பூம்புகாரில் சித்திரை முழு நிலவு விழா மீண்டும் நடத்தப்படுமா?
வரலாற்று சிறப்பு மிக்க பூம்புகாாில் சித்திரை முழு நிலவு விழா மீண்டும் நடத்தப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
திருவெண்காடு:
வரலாற்று சிறப்பு மிக்க பூம்புகாாில் சித்திரை முழு நிலவு விழா மீண்டும் நடத்தப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
சிலப்பதிகாரம்
ஐம்பெரும் காப்பியங்களில் முதன்மையானதாக விளங்குவது சிலப்பதிகாரம். இந்த காப்பியத்தின் கோவலன், கண்ணகி பிறந்து வாழ்ந்த மண் என்ற பெருமையை பூம்புகார் பெற்றுள்ளது. பல நூற்றாண்டுகளுக்கு முன்பு பூம்புகார் வியாபாரத்தில் சிறந்து விளங்கியதும், இங்கு பிறந்த மகான் பட்டினத்தடிகள் கப்பல் மூலம் பல நாடுகளுக்கு சென்று வாணிபம் செய்ததும் இந்த காப்பியத்தின் வாயிலாக அறிய முடிகிறது. சிலப்பதிகாரம் தமிழர்களின் பழமையை பறைசாற்றுகிறது என்றால் மிகை ஆகாது. இந்த காப்பியத்தின் சான்றாக இன்றளவும் சாயாவனம் சாயாவனேஸ்வரர் கோவில், சதுக்க பூதங்கள், புத்த விகாரங்கள் காட்சியளிக்கின்றன.
கலைக்கூடம்
இதை வருங்கால சந்ததியினர் அறிய வசதியாக 1972-ம் ஆண்டு அப்போதைய முதல்- அமைச்சராக இருந்த கருணாநிதி சிலப்பதிகாரம் தோன்றிய மயிலாடுதுறை மாவட்டம், காவிரிப்பூம்பட்டினம் தற்போது பூம்புகார் பகுதியில் சிலப்பதிகார காப்பியத்தை பிரதிபலிக்கும் வகையில் சிலப்பதிகார கலைக்கூடத்தை நிறுவினார். நீண்ட நெடிய கடற்கரையையொட்டி சிலப்பதிகாரத்தில் கூறப்பட்ட இலஞ்சி மன்றம், பாவை மன்றம், நெடுங்கல் மன்றம் உள்ளிட்டவைகள் கட்டப்பட்டுள்ளது.
கலை நிகழ்ச்சிகள்
பண்டைய பூம்புகார் நகர வடிவமைப்பு இந்த சிலப்பதிகார கலைக்கூடத்தின் உட்பகுதியில் சிற்பங்களாக வடிவமைத்து வைக்கப்பட்டு உள்ளது. மேலும் இங்கு இளங்கோவடிகள், கோவலன், கண்ணகி, மாதவி ஆகியோரின் சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. இத்தகைய பூம்புகாரில் ஆண்டு தோறும் சித்திரை மாத பவுர்ணமி அன்று சித்திரை முழு நிலவு விழா என்ற பெயரில் 2 நாட்கள் விழா நடைபெறும்.
விழாவின் போது பட்டிமன்றம், வழக்காடு மன்றம், பரதநாட்டியம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் தமிழர்களின் கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் நடைபெறும். ஆனால் காலப்போக்கில் இந்த விழா ஒரு நாள் விழாவாக நடத்தப்பட்டது. சுமார் 10 ஆண்டுகளாக சித்திரை முழுநிலவு விழா முற்றிலும் நடத்தப்படவில்லை. இதனால் மிகுந்த ஏமாற்றம் அடைந்து உள்ளதாக பூம்புகார் பகுதி மக்கள் மற்றும் தமிழறிஞர்கள் கூறினர்.
வேதனை
இது குறித்து காவிரி பூம்பட்டினம் ஊராட்சி தலைவர் சசிகுமார் கூறியதாவது:-
பூம்புகாரில் கலைக்கூடம் அமைக்கப்பட்டதில் இருந்து ஆண்டுதோறும் சித்திரை முழு நிலவு விழா நடைபெற்றது. இதில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி, நாவலர் நெடுஞ்செழியன், ஆர். எம். வீரப்பன், காளிமுத்து, உள்ளிட்ட முக்கிய தலைவர்களும், கவியரசர் கண்ணதாசன், இசை அமைப்பாளர் எம். எஸ். விஸ்வநாதன் உள்ளிட்ட கலைஞர்களும் பங்கேற்றனர். கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் சித்திரை முழு நிலவு விழா நிறுத்தப்பட்டு விட்டது. இந்த விழா நடைபெறாமல் இருப்பதால் பூம்புகார் பகுதி மக்கள் வேதனையில் ஆழ்ந்துள்ளனர்.
மே 5-ந் தேதி
இந்த விழாவின் போது குடும்பத்தோடு பங்கேற்று கடற்கரையில் நிலா சோறு சாப்பிடும் வழக்கமும் உண்டு. பூம்புகாரை பெருமைப்படுத்தும் விதமாக பூம்புகார் சுற்றுலா தலத்தை மேம்படுத்த ரூ. 23 கோடியை
தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் ஒதுக்கீடு செய்துள்ளார். எனவே இந்த ஆண்டு சித்திர பவுர்ணமி தினமான மே 5-ந் தேதி(வெள்ளிக்கிழமை) சித்திரை முழு நிலவு விழாவை தமிழக அரசு பூம்புகாரில் நடத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.