புதிய வகுப்பறை கட்டிடங்கள் விரைவாக கட்டப்படுமா?
தர்மபுரி மாவட்டத்தில் அரசு பள்ளி கட்டிடங்கள் இடிக்கப்பட்ட பகுதிகளில் புதிய வகுப்பறை கட்டிடங்களை விரைவாக கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள், பெற்றோர் வலியுறுத்தி வருகிறார்கள்.
1,379 பள்ளிகள்
நெல்லையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஒரு மேல்நிலைப்பள்ளியில் கழிவறை சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் பலியானார்கள். இந்த சம்பவத்தை அடுத்து தமிழக அரசின் உத்தரவுப்படி மாநிலம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயன்பாட்டில் இல்லாத பழுதடைந்த, இடிக்கப்பட வேண்டிய பழைய கட்டிடங்கள் குறித்தும், பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய சீரமைப்பு பணிகள் குறித்தும் பள்ளிக்கல்வி துறை மூலம் விவரங்கள் சேகரிக்கப்பட்டன. இவற்றில் பழுதடைந்த கட்டிடங்களை இடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
தர்மபுரி மாவட்டத்தில் 832 தொடக்கப் பள்ளிகள், 322 நடுநிலைப்பள்ளிகள், 118 உயர்நிலைப்பள்ளிகள், 107 மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 1,379 அரசு பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் அரசு தொடக்கப்பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளின் கட்டிடங்கள் ஊராட்சி ஒன்றியங்களின் கட்டுப்பாட்டில் உள்ளன. அரசு உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள கட்டிடங்கள் பொதுப்பணி துறையின் கட்டுப்பாட்டில் உள்ளன.
கட்டிடங்கள் இடிப்பு
தர்மபுரி மாவட்டத்தில் பழுதடைந்த இடிக்கப்பட வேண்டிய பள்ளி கட்டிடங்கள், சீரமைக்கப்பட வேண்டிய பள்ளி கட்டிடங்கள் குறித்து ஊரக வளர்ச்சி துறை மற்றும் பொதுப்பணித்துறை மூலம் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இதேபோல் ஊரக வளர்ச்சித்துறை, வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை ஆகியவற்றை சேர்ந்த அலுவலர்கள் கொண்ட குழுக்கள் மூலம் அனைத்து பள்ளிகளிலும் உள்ள கட்டிடங்களின் உறுதித் தன்மையை சரிபார்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அப்போது உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 250 வகுப்பறைகள், 34 தண்ணீர் தொட்டிகள், 27 சத்துணவு கூடங்கள், 6 ஆய்வகங்கள், 174 கழிவறைகள், 17 சுற்று சுவர்கள் மற்றும் 35 பிறவகை கட்டிடங்கள் என மொத்தம் 543 கட்டிடங்கள் இடிக்கப்பட வேண்டிய நிலையில் இருப்பது கண்டறியப்பட்டது. இவற்றில் 422 கட்டிடங்கள் இடித்து அகற்றப்பட்டன. 121 கட்டிடங்களை இடிக்க தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.