நொய்யல் ரெயில் நிலையம் மீண்டும் செயல்பாட்டிற்கு வருமா?


நொய்யல் ரெயில் நிலையம் மீண்டும் செயல்பாட்டிற்கு வருமா?
x

காலப்போக்கில் காணாமல்போன நொய்யல் ரெயில் நிலையம் மீண்டும் செயல்பாட்டிற்கு வருமா? என பொதுமக்கள் பெரிதும் எதிர்பார்ப்பில் தவித்து வருகின்றனர்.

கரூர்

நொய்யல் ரெயில் நிலையம்

கரூர் மாவட்டம், நொய்யல் வழியாக ரெயில் பாதை செல்கிறது. இந்த வழியாக ஈரோடு, திருப்பூர், கோவை, பாலக்காடு வழியாக கேரளா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும், அதேபோல் கரூர், திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, திருநெல்வேலி, சென்னை, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும் பயணிகள் ரெயில்கள், விரைவு ரெயில்கள், சரக்கு ரெயில்கள் என ஏராளமான ரெயில்கள் சென்று வருகின்றன. இந்நிலையில் கடந்த சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்பு நொய்யல் சுற்று வட்டாரப்பகுதி பொதுமக்கள், வியாபாரிகள், பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகளின் நலன் கருதி நொய்யல் பகுதியில் புதிதாக ரெயில் நிலையம் அமைக்கப்பட்டது. இந்த ரெயில் நிலையத்தில் நின்று செல்லும் பயணிகள் ரெயில்கள் மூலம் காலை முதல் இரவு வரை பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், வியாபாரிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் சென்று வந்தனர்.

ேபாதிய வருமானம் இல்லை

அதேபோல் நொய்யல் சுற்றுவட்டார பகுதிகளில் செயல்பட்டு வந்த பால் பண்ணையாளர்கள் விவசாயிகளிடமிருந்து வாங்கிய பாலில் இருந்து வெண்ணெயை எடுத்துவிட்டு வெண்ணெய் எடுக்கப்பட்ட பாலை நன்கு காய வைத்து பின்னர் ஆறவைத்து அதை தயிராக்கி கோவை, கேரளா, திருப்பூர், ஈரோடு, திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை, கும்பகோணம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு பார்சல் மூலம் தினமும் பயணிகள் ரெயிலில் உள்ள பார்சல் பெட்டியில் அனுப்பி வந்தனர். நொய்யல் சுற்று வட்டார பகுதிகளில் செயல்பட்டு வரும் வெற்றிலை வியாபாரிகள் வெற்றிலை சுமைகளை பயணிகள் ரெயில்கள் மூலம் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வந்தனர். இந்நிலையில் கடந்த சுமார் 20 ஆண்டுகளுக்கு முன் ரெயில் நிலையத்திற்கு பயணிகள் மற்றும் பார்சல்கள் மூலம் வந்த வருமானம் போதாததன் காரணமாக நொய்யலில் செயல்பட்டு வந்த ரெயில் நிலையத்தை திடீரென மூடிவிட்டனர். இதன் காரணமாக ரெயில் நிலையத்தில் நின்று சென்ற பயணிகள் ரெயில்கள் திடீரென நிறுத்தப்பட்டது.

கட்டிடங்கள் சிதிலமடைந்தன

இதன் காரணமாக ரெயில் மூலம் பால், தயிர், வெண்ணெய், வெற்றிலை போன்ற பல்வேறு பொருட்களை அனுப்பி வைத்தவர்கள் சிரமப்பட்டு வருகின்றனர். அதேபோல் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளும் ரெயிலில் செல்ல முடியாமல் பஸ்களுக்கு காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதேபோல் பொதுமக்களும் பல்வேறு பகுதிகளுக்கு ரெயில் மூலம் சென்று வந்ததன் காரணமாக மீண்டும் இந்த வழியாகச் செல்லும் பயணிகள் ரெயிலில் ஏறி பல்வேறு பகுதிகளுக்கு சென்று வர விரும்புகின்றனர். நீண்ட நெடுங்காலமாக இயங்கி வந்த ரெயில் நிலையம் மூடப்பட்டதன் எதிரொலியாக ரெயில் நிலையம் முழுவதும் சிதிலடைந்து பல்வேறு செடி, கொடிகள் முளைத்து ரெயில் நிலையத்தை மூடி உள்ளது.

கோரிக்கை

அதேபோல் கதவு, ஜன்னல் போன்றவற்றில் இருந்த மர பலகைகள் கரையான் அரிப்பினால் மிகவும் பழுதடைந்துள்ளது. ரெயில் நிலையம் பாழடைந்த மண்டபமாக காட்சியளிக்கிறது. அதேபோல் ரெயில் நடைமேடை இருக்கும் இடம் தெரியாமல் போய்விட்டது. இந்நிலையில் பொதுமக்கள், பயணிகள், மாணவ- மாணவிகள், வியாபாரிகள் நொய்யல் பகுதியில் சிதிலமடைந்து இருக்கும் கட்டிடத்தை அகற்றிவிட்டு புதிதாக ரெயில் நிலையம் கட்டி, நடைமேடை அமைக்கப்பட்டு பயணிகள் ெரயில்கள் நொய்யலில் நின்று செல்ல மத்திய ரெயில்வே அமைச்சர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நொய்யல் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story