ஆவின் பால் விலை உயர்வு மறுபரிசீலனை செய்யப்படுமா? வியாபாரி, பொதுமக்கள் எதிர்பார்ப்பு


ஆவின் பால் விலை உயர்வு மறுபரிசீலனை செய்யப்படுமா?  வியாபாரி, பொதுமக்கள் எதிர்பார்ப்பு
x
தினத்தந்தி 7 Nov 2022 12:15 AM IST (Updated: 7 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஆவின் பால் விலை உயர்வை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று தேனி மாவட்டத்தை சேர்ந்த வியாபாரி, பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

தேனி


வெண்மை புரட்சி

மனிதனின் அன்றாட சத்து தேவையை நிறைவு செய்வதில் பால் முக்கிய பங்கு வகிக்கிறது. உலக அளவில் அதிக பால் உற்பத்தி செய்யும் நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழ்கிறது. ஒட்டுமொத்த உலக பால் உற்பத்தியில் இந்தியா 21 சதவீத பங்களிப்பை வழங்குகிறது.

கடந்த 1950-60 காலகட்டங்களில் இந்தியாவில் இருந்த நிலை வேறு. மக்களுடைய அன்றாட பால் தேவையைக்கூட பூர்த்தி செய்ய முடியாத சூழல் அப்போது இருந்தது. அதன்பின்னர் வெண்மை புரட்சி நிகழ்த்தப்பட்டு, பால் உற்பத்தியில் தன்னிறைவு நிலையை நாம் எட்டியிருக்கிறோம்.

விலை உயர்வு

இந்தியா கடந்த ஆண்டு மட்டும் 21 கோடி டன் பால் உற்பத்தி செய்திருக்கிறது. தமிழகத்தை பொறுத்தவரை அரசு நிறுவனமான ஆவின், பாலையும், தயிர், மோர் உள்பட பால் சார்ந்த பொருட்களையும் விற்பனை செய்துவருகிறது. முதல்-அமைச்சராக பதவி ஏற்ற முதல் நாளிலேயே ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.3 குறைப்பு உள்பட 5 முக்கிய கோப்புகளில் மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்டார். இது, கொரோனா ஊரடங்கால் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டு இருந்த மக்களின் வயிற்றில் பாலை வார்த்தது.

இந்தநிலையில், ஆவின் நிறுவனம் 'பிரீமியம்' (ஆரஞ்சு) பாலை ஒரு லிட்டர் ரூ.48-ல் இருந்து ரூ.60 ஆகவும் (ரூ.12 உயர்வு), 'டீ மேட்' (சிவப்பு) பாலை ஒரு லிட்டர் ரூ.60-ல் இருந்து ரூ.76 ஆகவும் (ரூ.16 உயர்வு), 'கோல்ட்' (பிரவுன்) பாலை ஒரு லிட்டர் ரூ.47-ல் இருந்து ரூ.56 ஆகவும் (ரூ.9 உயர்வு) உயர்த்தியிருக்கிறது. பால் அட்டை வைத்திருப்பவர்கள் ஆரஞ்சு ரக பாலை, ஒரு லிட்டர் ரூ.46-க்கு பெற்றுக்கொள்ளலாம். அதே சமயத்தில் நீலம் மற்றும் பச்சைநிற பால் பாக்கெட் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை.

பொதுமக்கள் கருத்து

ஆவின் நிறுவனம் அறிவித்த பால் விலை உயர்வு உடனடியாக அமலுக்கு வந்திருக்கிறது. இந்த திடீர் விலை உயர்வு பொதுமக்கள், டீக்கடைக்காரர்கள், பால் முகவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

பால் விலை உயர்வு டீ, காபி விலையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தெரிகிறது. ஆவின் நிறுவனம் அறிவித்த பால் விலை உயர்வு ஏற்றுக்கொள்ளக்கூடியதா? என்பது குறித்து தேனி மாவட்டத்தை சேர்ந்த வியாபாரி, பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதன் விவரம் வருமாறு:-

பரமராஜ் (டீக்கடை உரிமையாளர், பாலூத்து):- ஏற்கனவே விலைவாசி, சமையல் கியாஸ் விலை, மின்கட்டண உயர்வு போன்ற பாதிப்புகளை சமாளிக்க முடியாமல் டீ, காபி விலை உயர்த்தப்பட்டது. இப்போது ஆவின் பால் விலை உயர்த்தப்பட்டதால் மீண்டும் டீ, காபி விலையை உயர்த்தும் நிலைமைக்கு டீக்கடைக்காரர்கள் தள்ளப்படுவார்கள். இவ்வாறு உயர்த்தினால் மக்கள் டீ, காபி குடிக்கும் பழக்கத்தை குறைத்துக் கொள்ளவும், அதனால் வியாபாரத்தில் பாதிப்பு ஏற்படவும் வாய்ப்புள்ளது. விலையை உயர்த்தாமல் இருந்தால் டீக்கடைக்காரர்கள் பாதிக்கப்படுவோம். எனவே, இந்த விலை உயர்வை அரசு திரும்பப் பெற வேண்டும்.

ஏற்றுக்கொள்ள முடியவில்லை

கிருத்திகா (இல்லத்தரசி, கம்பம்) :- பெண்களுக்கு டவுன் பஸ்களில் இலவச பயணம் கொடுத்தபோது மனதார வரவேற்றோம். எங்களை போன்ற இல்லத்தரசிகள் ஒரு மாதத்தில் ஓரிரு முறை தான் பஸ் பயணம் செய்வோம். ஆனால், தினமும் காலை, மாலை இரு நேரம் காபி, டீ குடிக்கும் பழக்கம் பெரும்பாலான மக்களிடம் உள்ளது. ஆவின் பால் மீது வைத்துள்ள நம்பிக்கை காரணமாக தனியார் பால் பாக்கெட்டை விடவும், ஆவின் பால் வாங்கி பயன்படுத்துவதையே அதிகம் விரும்புகிறேன். தற்போது திடீரென பால் விலை உயர்த்தப்பட்டு உள்ளது அதிர்ச்சியாக உள்ளது. ஒரு லிட்டருக்கு ரூ.12 உயர்வு என்பது எல்லாம் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. இந்த விலை உயர்வை குறைக்க வேண்டும்.

மீனா (ஆசிரியை, கம்பம்):- வணிக பயன்பாட்டுக்கான ஆவின் பால் விலை மட்டுமே தற்போது உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே விலைவாசி உயர்வு, சமையல் கியாஸ் விலை உயர்வு போன்ற காரணங்களால் கடைகளில் டீ, காபி விலை உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது பால் விலை உயர்வாலும் கடைகளில் டீ, காபி விலை மேலும் உயர்த்தப்பட வாய்ப்புள்ளது. அதுவும் மக்களை தான் பாதிக்கும். அதே வேகத்தில் மற்ற பால் விலையையும் உயர்த்தாமல் இருக்க வேண்டும்.

பால் பொருட்கள்

ஷீலா ( இல்லத்தரசி, கோகிலாபுரம்):- குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை தினமும் பயன்படுத்தும் பொருளாக பால் உள்ளது. ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு பால் தினமும் கொடுக்க வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர். அப்படி இருக்கையில், பால் விலையை உயர்த்தி இருப்பது ஏற்றுக் கொள்ள முடியாதது. நடுத்தர குடும்பங்களில் மாதம் ரூ.1,500 முதல் ரூ.3 ஆயிரம் வரை பாலுக்கு செலவு ஆகிறது. பால் விலை உயர்வால், அந்த செலவு மேலும் அதிகரிக்கும். அத்தியாவசிய பொருளான பால் விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும்.

பார்வதி (இல்லத்தரசி, பழனிசெட்டிபட்டி):- ஆவின் பால் விலை உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கவில்லை. திடீரென உயர்த்தியது அதிர்ச்சி அளிக்கிறது. வீடுகளில் பால்பொருட்கள் தயாரித்து சிறுதொழில்கள் நடத்தி வரும் மகளிர் சுயஉதவிக்குழுவினர், சிறு வணிகர்கள் இதனால் அதிகம் பாதிக்கப்படுவார்கள். ஏற்கனவே அவர்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை முன்னணி நிறுவனங்களின் உற்பத்தி பொருட்களுக்கு நிகரான விலையில் விற்பனை செய்வதால் போதிய வருவாய் கிடைக்காத சூழல் இருந்தது. தற்போது மேலும் அவர்கள் பாதிக்கப்படுவார்கள். இதேபோல் மறைமுகமாக மற்ற பால்பொருட்களின் விலையும் உயர்ந்து ஏழை, எளிய மக்களுக்கு தான் பாதிப்பை கொடுக்கும்.

மறுபரிசீலனை செய்ய வேண்டும்

ஜெயராணி (இல்லத்தரசி, உத்தமபாளையம்):- ஏற்கனவே பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வு. மின்கட்டணம் உயர்வு. சொத்து வரி, குடிநீர் வரி உயர்வு, விலைவாசி உயர்வு போன்றவற்றால் ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தற்போது பால் விலையும் உயர்த்தப்பட்டுள்ளதால் மக்கள் இன்னும் பாதிக்கப்படுவார்கள். தற்போதைய சூழலில் இந்த விலை உயர்வை தவிர்த்து இருக்கலாம். இதை மறுபரிசீலனை செய்து ரூ.12 உயர்வு என்பதை இன்னும் குறைக்கலாம். மேலும், இதே வேகத்தில் மற்ற பால் விலையையும் உயர்த்தாமல் இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story