அன்னமரசனார் ஆற்றின் குறுக்கே அகலமான பாலம் கட்டப்படுமா?
அன்னமரசனார் ஆற்றின் குறுக்கே அகலமான பாலம் கட்டப்படுமா?
வடபாதிமங்கலத்தில் அன்னமரசனார் ஆற்றின் குறுக்கே அகலமான பாலம் கட்டித்தர வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குறுகலான பாலம்
கூத்தாநல்லூர் அருகே வடபாதிமங்கலத்தில் இருந்து புனவாசல் வழியாக திருவாரூர் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை திருவாரூர், மன்னார்குடி, கூத்தாநல்லூர், நாகப்பட்டினம் போன்ற நகர பகுதிகளையும், வடபாதிமங்கலம், விக்ரபாண்டியம், கோட்டூர், சேந்தங்குடி, புத்தகரம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களை இணைக்கும் முக்கிய வழித்தடம். இந்த சாலையில் தினமும் அரசு மற்றும் தனியார் பஸ்கள், பள்ளி கல்லூரி வாகனங்கள், லாரி, டிராக்டர், கார், வேன், ஆட்டோ, மோட்டார் சைக்கிள்கள், கனரக வாகனங்கள் சென்று வருகின்றன.
இந்த சாலையில் புனவாசல் ஆண்டியப்ப அய்யனார் கோவில் அருகில் உள்ள அன்னமரசனார் ஆற்றின் குறுக்கே 80 ஆண்டுகளுக்கு முன்பு மிகவும் குறுகலான பாலம் கட்டப்பட்டது. தற்போது நாளுக்கு நாள் வாகனங்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், இந்த சாலையில் சென்று வரும் வாகனங்கள் எதிர் எதிரே வரும் போது ஒரே நேரத்தில் பாலத்தை கடந்து செல்ல முடியாமல் சிரமம் அடைந்து வருகின்றன.
அகலமான பாலம் கட்டித்தர வேண்டும்
இதனால் ஒரு வாகனம் எதிரே செல்லும் போது நேர் எதிரே வரக்கூடிய வாகனங்கள் பாலத்திற்கு முன்பாகவே நிற்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் அவசர பணிகளுக்காக சென்று வரக்கூடிய வாகனங்கள் உட்பட வாகன ஓட்டிகள் பலரும் சிரமம் அடைந்து வருகின்றனர். மேலும் பாலம் பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதால் அதன் பலமும் குறைந்தே காணப்படுகிறது. அதனால் பாலத்தை பயன்படுத்துவதிலும் வாகன ஓட்டிகள் அச்சம் அடைகின்றனர்.
எனவே, சேதமடைந்த குறுகலான பாலத்தை அகற்றி விட்டு அதே இடத்தில் அகலமான பாலம் கட்டித்தர வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.
வலங்கைமான்
வலங்கைமானை அடுத்த கொட்டையூர் தெற்கு தெருவில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இ்ந்த தெருவில் உள்ள வாய்க்கால் பாலம் குறுகிய நிலையிலும், இணைப்பு சாலை இல்லாமலும் இருந்து வருகிறது. இந்த பாலத்தை அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள், மாணவ-மாணவிகள், பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். பாலத்தின் இணைப்பு பகுதி குறுகலாக இருப்பதாலும், தடுப்பு சுவர் இல்லாததாலும் அந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி வாய்க்காலில் விழுந்து காயமடைந்து வருகின்றனர்.
தடுப்பு சுவர் கட்டித்தர வேண்டும்
இரவு நேரங்களில் மின்விளக்கு இல்லாததால் பாலம் வழியாக நடந்து செல்பவர்கள் வாய்க்காலில் விழும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குறுகிய பாலத்தை அகலப்படுத்தி விபத்து ஏற்படாமல் தடுக்க 2 பக்களும் தடுப்பு சுவர் கட்டித்தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.