வேளாண் அறிவியல் நிலையம் அமைக்கப்படுமா?


வேளாண் அறிவியல் நிலையம் அமைக்கப்படுமா?
x

தஞ்சை மாவட்டத்தில் வேளாண் அறிவியல் நிலையம் அமைக்கப்படுமா? என்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

தஞ்சாவூர்

தஞ்சை மாவட்டத்தில் ஏறத்தாழ 1 லட்சத்து 82 ஆயிரம் எக்டேரில் நெல், 20 ஆயிரம் எக்டேரில் உளுந்து, 900 எக்டேரில் மக்காச்சோளம், 9 ஆயிரம் எக்டேரில் நிலக்கடலை, 10 ஆயிரம் எக்டேரில் எள், 4 ஆயிரம் எக்டேரில் கரும்பு, 200 எக்டேரில் பருத்தி என அனைத்து பயிர்களும் சாகுபடி செய்யப்பட்டு வந்தாலும் நெல் மற்றும் உளுந்து பிரதான பயிராக உள்ளது. ஆனால், வேளாண்மை குறித்த சந்தேகங்களை வேளாண் விஞ்ஞானிகளிடம் கேட்டு அறிவதற்கு தஞ்சாவூர் மாவட்டத்தில் கிருஷி விக்கியன் கேந்திரா என்று சொல்லக்கூடிய வேளாண் அறிவியல் நிலையம் இல்லை.

வேளாண் அறிவியல் நிலையம்

மாவட்டத்தில் வேளாண் அறிவியல் நிலையம் இருந்தால் தான் பருவத்திற்கேற்ப சாகுபடி செய்யப்படும் பயிர்களின் ரகங்கள், களைகள், பூச்சிகள் மற்றும் நோய்கள் போன்ற அறிவியல் தொழில்நுட்பம் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும். மேலும், விவசாயிகளின் வயல்களில் பரிசோதனை திடல்கள் அமைத்து நிலங்களுக்கு ஏற்றார்போல் தொழில்நுட்பங்களை மதிப்பீடு செய்து திருத்தி அமைக்கவும், தற்போது வளர்ந்து வருகின்ற வேளாண் அறிவியல் மேம்பாடுகள் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கவும், கிராமப்புற இளைஞர்களுக்கு சுயதொழில் வேலை வாய்ப்புகளை பெருக்கவும் முடியும்.

துல்லிய பண்ணையம், தேசிய தோட்டக்கலை இயக்கம், அட்மா, நீர்வள, நிலவளத் திட்டம் போன்றவற்றை குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இது மிகவும் அவசியம் ஆகிறது.

அருகில் உள்ள திருவாரூர் மாவட்டத்தில் நீடாமங்கலம், புதுக்கோட்டையில் வம்பன், நாகப்பட்டினத்தில் சிக்கல் போன்ற இடங்களில் வேளாண் அறிவியல் நிலையங்கள் உள்ளன. தஞ்சை மாவட்ட விவசாயிகளுக்கு வேளாண் அறிவியல் நிலையம் சார்ந்த உதவி தேவைப்பட்டால் அருகில் உள்ள வேளாண் அறிவியல் மையங்களின் உதவியைத்தான் நாட வேண்டியுள்ளது.

விவசாயிகள் எதிர்பார்ப்பு

தஞ்சாவூர் மாவட்டத்தில் பட்டுக்கோட்டையில் வேளாண் ஆராய்ச்சி நிலையமும், வேப்பங்குளத்தில் தென்னை ஆராய்ச்சி நிலையம், ஈச்சங்கோட்டையில் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் போன்றவை இருந்தாலும் அவை பயிர் ஆராய்ச்சி குறித்த வேலைகள் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பாடம் கற்பித்தலையே பிரதானமாக செய்கிறது. இந்த நிலையங்களில் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் புதுப்புது தொழில்நுட்பங்கள், பயிற்சிகள் போன்றவற்றை வழங்குவதற்கு வாய்ப்புகள் சொற்ப அளவிலேயே உள்ளன. ஆகவே, அனைத்து பயிர்களிலும் அதிக பரப்பு மற்றும் உற்பத்தி கொண்ட தஞ்சாவூர் மாவட்டத்தில் வேளாண் அறிவியல் நிலையம் அமைக்க வேண்டும் என்பது விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.


Next Story