களக்காடு அரசு மருத்துவமனை தரம் உயர்த்தப்படுமா?பொதுமக்கள் எதிர்பார்ப்பு
ஒரு டாக்டர் மட்டுமே பணிபுரிவதால் நோயாளிகள் காத்திருக்கும் நிலையில் உள்ள களக்காடு அரசு மருத்துவமனை தரம் உயர்த்தப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்ப்பு உள்ளனர்.
நெல்லை மாவட்டம் களக்காடு பெல்ஜியம் பிரிடா மோனியர் அரசு மருத்துவமனை சுமார் 2½ ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. இந்த மருத்துவமனை 15.3.1971-ல் பெல்ஜியம் நாட்டினரால் கட்டப்பட்டு சுமார் 3½ ஆண்டுகள் அதனை பராமரித்து களக்காடு மக்களுக்கு மருத்துவ சேவை செயலாற்றி வந்த நிலையில் 10.10.1974 அன்று தமிழக அரசிடம் ஒப்படைக்கப்பட்டது.
அதே 30 படுக்கை வசதிகளுடன் மருத்துவமனை இயங்கியது. நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் கட்டுப்பாட்டில் இந்த மருத்துவமனை தற்போது இயங்கி வருகிறது.
தினசரி 300 பேருக்கு சிகிச்சை
களக்காடு மற்றும் சுற்றுவட்டாரத்தில் பல ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். இந்த மருத்துவமனையில் இருந்து 15 கி.மீ. சுற்றளவிற்கு வேறு அரசு மருத்துவமனைகள் கிடையாது. முன்பு 1,000-க்கும் மேற்பட்ட வெளிநோயாளிகள் இங்கு வந்து சென்றனர். 2 பெண் மருத்துவர்கள் 24 மணி நேரமும் அங்குள்ள விடுதியில் தங்கி இருந்து மகப்பேறு மற்றும் அவசர கால சிகிச்சை அளித்து வந்தனர்.
மேலும் சுற்றுப்புற கிராமங்களுக்கு ஜீப்களில் சென்று சிகிச்சை அளித்து வந்தனர். இது பொதுமக்களுக்கு பெரிதும் பயனுள்ளதாக இருந்து வந்தது. தற்போது தினசரி 250 முதல் 300 பேர் வரை சிகிச்சை பெற்று வருகின்றனர். 15 முதல் 20 ேபர் உள்நோயாளிகளாகவும் சிகிச்சை பெறுகிறார்கள்.
தற்போது ஒரு டாக்டர் மட்டுமே பணிபுரிந்து வருகிறார். ஒரு டாக்டர் பணியிடம் கடந்த சில மாதங்களாக காலியாகவே உள்ளது. ஒரு டாக்டர் மட்டுமே பணியில் உள்ளதால் நோயாளிகள் சிகிச்சை பெற நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவலம் நிலவுகிறது. எனவே, போதிய டாக்டர் மற்றும் பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
ஆம்புலன்ஸ் சேவை
களக்காட்டிற்கு நாங்குநேரி, வள்ளியூர், நெல்லை போன்ற இடங்களில் இருந்து ஆம்புலன்ஸ் வரவழைக்கப்படுகிறது. எனவே, களக்காடு அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மருத்துவமனையை தரம் உயர்த்தி பல் மருத்துவ சிகிச்சை, கண் சிகிச்சை, காது, மூக்கு, தொண்டை சிகிச்சை, எலும்பு அறுவை சிகிச்சை பிரிவு, இருதய நோய், சர்க்கரை நோயாளிகள் பிரிவு, குழந்தைகள் நல சிகிச்சை பிரிவு மற்றும் சித்த மருத்துவ பிரிவுகளையும் தொடங்க வேண்டும் என்றும் மக்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.
இதுகுறித்து பொதுமக்கள் தெரிவித்த கருத்துக்களை பார்க்கலாம்.
காத்திருக்கும் நிலை
படலையார்குளத்தைச் சேர்ந்த கந்தன்:-
களக்காடு அரசு மருத்துவமனையில் போதிய டாக்டர்கள், பணியாளர்கள் நியமிக்க வேண்டும். நோயாளிகள் வெகு நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. மருந்து தட்டுப்பாடு இன்றி கிடைக்க வழி செய்ய வேண்டும். முழு நேரமும் அவசர சிகிச்சை, நோயாளிகளுக்கு பணியாற்றும் வகையில் டாக்டர்கள் நியமிக்க வேண்டும்.
இந்த மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் வசதி தேவைப்படுகிறது. விபத்து ஏற்பட்டால் 15 கிலோமீட்டர் தூரத்தில் இருந்து வர வேண்டிய நிலை உள்ளது. இதனால் உயிரிழப்பு அதிகம் நேரிடுகிறது. எனவே, ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்த வேண்டும்.
களக்காடு ஜே.ஜே. நகரை சேர்ந்த சிவசுப்பிரமணியன்:-
ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில், அனைத்து நோய்களுக்கும் சிகிச்சை அளிக்க வசதியாக, இந்த மருத்துவமனையை தரம் உயர்த்தி செயல்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும். நோயாளிகள் அமர்வதற்கு போதுமான இருக்கைகள் அமைக்க வேண்டும். மருத்துவமனையை சுத்தம் செய்ய கூடுதல் தூய்மை பணியாளர்களை பணி அமர்த்த வேண்டும். இரவு தங்கும் நோயாளிகளுக்கு பாதுகாப்பு இல்லை. காவலாளியை பணிக்கு அமர்த்த வேண்டும். மருத்துவமனை 24 மணி நேரமும் செயல்பட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தங்கும் விடுதி
களக்காடு கோவில்பத்தைச் சேர்ந்த ஆயிஷா லக்கி ராஜா:-
களக்காட்டில் ஏழை, எளிய பெண்கள் பிரசவ நேரங்களில் தனியார் மருத்துவமனைக்கு தான் செல்ல வேண்டிய நிலை உள்ளது. சுகப்பிரசவம் என்றாலும் குறைந்தபட்சம் ரூ.30 ஆயிரத்துக்கும் மேல் செலவாகிறது. இது பிரசவ வேதனையை விட கொடியதாக அமைகிறது.
இந்த நிலை மாற வேண்டும். களக்காடு அரசு மருத்துவமனையில் பெண்களுக்கு தேவையான அனைத்து சிகிச்சைகளும் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். போதுமான மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் நியமிக்க வேண்டும். செவிலியர்கள் தங்கும் விடுதி பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது. அதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நடவடிக்கை தேவை
களக்காட்டைச் சேர்ந்த தன்ராஜ்:-
பேரூராட்சியில் இருந்து நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டும் கூட களக்காடு அரசு மருத்துவமனையை இன்னும் மேம்படுத்தாத ஒரு நிலை காணப்படுகிறது. களக்காட்டை சுற்றி நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் மக்கள் வசித்து வருகின்றனர். ஏழை, எளிய மக்கள் நோய்வாய் படும் நிலையில் மருத்துவமனைக்கு வரும்போது அதற்கான சிகிச்சைக்கு மருத்துவர்களும், மருந்துகளும் இல்லாமல் திரும்பி விடுகின்றனர்.
ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் மேம்படுத்தினால் மக்கள் பெரிதும் பயனடைவார்கள். இதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.