சிவகாசி-ஆலங்குளம் இடையே அரசு பஸ் குறிப்பிட்ட நேரத்தில் இயக்கப்படுமா?
மாணவர்கள் பயன்பெறும் வகையில் சிவகாசி- ஆலங்குளம் தடத்தில் அரசு பஸ் குறிப்பிட்ட நேரத்தில் இயக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
சிவகாசி,
மாணவர்கள் பயன்பெறும் வகையில் சிவகாசி- ஆலங்குளம் தடத்தில் அரசு பஸ் குறிப்பிட்ட நேரத்தில் இயக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
அரசு பஸ்
சிவகாசி அருகே உள்ள ஆலங்குளத்தில் இருந்து கல்லமநாயக்கன்பட்டி, மாதாங்கோவில்பட்டி, உப்புபட்டி, எதிர்கோட்டை வழியாக சிவகாசிக்கு தினமும் காலை 6.45 மணிக்கும், 9 மணிக்கும் அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த பகுதியில் வசிக்கும் பள்ளி, கல்லூரி மாணவர்கள், கட்டிட தொழிலாளர்கள், பட்டாசு தொழிலாளர்கள் பலர் குறிப்பிட்ட நேரத்திற்குள் செல்ல முடியாத நிலை உள்ளது. காலை 6.45 மணிக்கு இந்த பஸ் ஆலங்குளத்தில் இருந்து புறப்படுவதால் போதிய பயணிகள் இல்லாமல் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் வகையில் இயக்கப்பட்டு வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
நேரத்தை மாற்ற வேண்டும்
அதற்கு பதில் இந்த பஸ்சை காலை 8 மணிக்கு இயக்க வேண்டும். அதேபோல் காலை 9 மணிக்கு இயக்கப்படும் பஸ்சால் எவ்வித பயனும் இல்லை. இந்த பஸ்சை காலை 8.30 மணிக்கு இயக்கினால் மாணவர்களும், தொழிலாளர்களும், பொதுமக்களும் அதிக அளவில் பயன்பெறுவார்கள்.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த வழித்தடத்தில் இயக்கப்படும் அரசு பஸ்களை மாணவர்கள், தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில் மாற்றி இயக்க வேண்டும் என்று மீனம்பட்டி பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் விநாயகமூர்த்தி, மாவட்ட நிர்வாகத்துக்கும், அரசு போக்குவரத்து கழகத்துக்கும் கோரிக்கை மனு அனுப்பி உள்ளார்.