தமிழக சட்டசபையில் ஓ.பன்னீர்செல்வத்தின் இருக்கை மாற்றப்படுமா? சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பால் பரபரப்பு
தமிழக சட்டசபையில் ஓ.பன்னீர்செல்வத்தின் இருக்கை மாற்றப்படுமா? சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பால் பரபரப்பு.
சென்னை,
2021-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. தோல்வியை தழுவியபோதும், பிரதான எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தை பெற்றது. எடப்பாடி பழனிசாமி எதிர்க்கட்சி தலைவராகவும், ஓ.பன்னீர்செல்வம் எதிர்க்கட்சி துணை தலைவராகவும் அக்கட்சி எம்.எல்.ஏ.க்களால் தேர்வு செய்யப்பட்டனர். இந்த நிலையில் அ.தி.மு.க.வில் ஏற்பட்ட பிளவு அவர்கள் இருவரையும் எதிரும், புதிருமாக மாற்றியது.
எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த பொதுக்குழுவில் ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டார். பொதுக்குழுவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் வழக்கு தொடர்ந்தார். இந்த குழப்பத்திற்கு இடையே சட்டசபை அ.தி. மு.க. எதிர்க்கட்சி துணைத்தலைவராக ஆர்.பி.உதயகுமாரை எடப்பாடி பழனிசாமி நியமித்தார். ஆர்.பி.உதயகுமாருக்கு சட்டசபையில் தனக்கு அடுத்த இருக்கை ஒதுக்கும்படி சபாநாயருக்கு கடிதம் வழங்கினார். இருக்கை விவகாரம் தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பிலும் சபாநாயகரிடம் கடிதம் அளிக்கப்பட்டது.
ஆனால் அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கு கோர்ட்டில் இருப்பதால் எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை விவகாரத்தில் சபாநாயகர் அப்பாவு எந்த முடிவையும் எடுக்கவில்லை. இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வந்த அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. இது எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக அமைந்தது.
அ.தி.மு.க. எடப்பாடி பழனி சாமி தரப்புக்கு உறுதியாகியுள்ள நிலையில், சட்டசபை எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை அதாவது, எடப்பாடி பழனிசாமி இருக்கைக்கு அடுத்த இருக்கை ஓ.பன்னீர்செல்வத்தி்ற்கே தக்க வைக்கப் படுமா? அல்லது ஆர்.பி.உதயகுமாருக்கு மாற்றி தரப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஆனாலும், இதுதொடர்பான முடிவை எடுக்க சபாநாயருக்கு மட்டும் தான் அதிகாரம் உள்ளது. கோர்ட்டு தீர்ப்பும், அதன் மூலம் எழுந்துள்ள எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை விவகாரமும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.