திருவெண்காட்டில், புதிய குடியிருப்புகள் கட்டித்தரப்படுமா?
சேதமடைந்த குடியிருப்புகளை அகற்றிவிட்டு திருவெண்காட்டில் புதிய குடியிருப்புகள் கட்டித்தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவெண்காடு:
சேதமடைந்த குடியிருப்புகளை அகற்றிவிட்டு திருவெண்காட்டில் புதிய குடியிருப்புகள் கட்டித்தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சுகாதார நிலையம்
மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காட்டில் பழமை வாய்ந்த அரசினர் மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையம் இயங்கி வருகிறது. இந்த நிலையம் கடந்த 1952-ம் ஆண்டு பொதுமக்களின் பங்களிப்போடு கட்டப்பட்டது. இதில் சுகாதார நிலையம், கருத்தடை அறுவை சிகிச்சை மையம் மற்றும் பணியாளர் குடியிருப்பு உள்ளிட்ட வசதிகளுடன் செயல்பட்டு வந்தது. மக்கள் தொகை அதிகரிப்பு மற்றும் சுகாதார வசதிகள் மேம்பாடு அடைந்ததையொட்டி இந்த சுகாதார நிலையம் சரபோஜி அக்ரஹாரம் பகுதியில் உள்ள இடத்தில் மாற்றப்பட்டு அங்கு தற்போது வரை இயங்கி வருகிறது.
இந்த சுகாதார நிலையத்தின் மூலம் திருவெண்காடு, ராதாநல்லூர், மணிக்கிராமம், பெருந்தோட்டம், மங்கை மடம், கீழ சட்டநாதபுரம், திருநகரி உள்ளிட்ட பல்வேறு கிராம மக்கள் பயனடைந்து வருகின்றனர். இந்த நிலையம் சீர்காழி வட்டார சுகாதார நிலையத்தின் தலைமையிடமாக விளங்குகிறது.
புதிய குடியிருப்புகள் கட்ட வேண்டும்
இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், திருவெண்காடு மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையம் இயங்கும் இடத்தில் போதிய இடவசதி இல்லாத நிலை காணப்படுகிறது. அதோடு மட்டுமல்லாமல் தினந்தோறும் 2000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையத்தில் இரவு நேரங்களில் டாக்டர்கள் பணியில் இருப்பதில்லை. இதனால் நோயாளிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். இதனை கருத்தில் கொண்டு தெற்கு வீதியில் உள்ள முற்றிலும் சேதமடைந்த நிலையில் உள்ள குடியிருப்புகளை அகற்றிவிட்டு, புதிய குடியிருப்புகளை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த இடத்தில் இட வசதி அதிகமாக உள்ளதால், சித்தா, கண் சிகிச்சை, பிரசவ வார்டு ஆகியவற்றிற்கு புதிய கட்டிடங்களை கட்டலாம். குடியிருப்புகள் கட்டப்பட்டால் டாக்டர் மற்றும் பணியாளர்கள் முழு நேரம் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ஏதுவாக இருக்கும் என்றனர்.