ஆதிதிராவிட மாணவர்களின் உயர்கல்வி நிதி பயன்படுத்தாமல் ரூ.927 கோடி ஒப்படைப்பா?-தமிழக அரசு பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு


ஆதிதிராவிட மாணவர்களின் உயர்கல்வி நிதி பயன்படுத்தாமல் ரூ.927 கோடி ஒப்படைப்பா?-தமிழக அரசு பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
x

ஆதிதிராவிட மாணவர்களின் உயர்கல்வி நிதி பயன்படுத்தாமல் ரூ.927 கோடி ஒப்படைப்பா?-தமிழக அரசு பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

மதுரை

மதுரை

அரசிடம் ரூ.927 கோடி ஒப்படைக்கப்பட்ட ஆதி திராவிடர் மாணவர்களின் உயர்கல்வி நிதியை மீண்டும் பெறக்கோரிய வழக்கில் தமிழக அரசு பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

ரூ.927 கோடி

மதுரையை சேர்ந்த கார்த்திக், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமுதாயத்தைச் சேர்ந்த மாணவர்கள் பலருக்கும் உயர்கல்வி பெறுவதற்கான பொருளாதார தேவை, முழுமையாகப் பூர்த்தி செய்யப்படாத நிலையில், நலத்திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட தொகை பயன்படுத்தப்படாமல் திருப்பி ஒப்படைக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது சம்பந்தமாக அந்த துறையிடம் இருந்து பெறப்பட்ட தகவலின்படி, கடந்த 8 ஆண்டுகளில், வெளிநாடுகளில் பி.எச்டி., படிப்பதற்கான உதவித் தொகை திட்டத்திற்கு 18 பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர். இவர்களில் 3 மட்டுமே தேர்வு செய்யப்பட்டு ரூ.2.65 கோடி செலவு செய்யப்பட்டு உள்ளது. மேலும் கடந்த 5 ஆண்டுகளில் பல்வேறு நலத்திட்டங்களுக்காக ஒதுக்கிய தொகையில் பயன்படுத்தப்படாமல் ரூ.927 கோடியை அரசிடம் திரும்ப ஒப்படைத்துள்ளதாக, இந்தத்துறை தகவல்கள் அளிக்கின்றன. இந்த தொகையை மீண்டும் பெற்று, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களின் உயர்கல்விக்கு பயன்பெறும் வகையில் நிவாரண உதவியாக வழங்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இணையதளத்தில் பதிவேற்றம் செய்யலாம்

இந்த வழக்கு நீதிபதிகள், பி.என்.பிரகாஷ், ஆனந்தி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், பயன்படுத்தப்படாத பணத்தை மீண்டும் அரசிடம் ஒப்படைப்பது தானே நடைமுறை? திட்டங்கள் குறித்து முறையாக அறிவிக்கப்படுகிறதா? என கேள்வி எழுப்பினர்.

அதற்கு அரசு வக்கீல் ஆஜராகி, இதுதொடர்பான முழு விவரங்களும் இணையதளத்தில் உள்ளது. இதற்காக புதிய இணையதளமும் ஏற்படுத்தப்பட இருக்கிறது. திட்டங்கள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும் என கோரினார்.

இதையேற்ற நீதிபதிகள், இணையதளத்தில் முழு விவரங்களையும் பதிவேற்றம் செய்யலாம். அந்த வெளிப்படை தன்மை இருக்கும் போதுதான், யாரேனும் முறைகேடாக பயன்படுத்தினால், அதுகுறித்தும் தெரியவரும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து அரசு தரப்பில் பதில்மனு தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டு, வழக்கை வருகிற 13-ந் தேதிக்கு ஒத்திவைத்தனர்.


Next Story