மழைநீர் தேங்குவதை தடுக்க இட்டேரி ரோடு உயர்த்தப்படுமா?-பொதுமக்கள் எதிர்பார்ப்பு
சேலம் ஏற்காடு மெயின் ரோட்டில் அஸ்தம்பட்டி மாரியம்மன் கோவில் எதிரில் உள்ள இட்டேரி ரோட்டை உயர்த்தி மழை நீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
14-வது வார்டு
சேலம் மாநகராட்சி அஸ்தம்பட்டி மண்டலம் 14-வது வார்டில் 16 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். இதில் 11 ஆயிரத்து 650 வாக்காளர்கள் உள்ளனர். மணக்காடு, இட்டேரி ரோடு, ஏற்காடு மெயின் ரோடு, பழனியப்பா நகர், ராஜமாணிக்கம் நகர், சுல்தான் லைன் அடுக்குமாடி குடியிருப்பு, குமாரசாமிப்பட்டி, வின்சென்ட், வெங்கடேசபுரம், நடேசன் காலனி, உடையசெட்டி காலனி, சங்கர் நகர், சங்கர் நகர் ஓடை, மக்கான் தெரு, செரிரோடு, ராஜா நகர் உள்ளிட்ட பகுதிகள் இந்த வார்டில் அடங்கி உள்ளன.
இந்த வார்டில் அரசு ஊழியர்கள் மட்டுமின்றி தொழில் அதிபர்கள் பலர் உள்ளனர். மேலும் சங்கர் நகர் பகுதியில் வடமாநிலத்தவர்கள் அதிகம் வசிக்கிறார்கள். அவர்கள் வெள்ளி கொலுசு விற்பனை கடைகள் உள்ளிட்ட பல்வேறு கடைகள் வைத்து நடத்தி வருகின்றனர்.
இந்த வார்டில் குமாரசாமிபட்டியில் தரம் உயர்த்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம், பொதுப்பணி, நெடுஞ்சாலை, வனத்துறை அலுவலகங்கள் உள்ளன. மேலும் வரலாற்று சிறப்பு வாய்ந்த தபால் அலுவலகம், வங்கிகள் உள்ளன. இந்த வார்டில் அஸ்தம்பட்டி போலீஸ் நிலையம் உள்ளது.
இந்த வார்டில் உள்ள குறைகள் பற்றி பொதுமக்கள் கூறிய கருத்துகள் வருமாறு:-
பொழுதுபோக்கு பூங்கா
சங்கர்நகரை சேர்ந்த ஷோபனா ஈசன் கார்த்திக்:- எங்களது வார்டில் பொழுதுபோக்கிற்கான இடம் என எதுவும் இல்லை. அதனை சிறுவர் விளையாட்டு உபகரணங்களுடன் கூடிய பொழுதுபோக்கு பூங்கா ஒன்று அமைக்க வேண்டும்.
சுப்பராயன் லே-அவுட்டில் வசிக்கும் கண்ணம்மாள்:-
எங்களது பகுதியில் தெருநாய் தொல்லைகள் அதிகம் உள்ளது. இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, தெருநாய் தொல்லைகளில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க வேண்டும். சுப்பராயன் லே-அவுட் பெரிய பகுதி. இதன் மெயின் ரோடு நீளமாக உள்ளது. இதனால் இரவு நேரங்களில் சாலையோரம் இருட்டு பகுதியில் நின்று கொண்டு சில மதுப்பிரியர்கள், மது அருந்துகின்றனர்.
மேலும் சமூக விரோத செயல்கள் நடப்பதாகவும் கூறப்படுகிறது. எனவே சமூக விரோத செயல்கள் நடைபெறாமல் தடுக்க சுப்பராயன் லே-அவுட் பகுதியில் இரவு நேரங்களில் போலீஸ் ரோந்து பணியில் ஈடுபட்டால் நன்றாக இருக்கும்.
தாழ்வான இட்டேரி ரோடு
இட்டேரி ரோட்டில் தையல் கடை நடத்தி வரும் சேகர்:-
ஏற்காடு மெயின் ரோடு அஸ்தம்பட்டி மாரியம்மன் கோவில் எதிரில் இட்டேரி ரோடு உள்ளது. இந்த பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இந்த நிலையில் மெயின் ரோடு மேடாகவும், இட்டேரி ரோடு மிகவும் தாழ்வாகவும் உள்ளது. இட்டேரி ரோட்டில் அமைக்கப்பட்டு உள்ள சாக்கடை கால்வாய் மேடாகவும், ரோடு பள்ளமாகவும் உள்ளது. இதனால் மழை காலங்களில் மழை நீர் இட்டேரி ரோடு முழுவதும் தேங்கி விடுகிறது
இதனால் மழை நீருடன், சாக்கடை கழிவு நீர் கலந்து வீடுகளுக்குள் புகுந்து விடும். மேலும் அதிகம் பேர் இந்த பகுதியில் வசிப்பதால் எப்போது பார்த்தாலும் மக்கள் நடமாட்டம் இருந்து கொண்டே இருக்கும். அதே போன்று மோட்டார் சைக்கிள், கார் உள்ளிட்ட வாகனங்களும் அடிக்கடி சென்ற வண்ணம் இருக்கும். இதனால் பல நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். எனவே தாழ்வாக உள்ள இட்டேரி ரோட்டை உயர்த்தி சற்று அகலப்படுத்தினால் மழை நீர் தேங்காமலும். போக்குவரத்து நெரிசல் ஏற்படாமலும் தடுக்க முடியும்.
தரமான சாலை
செரி ரோடு கிழக்கு தெருவை சேர்ந்த பாப்பாத்தி:-
மாநகராட்சி சார்பில் சாலைகள் போடப்படுகிறது. ஆனால் குறுகிய காலத்தில் பழுதாகி குண்டும், குழியுமாக மாறிவிடுகிறது. எனவே தரமான சாலை அமைக்க வேண்டும். இந்த தெரு பகுதியில் குப்பை தொட்டி இல்லை. குப்பை தொட்டி வைக்க வேண்டும்.
மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் தினமும் வந்து குப்பைகளை வாங்கி செல்கின்றனர். எனவே சுகாதார சீர்கேடு என்பது இல்லை. செரி ரோடு மெயின் ரோட்டில் குறிப்பிட்ட தூரம் சாக்கடை கால்வாய் மிகவும் பழுதாகி சாக்கடை கழிவு நீர் வெளியேறாமல் தேங்கி நிற்கின்றன. எனவே அந்த பகுதியில் சாக்கடை கால்வாயை சுத்தப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
இந்த வார்டை பொறுத்தவரை ஏற்காடு மெயின் ரோட்டில் அஸ்தம்பட்டி மாரியம்மன் கோவில் எதிரில் உள்ள இட்டேரி ரோட்டை உயர்த்தி மழை நீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பெரும்பாலான பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
என்ன சொல்கிறார் கவுன்சிலர்?
14-வது வார்டில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள், செயல்படுத்தி வரும் திட்டங்கள் பற்றி தி.மு.க. கவுன்சிலரும், மாநகராட்சி பணிக்குழு தலைவருமான சாந்தமூர்த்தி கூறியதாவது:-
வார்டு பகுதி மக்களை நேரில் சந்தித்து அவர்கள் வைக்கும் கோரிக்கைளை நிறைவேற்றி வருகிறேன். கவுன்சிலராக பதவி ஏற்றது முதல் இதுவரை வார்டு பகுதிகளில் மழைநீர் வடிகால், தார் சாலை, கழிப்பிட வசதி, குமாரசாமிப்பட்டி நகர்ப்புற சமுதாய சுகாதார நிலைய வளாகத்தில் ஆய்வக கட்டிடம் என ரூ.5 கோடிக்கு மேல் பணிகள் நடைபெற்று உள்ளன. தற்போது ரூ.1¼ கோடிக்கு மேல் அடிப்படை திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன.
வார்டு மக்களுக்கு 3 நாளைக்கு ஒரு முறை குடிநீர் வழங்கப்படுகிறது. மக்கான் தெருவில் வசிக்கும் மக்களுக்காக தனியாக கழிப்பிட கட்டிடம் கட்டப்பட்டு உள்ளன. குடிநீர் வசதியும் செய்து கொடுக்கப்பட்டு உள்ளது. முக்கிய பிரச்சினையாக அரசு கலைகல்லூரியில் இருந்து சங்கர் நகர், பெரமனூர், 4 ரோடு சாலையில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மேயர் ராமச்சந்திரனிடம் எடுத்துக்கூறி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
சீரங்கபாளையம் மெயின் ரோடு பகுதியில் சங்கர் நகர், ஓடை, ராம்நகர் ஓடை பகுதிகளில் அதிக ஆக்கிரமிப்புகள் உள்ளன. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றவும் கோரிக்கை வைத்து உள்ளேன். குப்பைகள் உடனுக்குடன் அகற்றப்படுகின்றன. நான் பணிக்குழு தலைவராக உள்ளதால், வார்டு பகுதியில் தரமான சாலைகள் அமைக்கப்படுகிறது. மேலும் வார்டு பகுதியில் முழுவதும் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. இதனால் திருடர்கள் நடமாட்டம் தற்போது இல்லை. மேலும் இட்டேரி ரோடு பகுதியில் தார் சாலை அமைக்கவும், ராஜா நகர் மக்களுக்கு குடிநீர் வசதி ஏற்படுத்தவும் மேயர் ராமச்சந்திரன், ஆணையாளர் கிறிஸ்துராஜ் ஆகியோரிடம் எடுத்துக்கூறி பணிகள் விரைவில் முடிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
வார்டு மக்களுக்கு வேண்டியவை:-
* பொழுதுபோக்கு சிறுவர் பூங்கா
* இட்டேரி ரோடு சீரமைப்பு.
* செரி ரோட்டில் சாக்கடை கால்வாயை தூர்வார வேண்டும்.
* தரமான சாலைகள்
* தெரு நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும்.
* சுப்பராயன் லே-அவுட் பகுதியில் மது அருந்துவதை தடுக்க வேண்டும்.