கொள்ளிடம் ஆற்றில் உப்பு நீர் தடுப்பணை கட்டப்படுமா ?


கொள்ளிடம் ஆற்றில் உப்பு நீர் தடுப்பணை கட்டப்படுமா ?
x
தினத்தந்தி 28 May 2023 12:15 AM IST (Updated: 28 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கொள்ளிடம் ஆற்றில் உப்புநீர் தடுப்பணை கட்டப்படுமா? என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.

மயிலாடுதுறை

கொள்ளிடம்:

கொள்ளிடம் ஆற்றில் உப்புநீர் தடுப்பணை கட்டப்படுமா? என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.

கொள்ளிடம் ஆறு

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி- சிதம்பரம் இடைப்பட்ட பகுதியில் கொள்ளிடம் ஆறு செல்கிறது. இந்த கொள்ளிடம் ஆறு டெல்டா மாவட்டங்களில் முக்கிய பாசன ஆறு மற்றும் வடிகாலாகவும் திகழ்ந்து வருகிறது. பழையாறு மீன்பிடி துறைமுகத்தை ஒட்டி வங்கக்கடலில் கொள்ளிடம் ஆறு சங்கமித்து வருகிறது.

இந்த கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் உள்ள கிராமங்களில் உள்ள ஊராட்சிகளில் உரிய இடங்களில் நிலத்தடி நீர் மின் மோட்டார் மூலம் மேல்நிலை நீர்த்தேக்கதொட்டிகளில் தேக்கி கிராமங்களுக்கு குடிநீர் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. மேலும் கொள்ளிடம் அருகே வடரங்கம் கிராமத்தில் குடிநீர் வடிகால் வாரியம் மூலம் கொள்ளிடம் ஆற்றிலிருந்து கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் தண்ணீர் எடுக்கப்பட்டு 100-க்கணக்கான கிராமங்களுக்கு வினியோகிக்கப்பட்டு வருகின்றன. ஆற்றின் கரையோர கிராமங்களை சேர்ந்த விவசாயிகளுக்கு நிலத்தடி நீர் ஒரு முக்கிய குடிநீர் ஆதாரமாக இருந்து வருகிறது.

நிலத்தடி நீர் பாதிப்பு

கொள்ளிடம் ஆற்றில் நல்ல நீர் சென்று கொண்டிருக்கும்போது கடல் நீர் ஆற்றுக்குள் புகுவது தடுக்கப்பட்டு வருவது வழக்கமாக இருந்து வருகிறது. கடந்த பல வருடங்களாக மழை பெய்வது குறைந்து வறட்சி நிலவியதன் காரணமாக கடல் நீர் துறைமுகத்திலிருந்து கொள்ளிடம் ஆற்றுக்குள் சுமார் 26 கி.மீ. தூரத்துக்கு உள்ளே புகுந்தது. தடுப்பணை இல்லாததால் உப்பு நீர் நீண்ட தூரம் வந்து நிலத்தடி நீரை பாதிக்கப்பட செய்கிறது.

இதுகுறித்து தமிழக காவிரி விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் விஸ்வநாதன் கூறுகையில் :-கடல் சீற்றம் மற்றும் அமாவாசை பவுர்ணமி அன்று கடல் நீர் அதிகரிப்பதால் கொள்ளிடம் ஆற்றில் நீண்ட தூரம் உப்புநீர் வந்து வடியும் நிலை ஏற்படுகிறது. கடந்த காலங்களை விட சென்ற வருடம் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் கொள்ளிடம் ஆற்றில் ஏழு முறை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உப்பு நீர் அடித்துச்செல்லப்பட்டது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் அதிகரித்து ஆற்றின் கரையோரம் உள்ள 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நீர் நல்ல நீராக மாறியது.

தடுப்பணை அமைக்க வேண்டும்

கடந்த மூன்று மாத காலமாக கொள்ளிடம் ஆற்றில் நல்ல நீர் படிப்படியாக படிப்படியாக குறைந்து உப்பு நீர் சுமார் 20 கிலோ மீட்டர் தூரத்துக்கு உள்ளே புகுந்து விட்டது. இதனால் நிலத்தடி நீர் உப்பு நீராக மாறும் சூழ்நிலை உருவாகியுள்ளது. எனவே கொள்ளிடம் ஆற்றில் உரிய இடத்தில் கதவனை கட்டி உப்பு நீர் உள்ளே புகுவதை தடுப்பது அவசியமான ஒன்றாக உள்ளது.

இதனை கொள்ளிடம் ஆற்றின் கரையோர கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர். ஆனால் இதுவரை தடுப்பணை கட்டுவதற்கு எந்த விதமான முகத்திர பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை. அரசின் சார்பில் தேர்வு செய்யப்பட்ட இடங்களில் கதவணை கட்ட ஆய்வு மேற்கொள்ளப்பட்டு கிடப்பில் கிடக்கின்றது. இது குறித்து மத்திய, மாநில அரசுகள் ஆய்வு செய்து கொள்ளிடம் ஆற்றின் கரையோர பகுதி மக்களின் குடிநீர் ஆதாரத்தை பாதுகாக்கும் வகையில் தடுப்பணை அமைக்க வேண்டும் என்றார்.


Next Story