மருந்து, மாத்திரை வாங்க நீண்ட நேரம் காத்திருக்கும் அவலம்: சேலம் அரசு ஆஸ்பத்திரியில் கூடுதல் கவுண்ட்டர்கள் திறக்கப்படுமா? நோயாளிகள் எதிர்பார்ப்பு
சேலம் அரசு ஆஸ்பத்திரியில் மருந்து, மாத்திரை வாங்க நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய உள்ளதால் கூடுதல் கவுண்ட்டர்கள் திறக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு நோயாளிகளிடம் ஏற்பட்டுள்ளது.
அரசு ஆஸ்பத்திரி
சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சேலம் மாவட்டம் மட்டும் அல்லாமல் நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இருந்தும் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். அதன்படி சேலம் அரசு ஆஸ்பத்தியில் உள்நோயாளிகளாக 2 ஆயிரம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். புறநோயாளிகளாக தினமும் 3 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்று செல்கின்றனர்.
புறநோயாளிகளுக்கு மருந்து, மாத்திரைகள் வழங்க 2 கவுண்ட்டர்கள் உள்ளன. இதில் ஒரு கவுண்ட்டரில் ஆண்களுக்கும், மற்றொரு கவுண்ட்டரில் பெண்களுக்கும் மருந்து மாத்திரைகள் வழங்கப்படுகின்றன. மாற்றுத்திறனாளிக்கு என தனி கவுண்ட்டர் உள்ளன.
கூடுதல் கவுண்ட்டர்கள்
காலை 7.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை மட்டுமே மருந்து, மாத்திரைகள் வழங்கப்படுகின்றன. மாற்றுத்திறனாளிகளுக்கான கவுண்ட்டரில் பெரும்பாலான நேரங்களில் மருந்து, மாத்திரைகள் வழங்கப்படுவது இல்லையாம். எனவே மற்ற 2 கவுண்ட்டர்களிலும் எப்போதும் கூட்டம் நிரம்பி வழிகின்றன. இதனால் மருந்து, மாத்திரை வாங்க பலமணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பெரும்பாலானவர்களுக்கு நோயாளிகளின் உறவினர்கள் மருந்து, மாத்திரைகள் வாங்குகின்றனர்.
ஆனால் நோயாளிகளும், வயதானவர்களும் மருந்து, மாத்திரை வாங்க மணிக்கணக்கில் காத்து கிடக்கின்றனர். சிலர் சோர்வடைந்து மயக்கமடையும் சம்பவங்களும் அடிக்கடி நடக்கின்றன என்று நோயாளிகள் கூறுகின்றனர். எனவே மருந்து, மாத்திரைகள் வாங்க கூடுதல் கவுண்ட்டர்கள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே நோயாளிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.
பாமர மக்கள்
இது குறித்து சேலம் காரிப்பட்டியை சேர்ந்த 50 வயதான பார்வதி என்பவர் கூறுகையில்,என்னுடைய மகளுக்கு தைராய்டு பிரச்சினையால் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. தற்போது மருந்து, மாத்திரைகள் வாங்க வந்தேன். அதனை ஒரு கவரில் போட்டு கொடுக்காமல் கையில் எடுத்து செல்லும்படி கூறுகின்றனர். எனவே மருந்து, மாத்திரைகளை கவரில் எடுத்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
பனமரத்துப்பட்டியை சேர்ந்த என்ஜினீயர் கர்ணன் (28) கூறுகையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்து விட்டேன். தற்போது அடிக்கடி மூச்சுதிணறல் ஏற்படுகிறது. அதற்காக மாத்திரை வாங்கி சாப்பிட்டு வருகிறேன். மாத்திரை வழங்கும் போது சரிவர வழங்குவது இல்லை. எனக்கு 5 வகையான மாத்திரை வேண்டும். ஆனால் 3 வகையான மாத்திரை மட்டுமே தந்தனர். நான் கேட்ட பிறகு மீதமுள்ள மாத்திரைகளை தந்தனர். ஆனால் பாமர மக்கள் என்ன செய்வார்கள். இவர்கள் கொடுக்கிற மாத்திரைகளை வாங்கி செல்வார்கள். இதனை சரிசெய்து மாத்திரைகளை ஒழுங்காக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
நடவடிக்கை
இதுகுறித்து டாக்டர்கள் கூறுகையில், அரசு ஆஸ்பத்திரியில் தற்போது போதுமான மருந்து, மாத்திரைகள் இருப்பு உள்ளது. மருந்து, மாத்திரைகள் வழங்க கூடுதல் கவுண்ட்டர்கள் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும். மருந்து, மாத்திரைகள் இருப்பு குறித்து சம்பந்தப்பட்ட அலுவலர்கள் அவ்வப்போது ஆஸ்பத்திரி நிர்வாகத்துக்கு தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அப்போதுதான் ஆஸ்பத்திரியில் இல்லாத மாத்திரைகள் வெளி மார்க்கெட்டில் வாங்கி சரியான நேரத்தில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ஏதுவாக இருக்கும் என்றனர்.