வீட்டு வசதி வாரிய குடியிருப்புகள் திறக்கப்படுமா?
கூடலூரில் புதிதாக கட்டப்பட்ட வீட்டு வசதி வாரிய குடியிருப்புகள் திறக்கப்படுமா? என அரசு ஊழியர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
கூடலூர்,
கூடலூரில் புதிதாக கட்டப்பட்ட வீட்டு வசதி வாரிய குடியிருப்புகள் திறக்கப்படுமா? என அரசு ஊழியர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
அடுக்குமாடி குடியிருப்புகள்
கூடலூர் மார்தோமா நகரில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய பி, சி, டி பிரிவுகளில் 144 குடியிருப்புகள் கொண்ட அடுக்குமாடி கட்டிடங்கள் உள்ளது. இங்கு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
நாளடைவில் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு கட்டிடங்களில் பராமரிப்பு பணி நடைபெறவில்லை. இதனால் மழைக்காலத்தில் தண்ணீர் வழிந்து ஓடியது. இதே போல் கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. மேலும் பராமரிப்பு இல்லாததால் கட்டிடங்களின் சுவர்களில் விரிசல் ஏற்பட்டது. இதனால் குடியிருப்புகளில் இருந்த அரசு ஊழியர்களின் குடும்பத்தினர் அச்சத்துடன் வசித்து வந்தனர்.
புதிய கட்டிடங்கள்
இதனால் புதிய கட்டிடங்கள் கட்டித் தர வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால், நடவடிக்கை எடுக்கவில்லை. இதன் காரணமாக பெரும்பாலான குடும்பத்தினர் அடுக்குமாடி குடியிருப்புகளில் இருந்து வெளியேறி விட்டனர். தற்போது 40 குடும்பத்தினர் மட்டுமே வசித்து வருகின்றனர். இந்தநிலையில் கடந்த 2019-ம் ஆண்டு பயனற்ற நிலையில் இருந்த குடியிருப்பு கட்டிடங்களை வீட்டு வசதி வாரிய அதிகாரிகள் இடித்தனர்.
பின்னர் ரூ.14 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, அடுக்குமாடியுடன் கூடிய 30 குடியிருப்புகள் கட்டும் பணி தொடங்கப்பட்டது. பின்னர் ஊரடங்கு கட்டுப்பாடு உள்ளிட்ட காரணங்களால் பணிகளில் தொய்வு ஏற்பட்டது. பின்னர் கட்டுமான பணிகள் மும்முரமாக நடைபெற்று வந்தது. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பணி நிறைவு பெற்றது. ஆனால், இதுவரை அரசு ஊழியர் குடும்பத்தினருக்கு வீடுகள் ஒப்படைக்கப்படவில்லை.
தாமதம்
இதனால் குடியிருப்புகள் எப்போது திறக்கப்படும் என அரசு ஊழியர்கள் குடும்பத்தினர் எதிர்பார்த்து உள்ளனர். இதுகுறித்து வீட்டு வசதி வாரிய அலுவலகம் தரப்பில் விசாரித்த போது, புதிய குடியிருப்புகளுக்கு மின் இணைப்பு பெறுவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. இதனால் குடியிருப்புகளை உரியவர்களிடம் ஒப்படைப்பதில் தாமதம் ஏற்படுகிறது என்றனர்.