வாகனங்கள் எளிதாக ஏறி, இறங்கும் வகையில் சாய்வு தளம் அமைக்கப்படுமா?
மயிலாடுதுறை காவிரி பாலத்தில் வாகனங்கள் எளிதாக ஏறி, இறங்கும் வகையில் சாய்வு தளம் அமைக்கப்படுமா? என வாகன ஓட்டிகள் எதிர்பார்த்துள்ளனர்.
மயிலாடுதுறை காவிரி பாலத்தில் வாகனங்கள் எளிதாக ஏறி, இறங்கும் வகையில் சாய்வு தளம் அமைக்கப்படுமா? என வாகன ஓட்டிகள் எதிர்பார்த்துள்ளனர்.
காவிரி பாலம்
மயிலாடுதுறை நகரில் கூறைநாடு போலீஸ் நிலையம் சாலை மற்றும் திருவிழந்தூர் பகுதியை இணைக்கும் வகையில் காவிரி ஆற்றின் குறுக்கே பொதுமக்களின் நலன் கருதி பாலம் கட்டப்பட்டது. இந்த பாலத்தின் வழியாக ஒரு நாளைக்கு ஏராளமான மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் நடந்தும், சைக்கிள், மோட்டார் சைக்கிள் மற்றும் கார்களிலும் சென்று வருகின்றனர்.
மேலும் மயிலாடுதுறை நகரில் உள்ள பெரும்பாலான பொதுமக்கள் பயன்பாடுத்தும் சுடுகாட்டிற்கும் இந்த பாலத்தை கடந்து தான் செல்ல வேண்டும். ஆனால் அப்பாலம் கட்டப்பட்டது முதல், முறையான சாலை இணைப்பு வசதி செய்யப்படாத காரணத்தினால் அவ்வழியே செல்லும் இரு சக்கர, 4 சக்கர வாகனங்கள் பாலத்தில் ஏறுவதற்கே மிகவும் சிரமப்பட வேண்டிய நிலை உள்ளது.
சாய்வு தளம் அமைக்க வேண்டும்
இந்த பாலத்தில் வாகனங்கள் எளிதாக ஏறி. இறங்க சாய்வு தளம் அமைக்க வேண்டும் என விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதுகுறித்து மயிலாடுதுறை சேர்ந்த சமூக ஆர்வலர் அப்பர்சுந்தரம் கூறுகையில், காவிரி பாலமும், சாலையும் இணையும் இடத்தில் உள்ள பள்ளம் சுமார் அரை அடி உள்ளது. தேவையான அளவிற்கு இணைப்பு சாய்வு தளவசதி செய்யப்படாததால், பாலத்தின் தெற்குப் புறத்தில் இருந்து ஏறுகின்ற, இறங்குகின்ற அனைவரும் மிகவும் சிரமப்படுகிறார்கள்.
நடவடிக்கை
இணைப்பு சரி செய்யாத காரணத்தினால் பலர் இந்த பாலத்தை தவிர்த்து சுற்றிச்செல்ல வேண்டிய நிலை உருவாகியுள்ளது. எனவே உடனடியாக பொதுப்பணித்துறை மற்றும் மயிலாடுதுறை நகராட்சி நிர்வாக அதிகாரிகள் பாலத்தின் இணைப்பு பகுதியை பார்வையிட்டு உடனடியாக சாய்வு தள இணைப்பு அமைக்க வேண்டும்.
மேலும் சைக்கிள், மோட்டார் சைக்கிள், கார்களில் செல்வோர் மற்றும் இறந்தவர்களின் உடலை சுமந்து செல்கின்ற வாகனங்களும், சுலபமாக ஏறுகின்ற வகையில் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.