நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படுமா?


நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படுமா?
x
தினத்தந்தி 20 Jan 2023 12:15 AM IST (Updated: 20 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சீர்காழி பகுதியில் சம்பா அறுவடை பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படுமா? என அப்பகுதி விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.

மயிலாடுதுறை

சீர்காழி:

சீர்காழி பகுதியில் சம்பா அறுவடை பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படுமா? என அப்பகுதி விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.

சம்பா சாகுபடி

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகாவிற்குட்பட்ட சீர்காழி, கொள்ளிடம், வைத்தீஸ்வரன் கோவில், திருவெண்காடு, அகணி, கொண்டல் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் சம்பா சாகுபடி செய்துள்ளனர்.

இந்த நிலையில் கடந்த மாதத்தில் (டிசம்பர்) சீர்காழி பகுதியில் வரலாறு காணாத அளவில் பெய்த மழையால் கடற்கரையோரம் உள்ள பல்வேறு கிராமங்களில் சாகுபடி செய்யப்பட்ட சம்பா நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டது.

நேரடி நெல்கொள்முதல் நிலையம்

இதையடுத்து மீதமுள்ள சம்பா நெற்பயிர்களுக்கு உரம், பூச்சி மருந்து தெளித்து விவசாயிகள் காப்பாற்றினர். இதை தொடர்ந்து கடந்த ஒரு வாரமாக சம்பா அறுவடை பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த ஆண்டு குறித்த காலத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறந்து நெல்லை கொள்முதல் செய்யவில்லை. இதனால் சீர்காழி பகுதியில் உள்ள அனைத்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலும் ஏராளமான நெல் மூட்டைகளை விவசாயிகள் அடுக்கி வைத்து இரவு, பகலாக பாதுகாத்து வருகின்றனர்.

ஈரப்பதம் அதிகரிப்பு

இதுகுறித்து கொண்டல் கிராமத்தை சேர்ந்த விவசாயி கல்யாணம் கூறுகையில்:- தமிழக அரசு ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகைக்கு முன்பாக சம்பா நெல்லை கொள்முதல் செய்வதற்கு கொள்முதல் நிலையங்கள் திறப்பது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு இதுவரை நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்காததால் விவசாயிகள் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக அறுவடை செய்த சம்பா நெல்லை நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு வந்து அடுக்கி வைத்துள்ளோம்.

தற்பொழுது பனிக்காலமாக இருப்பதால் நெல்லின் ஈரப்பதம் அதிகரித்து வருகிறது. இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே அரசு உடனடியாக நேரடி கொள்முதல் நிலையங்களை திறந்து நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும்.

அறுவடை பாதிப்பு

சீர்காழி அருகே மகாராஜபுரத்தை சேர்ந்த விவசாயி சீனிவாசன் கூறுகையில், இந்த ஆண்டு சீர்காழி பகுதியில் சம்பா சாகுபடி மழையாலும், கடல் நீர் புகுந்ததாலும் கடுமையாக பாதிக்கப்பட்டது. இன்னும் அரசு நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்காததால் அறுவடை செய்யப்பட்ட நெல்லை தனியார் வியாபாரிகளிடம் குறைந்த விலைக்கு விற்பனை வேண்டிய கட்டாயத்திற்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.

போதிய காலி சாக்குகள் (கோணிப்பை) இல்லாததால் விவசாயிகள் அறுவடை செய்ய முடியாமல் நேரடி கொள்முதல் நிலையங்கள் திறப்புக்காக காத்துக் கிடக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே விவசாயிகளின் நலன் கருதி நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை உடனடியாக திறக்க வேண்டும். சீர்காழி தாலுகாவில் விடுபட்ட 17-க்கும் மேற்பட்ட வருவாய் கிராமங்களுக்கு பயிர் காப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டும் என்றனர்.


Next Story