ஓடைகொண்டான் வாய்க்கால் தூர்வாரப்படுமா?
பூம்புகார் அருகே ஓடைகொண்டான் வாய்க்காலை தூர்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவெண்காடு:
பூம்புகார் அருகே ஓடைகொண்டான் வாய்க்காலை தூர்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஓடைகொண்டான் வாய்க்கால்
மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் அருகே சட்ரஸ் பகுதியில் காவிரி ஆற்றின் குறுக்கே கடையணை அமைந்துள்ளது. இந்த அணையில் இருந்து திருவெண்காடு, மணி கிராமம், மேல பெரும்பள்ளம், கீழப்பெரும்பள்ளம், வானகிரி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு பாசன வசதிக்காக வாய்க்கால்கள் அமைந்துள்ளன. இந்த வாய்க்காலில் முக்கியமானதாக விளங்குவது ஓடைகொண்டான் வாய்க்கால் ஆகும். சுமார் 5 கிலோமீட்டர் தொலைவு கொண்ட இந்த வாய்க்கால் மேலையூர், சாயாவனம், பல்லவனம், வெள்ளையன் இருப்பு, பழைய அகரம் உள்ளிட்ட பகுதிகளின் வழியாக சென்று கடலில் கலக்கிறது.
இந்த வாய்க்கால் மூலம் கிட்டத்தட்ட 2000 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகிறது. மேலும் மழைக்காலங்களில் வடிகால் வாய்க்காலாகவும் பயன்படுகிறது. இந்தவாய்க்கால் பல இடங்களில் புதர் மண்டி காட்டாமணக்கு செடிகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. எனவே ஓடைகொண்டான் வாய்க்காலை தூர்வார வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தூர்வார வேண்டும்
இதுகுறித்து அந்த பகுதி விவசாயிகள் கூறுகையில், ஓடைகொண்டான் வாய்க்காலில் பல பகுதிகள் புதர் மண்டி இருப்பதால், தண்ணீர் செல்ல முடியாமல் பல இடங்களில் உடைப்பு ஏற்படுகிறது. இதனால் மழைக்காலங்களில் உபரி நீர் வயலில் புகுந்து விடுகிறது. மேலும் தண்ணீர் வடிவதில் சிக்கல்கள் ஏற்படுகின்றன. இந்த வாய்க்காலை தூர்வாரி கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. எனவே விவசாயிகளின் நலன் கருதி இந்த வாய்க்காலை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.