ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி மீண்டும் தொடங்கப்படுமா?


ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி மீண்டும் தொடங்கப்படுமா?
x
தினத்தந்தி 2 Aug 2023 12:15 AM IST (Updated: 2 Aug 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

திட்டச்சேரியில் பாதியில் நிறுத்தப்பட்டுள்ள ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி மீண்டும் தொடங்கப்படுமா? என கிராம மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

நாகப்பட்டினம்

திட்டச்சேரி:

திட்டச்சேரியில் பாதியில் நிறுத்தப்பட்டுள்ள ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி மீண்டும் தொடங்கப்படுமா? என கிராம மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

ஆழ்துளை கிணறு

திட்டச்சேரி பேரூராட்சிக்கு உட்பட்ட மரைக்கான்சாவடி, வெள்ளத்திடல் பகுதிகளில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இப்பகுதி பொதுமக்களின் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கும் விதமாக 15-வது குழு மானியத்தில் ரூ.11 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பில் 1,000 அடியில் ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர் வழங்க பேரூராட்சி மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பணி பாதியில் நிறுத்தம்

இதை தொடர்ந்து ஆட்டுக்குட்டி களத்தில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி தொடங்கியது.இந்த நிலையில் 720 அடி ஆழம் வரை மட்டுமே தோண்டப்பட்டு சாம்பல் மற்றும் உப்பு இருப்பதாக காரணம் கூறி பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டது. பணிகள் நிறுத்தப்பட்டு 6 மாதங்களை கடந்தும் இதுவரை அதற்கான அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படாமல் உள்ளது.

இதுகுறித்து பேரூராட்சி மன்ற கூட்டத்தில் உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியும், இதுவரை தீர்வு காணப்படாமல் உள்ளது. ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டுள்ள இடத்தின் அருகே 100 மீட்டர் தொலைவில் 680 அடி ஆழத்தில் குடிநீர் கிடைக்கும் நிலையில் 720 அடியை தாண்டியும் குடிநீர் கிடைக்கவில்லை என்பது வேதனை அளிப்பதாக கிராம மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

மீண்டும் தொடங்க வேண்டும்

இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடன் நடவடிக்கை மேற்கொண்டு பாதியில் நிறுத்தப்பட்ட ஆழ்துளை கிணறு அமைக்கும் பணிகளை மீண்டும் தொடங்கி விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.


Next Story