பாபநாசம்- கோவத்தகுடிக்கு மினி பஸ்கள் மீண்டும் இயக்கப்படுமா?
பாபநாசம்- கோவத்தகுடிக்கு மினி பஸ்கள் மீண்டும் இயக்கப்படுமா?
பஸ் வசதி இ்ல்லாததால் மாணவர்கள் நடந்து செல்கின்றனர். எனவே பாபநாசம்- கோவத்தகுடிக்கு மினி பஸ்கள் இயக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மினி பஸ்கள் நிறுத்தம்
தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில் இருந்து பண்டாரவாடை, தேவராயன்பேட்டை, பொன்மான்மேய்ந்தநல்லூர், மெலட்டூர் வழியாக கோவத்தகுடி வரை மினி பஸ் ஒன்று இயக்கப்பட்டு வந்தது. அதேபோல் பாபநாசத்தில் இருந்து வளத்தாமங்களம், திருவையாத்துகுடி மார்க்கமாக வடக்குமாங்குடி வரை மற்றொரு மினி பஸ்சும் இயக்கப்பட்டு வந்தது. இந்த மினி பஸ்களால் பல கிராமமக்கள், பள்ளி-கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள், கர்ப்பிணி பெண்கள் ஆஸ்பத்திரிக்கு சென்று வந்்தனர். கடந்த 6 மாதத்திற்கு முன்பு இந்த இருமார்க்கத்திலும் சென்று வந்த மினிபஸ்கள் நிறுத்தப்பட்டது. பஸ்வசதி இல்லாததால் கிராமமக்கள், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள், கர்ப்பிணி பெண்கள் பல்வேறு பகுதிகளுக்கு செல்லமுடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் மாணவர்கள் பல கிலோ மீட்டர் நடந்து செல்லும் அவலம் உள்ளது.
மீண்டும் இயக்கம் நடவடிக்கை
இதுகுறித்து கிராமமக்கள் கூறுகையில்,
பாபநாசத்தில் இருந்து கோவத்தகுடி வரை இயக்கப்பட்ட மினிபஸ்களால் பண்டாரவாடை, தேவராயன்பேட்டை, பொன்மான்மேய்ந்தநல்லூர், கோடுகிளி, புலிமங்களம், சோலைபூஞ்சேரி, கிடங்கநத்தம் உள்பட பல கிராமமக்கள், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள், அலுவல் பணிக்கு சென்று வருவோர் பாபநாசம் மற்றும் பிறபகுதிக்கு சென்றுவர உதவியாக இருந்தது. மினி பஸ்கள் திடீரென நிறுத்தப்பட்டதால் தினசரி 5 முதல் 7 கிலோ மீட்டர் தூரம் வரை மாணவர்கள் நடந்து செல்கின்றனர். இதனால் கிராமத்தினர் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே நிறுத்தப்பட்ட மினி பஸ்களை மீண்டும் இயக்க மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.