பிச்சாவரம் சுற்றுலா தலம் மேம்படுத்தப்படுமா?
பிச்சாவரம் சுற்றுலா தலம் மேம்படுத்தப்படுமா? என பொதுமக்கள் கோாிக்கை விடுத்துள்ளனா்.
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இருந்து சுமார் 17 கிலோ மீட்டர் தூரத்தில் பிச்சாவரம் சுற்றுலா தலம் உள்ளது. கிள்ளை பேரூராட்சியில் உள்ள இந்த பிச்சாவரம் சுற்றுலா தலத்தில் மாங்குரோவ் காடுகள் என்கிற சதுப்பு நில காடுகள் உள்ளது. பிச்சாவரம் வனப்பகுதி ஓர் அரிய வகைக்காடு. இந்த வகை காடுகள் நம் நாட்டில் தமிழ்நாடு, ஆந்திரா, ஒடிசா, மேற்கு வங்காளம் ஆகிய கிழக்கு கடற்கரையோர பகுதிகளிலும், மேற்கு கடற்கரை மண்டலங்களிலும் உள்ளது.
மாங்குரோவ்
தமிழ்நாட்டில் குறிப்பாக பிச்சாவரத்திலும் (1413 ஹெக்டேர்), முத்துப்பேட்டையிலும் (12,000 ஹெக்டேர்), வேதாரண்யம், கோடியக்கரை, சத்திரம் மற்றும் தூத்துக்குடியிலும் இக்காடுகள் அமைந்துள்ளது. மாங்குரோவ் என்ற சொல் போர்த்துகீசிய வார்த்தையான மாங்கு என்ற சொல்லில் இருந்தும், ஆங்கில வார்த்தையான குரோவ் என்ற சொல்லின் கலவையும் சேர்ந்து மாங்குரோவ் என்று அழைக்கப்படுகிறது.
வெப்ப மண்டலம் மற்றும் மித வெப்ப மண்டல இடைப்பட்ட பகுதிகளில் உப்பு-சகிப்பு தன்மை கொண்ட தாவர மாக மாங்குரோவ் காடுகள் அல்லது சுரப்புன்னை மரங்கள் வளருகின்றன. பிச்சாவரம் சுற்றுலா தலத்தில் நாம் அறியாத பல அரிய வகை தகவல்கள் உள்ளன. அவற்றை பற்றி பார்க்கலாம்.
1413 ஹெக்டேர் பரப்பளவில் காணப்படும் இந்த பிச்சாவரம் சுற்றுலா தலத்தில் சுரப்புன்னை, நரிக்கண்டல், நீர்முள்ளி, தில்லை, திப்பரத்தை, பண்ணுகுத்தி, சிறு கண்டல் உள்பட 8 வகையான தாவரங்கள் வளர்ந்து வருகிறது.
51 சிறு, சிறு தீவுகள்
பிச்சாவரம் மாங்குரோவ் காடுகள் வளமானது, வடக்கே வெள்ளாறு பில்லுமேடு பகுதியில் இருந்து தொடங்கி, தெற்கில் கொள்ளிட கரையோரம் கொடியம்பாளையம் வரை நீண்ட பரப்பை கொண்டது. அதாவது வெள்ளாறு, கொள்ளிடக்கரையோரம் இடையே அமைந்துள்ளது. கொள்ளிடம் முகத்துவாரம் உப்பங்கழிகள், உப்பு நீர்ப் பாசனம் மாங்குரோவ் காடுகளை உருவாக்குகிறது.
இவற்றில் 51 வகையான சிறு, சிறு தீவுகள் எழில் கொஞ்சும் அளவில் இயற்கையாகவே அமைந்துள்ளன. இந்த தீவுகளுக்கு படகு மூலம் சென்று அதன் அழகை ரசிக்கலாம். சில தீவுகளுக்குள் படகு மூலம் செல்ல முடியாது. உப்பங்கழி முகத்துவாரத்தில் வளரும் இந்த மாங்குரோவ் அல்லது சுரபுன்னை மரத்தின் காய்கள் முருங்கைக் காய் போல் நீண்டதாக இருக்கும்.
மரத்தின் காய்கள் சேற்றில் விழுந்து, செடியாகி சில ஆண்டுகளில் மரமாக வளர்ந்து விடும். பழுத்த இலைகள் நீரில் விழுந்து அழுகி, உணவாக கிடைப்பதால், இங்கு மீன், இறால்கள் அதிகளவில் கிடைத்து வருகின்றன. நண்டும் அதிக அளவில் கிடைக்கிறது. இதன் மூலம் அப்பகுதி மக்களின் பொருளாதாரமும் உயர்ந்து வருகிறது.
நீர் நாய்கள்
இந்த பிச்சாவரத்தை மேலும் வளப்படுத்தும் வகையில் வனத்துறை சார்பில் 500 ஹெக்டேரில் செடி வைத்து பராமரித்து வருகின்றனர். இது தவிர அங்குள்ள கருவேல மரங்களை அப்புறப்படுத்தும் வேளையிலும் வனத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு நீரிலும், நிலத்திலும் வாழும் பல்வேறு உயிரினங்கள் வாழ்கின்றன. குறிப்பாக நீர் நாய்கள், நரிகளும் உள்ளன. இது பற்றியும் வனத்துறையினர் கணக்கெடுத்து வருகிறார்கள்.
இங்கு வெளிநாடு, வெளி மாநிலங்களில் இருந்தும் பறவைகளும் அடிக்கடி வந்து செல்கின்றன. நவம்பர் மாதம் முதல் ஜனவரி வரை பறவைகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். வனத்துறை கணக்கெடுப்பின் படி 86 வகையான பறவை இனங்கள் வந்து செல்வதாக அறிய முடிகிறது. ஒயிட் பிரீஸ்ட் கிங்பிஷர், பெரிய எக்ரட், டேர்ன், வாத்து, நாரை இனங்கள் என பறவைகள் அதிகமாக காணப்படுகிறது.
அலையாத்தி காடுகள்
மாங்குரோவ் காடுகள், சதுப்புநில காடுகள், அலையாத்தி காடுகள் என பல்வேறு பெயர்களை கொண்ட மரங்கள் கடல் அலையின் வேகத்தை கட்டுப்படுத்தும் என்பது சமீபத்தில் கண்டறியப்பட்டது. கடந்த 2004-ம் ஆண்டு வந்த சுனாமி பேரலை தாக்கத்தின் போது பல்வேறு இடங்கள் பாதிக்கப்பட்டாலும், பிச்சாவரம் பகுதி எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. இதன் மூலம் அலையின் வேகத்தை கட்டுப்படுத்தும் மரமாக இந்த வகை காடுகள் உள்ளன. இதனால் தான் இதற்கு அலையாத்தி காடுகள் என்று பெயர் வந்ததாகவும் சொல்லப்படுகிறது. தானே புயலிலும் இந்த மரங்கள் கம்பீரமாக நின்றது. முகத்துவாரத்தில் உப்புநீரில், களி மண்ணில் வளர்ந்து தண்ணீரில் மிதப்பது போல் இருப்பதால் இந்த மரங்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த மரங்கள் மண் அரிப்பையும் தடுத்து, கடற்கரையோர மக்களை பாதுகாத்து வருகிறது. அதிகபடியான கார்பன்டை ஆக்சைடை சேமித்து வைப்பதால் இந்த காடுகளை கார்பன் கிங் என்றும் அழைக்கிறார்கள்.
ராம்சர் தள அந்தஸ்து
இந்தியாவில் 5 ஈர நிலங்கள் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த ராம்சர் தள அந்தஸ்தை சமீபத்தில் பெற்றது. அந்த அந்தஸ்து பிச்சாவரம் சதுப்புநில காட்டிற்கும் கிடைத்துள்ளது கூடுதல் சிறப்பு அம்சமாகும். இங்கு பல்வேறு சினிமா படங்கள் எடுக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இந்த காடுகளை பார்த்து ரசிக்கும் வகையில் கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட்டு உள்ளது. இதில் இருந்து பிச்சாவரத்தின் மொத்த அழகையும் பார்த்து ரசிக்கலாம். இங்குள்ள மாங்குரோவ் காடுகளை ரசிக்கும் வகையில் படகு மூலம் சென்று, அங்கு போடப்பட்ட மரப்பலகை மூலம் நடந்து சென்று சுற்றுலா பயணிகள் ரசிக்கலாம்.
தங்கும் விடுதி
இது தவிர மாங்குரோவ் காட்டில் உப்பனாறு ஓரம் தண்ணீருக்குள் மரப்பலகை மூலம் தங்கும் விடுதி (காட்டேஜ்) அமைக்கப்பட்டு இருந்தது. அதில் 18 படுக்கை வசதிகள் இருந்தன. அவை சீரமைக்கப்படாமல் நாளடைவில் வீணாகி விட்டது.
கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாகியும், அதை அதிகாரிகள் சீரமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை. இதை சமீபத்தில் பார்வையிட்ட சுற்றுலா துறை அமைச்சர் மதிவேந்தன், இங்குள்ள குடியிருப்புகளை சீரமைத்து, விரைவில் சுற்றுலா பயணிகள் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்படும் என்று தெரிவித்து சென்றார். ஆனால் அதன்பிறகு இந்த பணிகள் எந்த அளவுக்கு உள்ளது என்பது கேள்விக்குறியாக உள்ளது. இதை சுற்றுலா துறையினர், வனத்துறையினருடன் இ்ணைந்து செயல்படுத்த வேண்டும் என்றும் சுற்றுலா பயணிகள் பெரிதும் எதிர்பார்த்துள்ளனர்.
அலுவலகம்
இங்குள்ள சுற்றுலா மையத்திற்கு என தனி அலுவலகம் இல்லை. ஏற்கனவே இருந்த மதுபாரை மூடி விட்டு, அதில் தான் தற்காலிகமாக அலுவலகம் செயல்பட்டு வருகிறது. மழைக்காலங்களில் அலுவலகத்தில் தண்ணீர் ஓழுகி கட்டிடம் மிகவும் மோசமாக மாறி வருகிறது. ஆகவே இதற்கென தனி அலுவலகமும் அமைப்பது அவசியமாகிறது.
இந்த பிச்சாவரம் சுற்றுலா மையத்தை பார்வையிட வந்த வெளிமாநில, மாவட்ட சுற்றுலா பயணிகள், இதை மேம்படுத்துவது குறித்து தங்கள் கருத்துகளை தெரிவித்தனர். இது பற்றிய விவரம் வருமாறு:-
புதிய அனுபவம்
தெலுங்கானா தேஜஸ்ரீ கூறுகையில், பிச்சாவரம் சுற்றுலா மையம் அற்புதமாக உள்ளது. இ்ங்குள்ள சதுப்பு நில மரங்களுக்கு இ்டையே படகில் செல்வது புதிய அனுபவமாக இருந்தது. ஆனால் இங்கு சிறுவர்கள் விளையாடி மகிழ விளையாட்டு பூங்கா இல்லை. தங்கும் விடுதிகளும் அதிகமாக வைக்கலாம். காடுகளுக்கு நடுவே அறைகள் கட்டி, அதில் இருந்து இயற்கை காட்சிகளை பார்ப்பது போல் இருந்தால், இன்னும் சிறப்பாக இருக்கும் என்றார்.
ராம்ஜி கூறுகையில், இங்கு காடுகளை படகில் சென்று ரசிக்க முடிகிறது. ஆனால் மற்ற பொழுதுபோக்கு அம்சங்கள் எதுவும் இல்லை. குடிக்க தண்ணீர் கூட இ்ல்லை. சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் விலங்குகளின் உருவ பொம்மைகள், சிறுவர்களை மகிழ்விக்கும் வகையில் விளையாட்டு பொருட்கள், உபகரணங்கள் இருந்தால் மகிழ்ச்சியாக இருக்கும் என்றார்.
தீம் பார்க்
கோயம்புத்தூர் கவின் கூறுகையில், படகில் சென்று காடுகளை ரசிக்கிறோம். ஆனால் அங்கு இறங்கி சென்று அங்குள்ள பறவைகள், விலங்குகளை ரசிக்கும் வகையில் ஏற்பாடு செய்யலாம். மரப்பலகைகள் அல்லது மணல் பரப்பி சுற்றுலா பயணிகள் அமர்ந்து பொழுதுபோக்கும் வகையில் சிறப்பு ஏற்பாடுகளை செய்தால் நன்றாக இருக்கும் என்றார்.
பெருந்துறை தரணிதரன் கூறுகையில், மாங்குரோவ் காடுகள் இயற்கை அரண் போல் உள்ளது. அதிலும் சிறிய வாய்க்கால் வழியாக படகு மூலம் சென்று காடுகளை ரசிப்பது ரம்மியாக இருக்கிறது. ஆனால் அங்கு இறங்கி, விளையாடும் வகையில், அதாவது பீச் வாலிபால், கபடி போன்ற விளையாட்டுகளை விளையாடும் வகையிலும், தீம் பார்க் அமைத்தாலும் அதிகஅளவில் சுற்றுலா பயணிகள் வருவார்கள். இதன் மூலம் சுற்றுலா துறைக்கும் வருமானம் பெருகும் என்றார்.
வனத்துறையும், சுற்றுலா துறையும் சேர்ந்து கைகோர்த்தால் இந்த பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் பல்வேறு அடிப்படை வசதிகள் செய்து மேலும் மேம்படுத்தலாம் என்பதில் சந்தேகமில்லை.