புதிய ஊராட்சி மன்ற கட்டிடம் கட்டப்படுமா?
வடரங்கத்தில் புதிய ஊராட்சி மன்ற கட்டிடம் கட்டப்படுமா? என அப்பகுதி பொதுமக்கள் எதிர்பார்த்துள்ள்னர்.
கொள்ளிடம்:
வடரங்கத்தில் புதிய ஊராட்சி மன்ற கட்டிடம் கட்டப்படுமா? என அப்பகுதி பொதுமக்கள் எதிர்பார்த்துள்ள்னர்.
ஊராட்சி மன்ற கட்டிடம்
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே வடரங்கம் கிராமத்தில் கடந்த 1996- ம் ஆண்டு ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் கட்டப்பட்டது. அந்த கட்டிடம் இடிந்து விழும் நிலையில் இருந்ததால் ஊராட்சி சார்பில் இடித்து அகற்றப்பட்டது.
ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் இடித்து அகற்றப்பட்டு 1 ஆண்டுக்கு மேல் ஆகியும் இதுவரை அலுவலக கட்டிடம் கட்ட எந்த ஒரு நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
நூலக கட்டிடத்தில்......
இதனால் வடரங்கம் ஊராட்சிக்கு சொந்தமான ஊராட்சி பதிவேடுகள், 100 நாள் திட்ட பணி பதிவேடுகள், ஊராட்சிக்கு சொந்தமான உபகரணங்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்டவைகளை ஊராட்சிக்கு சொந்தமான நூலக கட்டிடத்தில் ஒரு பகுதியில் தற்காலிகமாக வைத்துள்ளனர்.
மேலும் ஊராட்சி மன்ற கூட்டங்கள் நடத்துவதற்கும் போதிய இட வசதி இல்லாததால் உரிய காலங்களில் அடிப்படை தேவைகளை கருதி ஊராட்சியின் முக்கிய கூட்டம் கூட்டி தீர்மானம் நிறைவேற்ற முடியாத நிலையில் இருந்து வருகின்றனர்.
புதிய கட்டிடம்
எனவே வடரங்கம் ஊராட்சி மக்கள் நலன் கருதி ஊராட்சி பொருட்களை பாதுகாக்கவும் உறுப்பினர்களின் கூட்டங்கள் செம்மையாக நடைபெறும் வகையிலும் பழைய கட்டிடம் இடிக்கப்பட்ட இடத்தில் புதிதாக விரைவில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.