மனித-வனவிலங்கு மோதல்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?-பொதுமக்கள் எதிர்பார்ப்பு


மனித-வனவிலங்கு மோதல்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?-பொதுமக்கள் எதிர்பார்ப்பு
x
தினத்தந்தி 9 Oct 2022 12:15 AM IST (Updated: 9 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

நீலகிரி மாவட்டத்தில் மனித -வனவிலங்கு மோதல்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

நீலகிரி

கோத்தகிரி

நீலகிரி மாவட்டத்தில் மனித -வனவிலங்கு மோதல்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

வனவிலங்குகள் அதிகரிப்பு

நீலகிரி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிகளில் புலி, கரடி, காட்டெருமை, காட்டுப்பன்றி, மான் கடமான், சிறுத்தை, காட்டு யானை உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

வன விலங்குகள் அடிக்கடி மனிதர்களைத் தாக்குவதும், இதன் காரணமாக மனிதர்கள் காயமடைவதும், அவ்வப்போது உயிரிழப்புகள் ஏற்படுவதும் வழக்கமாகி வருகிறது. மனித - வனவிலங்கு மோதலைத் தடுக்க தமிழக அரசும், வனத்துறையினரும் நடவடிக்கை எடுப்பார்களா? என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ளது.

வழித்தடத்தில் கட்டிடங்கள்

ஓய்வு பெற்ற வனவர் பாலகிருஷ்ணன் கூறியதாவது:-

மனித -வன விலங்கு மோதல்களுக்கு முக்கியமான காரணமாக மனிதர்களே உள்ளனர். வனப்பகுதியையொட்டி தங்கும் விடுதிகள், சொகுசு பங்களாக்கள் கட்டுவது, விளைநிலங்களை அழித்து கட்டிடங்களை கட்டுவது போன்ற செயல்களால் வன விலங்குகளின் வாழ்விடங்கள் மற்றும் வனப்பரப்பு குறைந்து வருவதுடன் அவற்றின் வழித்தடமும் தடைபட்டு வருகிறது. எனவே நீலகிரி மாவட்ட நிர்வாகம் வனப்பகுதியையொட்டி விவசாய நிலங்களை அழித்து சொகுசு பங்களாக்கள் கட்டுவதற்கும், தனியார் தங்கும் விடுதிகள் கட்டுவதற்கு அனுமதி அளிப்பதை தவிர்த்து, ஏற்கனவே இந்த மாதிரியான பகுதிகளில் அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் அனைத்தையும் ஆய்வு செய்து அவற்றை முறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் வன விலங்குகள் வனப்பகுதியை ஒட்டியுள்ள பழங்குடியின கிராமங்களுக்குள் நுழையாமல் தடுக்க அகழி வெட்டி, திருகுகள்ளி செடிகளை வேலியாகப் பயன்படுத்தி பயிரிட்டால் யானைகள் உள்பட எந்த வனவிலங்குகளும் கிராமத்திற்குள் நுழையாமல் தடுக்க முடியும்.

உணவுப்பழக்கம் மாற்றம்

ஊட்டியைச் சேர்ந்த பறவைகள் புகைப்பட கலைஞர் மதிமாறன்:- மாவட்டத்தில் வன விலங்குகள் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளில் கணிசமாக அதிகரித்து வருவதால் மிருகக்காட்சி சாலைக்குச் சென்று வனவிலங்குகளை கண்டு களித்த காலம் மாறி தற்போது சாலைகளிலும் குடியிருப்புப் பகுதிகளிலும் தேயிலைத் தோட்டங்களிலும் சர்வ சாதாரணமாக வனவிலங்குகள் எவ்வித அச்சமுமின்றி உலா வருவதை காணமுடிகிறது. மேலும் வன விலங்குகளின் உணவு பழக்கத்தை மனிதர்களாகிய நாம் மாற்றியதன் காரணமாகவே வன விலங்குகளுக்கு தேவையான உணவு வனப் பகுதியிலேயே கிடைத்தாலும், நாம் அவற்றிற்கு உணவளித்தும், வீடுகளில் மீதமாகும் உணவுகள் மற்றும் பழ வகைகளை பொது குப்பைத் தொட்டியில் கொட்டி வந்ததன் காரணமாக அவற்றை உண்டு பழகிய வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிக்கு தொடர்ந்து படையெடுத்த வண்ணம் உள்ளன. எனவே வன விலங்குகளின் உணவுப் பழக்கம் மாறாமலிருக்க, வீடுகளில் சேகரமாகும் உணவு கழிவுகளை குப்பைத் தொட்டிகளில் போடாமல், வீடு தோறும் குப்பைகளை சேகரிக்க வரும் தூய்மைப் பணியாளர்களிடம் பொதுமக்கள் வழங்க வேண்டும்.

கோத்தகிரி வியாபாரிகள் சங்க செயலாளர் ஜே.பி.லியாகத் அலி:- வனவிலங்குகள் தற்போது பெருகி உள்ளதன் காரணமாக அவை உணவு மற்றும் தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிகள், தேயிலை தோட்டங்கள் மற்றும் விவசாய விளை நிலங்கள் உள்ளிட்ட பகுதியில் தொடர்ந்து நடமாடி வருவதுடன், அவை அதே பகுதிகளில் முகாமிட்டு வருவதால், வனவிலங்குகள் தங்களைத் தாக்கி விடுமோ என்ற அச்சத்துடன் உயிருக்கு பயந்து பொதுமக்கள் தங்கள் குடியிருப்புகளில் இருந்து காலை, மாலை மற்றும் இரவு நேரங்களில் தைரியமாக வெளியே சென்று வரவும் தேயிலை பறிக்கும் தொழிலாளர்கள் பணிக்காக தேயிலை தோட்டங்களுக்கு செல்லவும் முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே வன விலங்குகளின் நடமாட்டத்தைக் கண்காணித்து, மனித வனவிலங்கு மோதலைத் தடுக்கும் வகையில் வனத்துறையில் காலி பணியிடங்களை நிரப்பவும், கூடுதல் பணியாளர்களை நியமிக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கல்லூரி ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி:- வன விலங்குகளின் வழித்தடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, வனவிலங்குகள் ஊருக்குள் நுழையாத வண்ணம் வனப்பகுதியில் தண்ணீர் தொட்டிகளை கூடுதலாக அமைக்கவும், காடுகளின் பரப்பளவை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், வனப்பகுதிகளில் வன விலங்குகளின் உணவிற்கு தேவையான பழ மரங்கள் மற்றும் சோலை மர நாற்றுக்களை கூடுதலாக நடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால் வன விலங்குகளுக்கு தேவையான உணவு மற்றும் தண்ணீர் வனப்பகுதியிலேயே கிடைத்து விடுவதால் வன விலங்குகள் வனத்தை விட்டு குடியிருப்புப் பகுதிக்கு வராமல் தடுக்க முடியும்.



நீலகிரியில் ஆண்டுக்கு 10 பேர் உயிரிழப்பு- வன அதிகாரி தகவல்


மனித வனவிலங்கு மோதல் குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

வனப்பகுதிகளில் தீவனப் பற்றாக்குறை, வனப்பகுதிகளில் அதிகரிக்கும் ஆக்கிரமிப்புகள் உள்பட பல்வேறு காரணங்கள் மனித -வனவிலங்கு மோதலுக்கு அடிப்படையாக அமைகின்றன. அதே சமயத்தில் அத்துமீறி வனப்பகுதிக்குள் சுற்றுலா பயணிகள் நுழைவதும் இதற்கு ஒரு காரணமாக அமைகிறது. எனவே பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் சுற்றுலா பயணிகள் நுழைவதை தடுக்க ரோந்து பணிகள் தீவிர படுத்தப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தை பொறுத்தவரை ஒரு ஆண்டில் சுமார் 10 பேர் வனவிலங்கு தாக்குதலுக்கு பலியாகின்றனர். இதிலும் அதிகமானோர் காட்டெருமை மற்றும் யானையின் தாக்குதலுக்கு ஆளாகின்றனர். ஒரு சில இடங்களில் சிறுத்தை அல்லது புலியின் தாக்குதல் நிகழ்கிறது.


Next Story