கோவை, திருச்சிக்கு மீண்டும் குளிர்சாதன பஸ்கள் இயக்கப்படுமா?


கோவை, திருச்சிக்கு மீண்டும் குளிர்சாதன பஸ்கள் இயக்கப்படுமா?
x
தினத்தந்தி 18 April 2023 12:30 AM IST (Updated: 18 April 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

பழனியில் இருந்து கோவை, திருச்சி போன்ற பகுதிகளுக்கு மீண்டும் குளிர்சாதன பஸ்கள் இயக்க வேண்டும் என பயணிகள், பக்தர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

திண்டுக்கல்

பழனி முருகன் கோவில்

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற ஆன்மிக தலமாக பழனி முருகன் கோவில் உள்ளது. இங்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்ய வருகின்றனர். தைப்பூசம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட திருவிழாக்களின்போது லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக பழனிக்கு வருகின்றனர். இதில் குழுவோடு வரும் பக்தர்களை தவிர்த்து பெரும்பாலானோர் பஸ், ரெயில் மூலமே பழனிக்கு வருகை தருகின்றனர்.

பக்தர்கள் வசதிக்காக பழனியில் இருந்து தமிழகத்தின் முக்கிய நகரங்களுக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன. குறிப்பாக திண்டுக்கல், திருச்சி, கோவை, ஈரோடு, மதுரை ஆகிய ஊர்களுக்கு ஏராளமான பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதனால் தொலைதூர மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் மேற்கண்ட ஊர்களுக்கு வந்து அங்கிருந்து மாறியும் பழனிக்கு பஸ்களில் வருகின்றனர்.

குளிர்சாதன பஸ் சேவை

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பக்தர்கள், பயணிகள் வசதிக்காக திருச்சி, நாகர்கோவில், கோவை போன்ற பகுதிகளில் இருந்து பழனிக்கு குளிர்சாதன பஸ்கள் இயக்கப்பட்டன. இந்த பஸ்களில் மற்ற பஸ்களை விட கட்டணம் அதிகம் என்றாலும் வெயில் காலத்தில் பக்தர்கள், பயணிகள் ஆர்வமுடன் சென்று வந்தனர். கொரோனா பரவல் காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு குளிர்சாதன வசதி கொண்ட பஸ்கள் சேவை நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் தற்போது கோடைகாலம் தொடங்கிய நிலையில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால் பஸ் பயணம் என்றாலே மக்கள் பரிதவிப்போடு தான் செல்கின்றனர். இதற்கிடையே ஓரிரு நாட்களில் பள்ளிகளில் கோடை விடுமுறை விடப்பட உள்ளது. இதனால் பலரும் தங்கள் குழந்தைகளோடு ஆன்மிக, சுற்றுலா தலங்களுக்கு படையெடுப்பார்கள்.

எதிர்பார்ப்பு

அந்த வகையில் பழனிக்கும் ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள். எனவே வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க மதுரை, திருச்சி, கோவை போன்ற பகுதிகளில் இருந்து மீண்டும் பழனிக்கு குளிர்சாதன வசதி பஸ் சேவையை தொடங்க வேண்டும் என பக்தர்கள், பயணிகள் எதிர்பார்த்து உள்ளனர்.

இதுகுறித்து பயணிகள் கூறும்போது, கோடை விடுமுறை விடும்போது குடும்பத்துடன் பலரும் பழனிக்கு வருவோம். ஆனால் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் குழந்தைகளுடன் பஸ்சில் வர கடும் சிரமமாக உள்ளது. எனவே திருச்சி, கோவை, மதுரை பகுதியில் இருந்து பழனிக்கு குளிர்சாதன வசதி கொண்ட பஸ்கள் இயக்க வேண்டும் என்றனர்.


Related Tags :
Next Story