊராட்சி பனையக்குடி கிராமம் மாரியம்மன் கோவில் தெருவில் மேல்நிலைநீர்த்தேக்க தொட்டி ஒன்று உள்ளது. இந்த தொட்டி அந்த பகுதியில் உள்ள சுமார் 400-க்கும் மேற்பட்ட குடும்பங்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வருகிறது. கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி தற்போது மிகவும் சேதமடைந்த நிலையில் உள்ளது.

பழமையான இந்த தொட்டியின் தூண்கள் மற்றும் அடிப்பகுதியில் உள்ள சிமெண்டு காரைகள் பெயர்ந்து விழுந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன. அந்த கம்பிகளும் துருப்பிடித்து நாளுக்கு நாள் சேதம் அடைந்து வருகிறது.

புதிதாக கட்டித்தர வேண்டும்

இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை அப்புறப்படுத்தி புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டி தர வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்களும், ஊராட்சி மன்றமும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறது.

இது தொடர்பாக பலமுறை ஊராட்சி மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு அனுப்பியும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று அப்பகுதி பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

பொதுமக்கள் நடமாடும் இடத்தில் அமைந்துள்ள இந்த சேதமடைந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இடிந்து விழுந்து அசம்பாவிதம் எதுவும் ஏற்படுவதற்கு முன்னர் அதனை அகற்றி விட்டு அதே இடத்தில் புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டித்தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.


Next Story