தா.பழூரில் அரசு கலை-அறிவியல் கல்லூரி அமைக்கப்படுமா?


தா.பழூரில் அரசு கலை-அறிவியல் கல்லூரி அமைக்கப்படுமா?
x

தா.பழூரில் அரசு கலை-அறிவியல் கல்லூரி அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அரியலூர்

தா.பழூர்:

பயணத்தால் மிகுந்த சிரமம்

அரியலூர் மாவட்டம், தா.பழூர் வட்டாரத்தில் தா.பழூர், காரைக்குறிச்சி, ஸ்ரீபுரந்தான், விக்கிரமங்கலம், சுத்தமல்லி, உதயநத்தம், கோடாலிகருப்பூர் ஆகிய 7 ஊர்களில் மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளில் சுமார் ஆயிரத்து 500 மாணவ, மாணவிகள் ஒவ்வொரு ஆண்டும் படித்து முடித்து, மேற்படிப்புக்கு தயாராகின்றனர். இவர்களில் மருத்துவம், பொறியியல் மற்றும் தொழிற்கல்வி படிப்புகளுக்கு சென்றவர்கள் போக மீதமுள்ளவர்கள் ஜெயங்கொண்டம், அரியலூர், கும்பகோணம் ஆகிய நகரங்களில் இயங்கும் அரசு கலை அறிவியல் கல்லூரிகளிலும், அரியலூர் மாவட்டத்தில் உள்ள பிற தனியார் கல்லூரிகளிலும் படித்து வருகின்றனர்.

இவர்களில் கும்பகோணம், ஜெயங்கொண்டம், அரியலூர் ஆகிய பகுதிகளில் உள்ள கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள் மிகுந்த சிரமத்துடன் பஸ்களில் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். தினமும் கல்லூரிக்கு செல்லும்போது போதிய பஸ் வசதி இல்லாததால் படிக்கட்டுகளில் தொங்கிக்கொண்டு சென்று வரும் நிலை உள்ளது. கல்லூரி மாணவ, மாணவிகள் சென்று வரும் வகையில் போக்குவரத்து துறை சார்பில் கூடுதல் பஸ்கள் இயக்கப்படும்போதும், அவை போதுமானதாக இல்லை. கல்லூரி நாட்களில் அனைத்து பஸ்களுமே நிரம்பி வழிகின்றன.

அரசு கல்லூரி

இதனால் அதிக அளவு கிராமங்கள் சூழ்ந்த பகுதியாகவும், விவசாயம் சார்ந்த தொழில்கள் நடைபெறும் பகுதியாகவும் விளங்கும் தா.பழூர் வட்டார மாணவ, மாணவிகள் கல்லூரிக்கு செல்வதை மிகுந்த சிரமமாக எண்ணக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதனை தவிர்க்க தா.பழூரில் அரசு கல்லூரி அமைக்க வேண்டும் என்பதே மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களின் எதிர்பார்ப்பாகவும், கோரிக்கையாகவும் உள்ளது. இது குறித்து அப்பகுதி மக்கள் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-

மாணவ-மாணவிகள் அதிகரிப்பு

சமூக ஆர்வலர் ஜெகன்:- சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு பிளஸ்-2 தேர்ச்சி பெற்று கல்லூரி செல்லும் மாணவ, மாணவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருக்கும். இப்போதெல்லாம் மாணவ, மாணவிகளின் தேர்ச்சி விகிதம் அதிகமாக இருப்பதுடன், நல்ல மதிப்பெண்கள் பெறும் சூழ்நிலையும் அதிகரித்துள்ளது. இதனால் அதிக அளவில் மாணவ, மாணவிகள் கல்லூரி படிப்பிற்கு தயாராகி விடுகின்றனர். எனவே கிராமப்புற மாணவர்கள் பயனடையும் வகையில் தா.பழூரில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைப்பது மிகவும் தேவையான ஒன்று.

நிரந்தர தீர்வு தேவை

இடங்கண்ணி கிராமத்தை சேர்ந்த ஆனந்தன்:- தா.பழூரில் கல்லூரிகள் எதுவும் இல்லாததால் வெளியூர்களில் படிக்கும் மாணவ, மாணவிகள் கால் கடுக்க பஸ்களுக்கு காத்துக் கொண்டு இருப்பதும், இங்கிருந்து கும்பகோணம், அரியலூர், ஜெயங்கொண்டம் போன்ற பகுதிகளுக்கு சென்று படித்து வருவதற்குள் பஸ் பயணத்தில் அவர்களுக்கு நேரும் சங்கடங்களுக்கும் ஒரு நிரந்தரமான தீர்வு தேவை. நாடு தற்போது பல்வேறு வகைகளில் வளர்ச்சி அடைந்து வருகிறது. எனவே இப்போதுள்ள மாணவ, மாணவிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு, வட்டார தலைநகராக விளங்கும் தா.பழூர் பகுதியில் நிச்சயமாக அரசு கல்லூரி அமைக்க வேண்டும். இதன் மூலம் பெண் பிள்ளைகளை பெற்றவர்களுக்கு பெரிய நிம்மதி ஏற்படும்.

கடுமையான மன உளைச்சல்

கல்லூரி மாணவி கிரிஜா:- தினமும் காலையில் கல்லூரிக்கு செல்ல 7 மணிக்கு முன்பாகவே கிளம்ப வேண்டி இருக்கிறது.

இதனால் காலை உணவு எடுத்துக் கொள்வதில் சிக்கல் ஏற்படுகிறது. எவ்வளவு விரைவாக காலையில் புறப்பட்டாலும், பஸ் பயணம் நிச்சயமாக சிரமம் இல்லாமல் இருப்பதில்லை. கல்லூரிக்கு சென்று திரும்புவதற்குள் கடுமையான மன உளைச்சல் ஏற்படுகிறது. பயண நேரம் போக மீதமுள்ள நேரங்களில் படிப்பதற்கு நேரம் செலவிட முடிவதில்லை. கல்லூரிக்கு சென்று வந்தால் பயணக் களைப்பு நீங்க ஓய்வெடுக்க வேண்டிய நிலை தான் ஏற்படுகிறது.

முந்தைய காலங்களில் தா.பழூர் பகுதியில் இருந்து கல்லூரிகளுக்கு செல்பவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம் என்றும், ஆனால் இப்போதெல்லாம் ஆயிரத்துக்கும் அதிகமான மாணவ, மாணவிகள் தினமும் பல்வேறு ஊர்களுக்கு கல்லூரிகளுக்கு சென்று படித்து வருகிறார்கள் என்றும் பெரியவர்கள் சொல்வதை கேட்க முடிகிறது.

எனவே இனி வரக்கூடிய காலங்களில் தா.பழூர் பகுதியில் படிக்கும் மாணவ, மாணவிகள் இங்கேயே படிக்கும் வகையில் கலை அறிவியல் கல்லூரி ஒன்றை அரசு ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


Next Story