தலைவர்களின் சிலைகள் பராமரிக்கப்படுமா?; சமூக ஆர்வலர்கள் கருத்து


தலைவர்களின் சிலைகள் பராமரிக்கப்படுமா?;  சமூக ஆர்வலர்கள் கருத்து
x

தலைவர்களின் நினைவாக சிலைகள் வைக்கிறோம். அவர்களின் சாதனைகள், பெருமைகள் வழிவரும் சந்ததிகளுக்கு தெரியவேண்டும் என்பதே அதன் நோக்கம்.

ஈரோடு

தலைவர்களின் நினைவாக சிலைகள் வைக்கிறோம். அவர்களின் சாதனைகள், பெருமைகள் வழிவரும் சந்ததிகளுக்கு தெரியவேண்டும் என்பதே அதன் நோக்கம்.

பொறுமை இல்லை

சிலைகள் என்று சொன்னாலும் அச்சிலைகளுக்கு எவரேனும் இழுக்கு ஏற்படுத்துவார் என்றால் யாரும் பொறுத்துக் கொள்வது இல்லை.

அதைத் தலைவருக்கே ஏற்பட்ட இழுக்காகக் கருதி வெகுண்டு எழுகிறோம்.

அத்தகைய மனம்கொண்ட நாம், அந்தச் சிலைகளுக்கு இயற்கையில் ஏதேனும் குற்றம் குறை வராதவாறு பார்த்துக் கொள்கிறோமா என்றால்? இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

அலங்காரம்

சிலைகளை வைப்பதுடன் சரி. பிறந்தநாள், நினைவு நாட்களில் மட்டுமே அலங்காரம் செய்கிறோம். மற்ற நாட்களில் காகங்களையும், குருவிகளையும் அலங்கோலப்படுத்த விடுகிறோம்.

தலைவர்களை கவுரவப்படுத்த வேண்டும் என்ற நமது அடிப்படை நோக்கம் இங்கே அர்த்தமற்றுப் போவதை யாரும் உணர மறுக்கிறோம்.

இதுபற்றி சமூகப் பார்வையாளர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை பார்ப்போம்.

ஆர். நல்லக்கண்ணு

இதுபற்றி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணு கூறியதாவது:-

மக்கள் நலனுக்காக தங்கள் வாழ்க்கையை ஒப்படைத்து மறைந்த தலைவர்களுக்கு சிலைகள் அமைப்பதில் எவ்வித தவறும் இல்லை. ஆனால் சிலைகள் வைப்பதோடு தங்கள் கடமை முடிந்து விட்டது என்று யாரும் கருதக்கூடாது.

தலைவர்களின் சிலைகளை தினந்தோறும் தூய்மை செய்து பராமரிக்க வேண்டும். அப்படிச் செய்ய முடியவில்லை என்றால் அவர்களது பிறந்தநாள், நினைவுநாளின்போது சிலைகளை நன்றாகச் சுத்தம் செய்து, வர்ணம் பூசவேண்டும். மாலை அணிவித்து மரியாதை செலுத்தி அவர்களது கொள்கைகளை பரப்ப வேண்டும்.

இதுதான் மறைந்த தலைவர்களுக்கு நாம் செலுத்தும் உண்மையான மரியாதையாகவும், புகழ் அஞ்சலியாகவும் இருக்கும்.

இவ்வாறு ஆர்.நல்லகண்ணு கூறினார்.

சிவாஜி கணேசன் சிலை

மறைந்த நடிகர் திலகம் சிவாஜிகணேசன் சிலை பராமரிப்பு குறித்து நடிகர் பிரபு கூறியதாவது:-

என்னுடைய தந்தையார் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு அடையாறில் மணிமண்டபம் அமைத்து தமிழக அரசு சிறப்பான முறையில் பராமரித்து வருகிறது.

மணிமண்டபத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு பிறந்தநாள், நினைவுநாட்களில் மட்டுமின்றி வாரந்தோறும் வெள்ளிக்கிழமை தோறும் தவறாமல் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதை வழக்கமாகக் கொண்டு இருக்கிறோம்.

மறைந்த தலைவர்களின் சிலைகளை தொடர்ந்து பராமரித்து அவர்களது புகழைப் போற்ற வேண்டும்.

இவ்வாறு நடிகர் பிரபு கூறினார்.

நூலகர்

இதுபற்றி ஈரோடு கருங்கல்பாளையம் பாரதி நூலக நூலகர் ஜி.ஷர்மிளா கூறியதாவது:-

பாரதியார் தனது கடைசி பேருரையை நிகழ்த்திய இடம் கருங்கல்பாளையம். அவர் வருகையின்போது இந்த இடம் படிப்பகமாக இருந்தது. நூறாண்டுகள் கடந்தும் இது படிப்பகமாக நூலகமாக இருக்கிறது. இங்கு பாரதியார் சிலை உள்ளது. இந்த சிலையை முறையாக பராமரித்து வருகிறோம். பாரதி நினைவு காட்சியகத்தையும் பராமரித்து வருகிறோம். ஈரோட்டை பொறுத்தவரை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் காந்தி சிலைகள் உள்ளன. அவை கம்பி கூண்டுகள் அமைத்து பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருக்கின்றன. பன்னீர்செல்வம் பூங்கா சிலைகள் வளாகம், தமிழகத்திலேயே எங்கும் இல்லாத வகையில் அழகாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. தலைவர்களின் சிலைகள் வரிசையாக அமைக்கப்பட்டு இருப்பதுடன் கட்சி வேறுபாடுகள் இல்லாமல் மறைந்த தலைவர்களை அனைவரும் மதிக்கும் வகையில் இந்த வளாகம் உள்ளது. தலைவர்களின் சிலை மேடையின் கீழ் சிறந்த போட்டித்தேர்வு நூலகங்கள் அமைக்கப்பட்டு இருப்பது ஈரோட்டில் மட்டுமே பார்க்கக்கூடிய விஷயம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதுபோல் காமராஜர் சிலை உள்பட அனைத்து சிலைகளும் நல்ல முறையில் பராமரிக்கப்படுகின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.

வர்ணம் பூசி...

புஞ்சை புளியம்பட்டியை சேர்ந்த எஸ்.எம்.எச்.இல்லியாஸ் கூறியதாவது:-

புஞ்சை புளியம்பட்டியில் நகராட்சி அலுவலக வளாகத்தில் அண்ணாசிலை, பஸ் நிலையத்தில்காந்தி சிலை, இந்திரா காந்தி மற்றும் ராஜீவ்காந்தி சிலைகள் உள்ளன. இங்குள்ள காந்தி, இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி சிலைகளுக்கு அந்த பகுதி காங்கிரஸ் கட்சியினர் புதிதாக வர்ணம் பூசி பராமரித்து வருகிறார்கள். காந்தி சிலையுடன் உள்ள மண்டபத்தை புதுப்பிக்க பொதுமக்களின் ஒத்துழைப்பை எதிர்பார்த்து இருக்கிறார்கள். இதுபோல் இங்கு அ.தி.மு.க. சார்பில் அமைக்கப்பட்டு உள்ள எம்.ஜி.ஆர். சிலையும் சரியாக பராமரிக்கப்பட வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

வீரத்தின் அடையாளம்

சிவகிரி அருகே தொப்பப்பாளையத்தை சேர்ந்த விவசாயி டி.ஏ.செல்லக்குமாரசாமி கூறியதாவது:-

சிவகிரி கடைவீதியில் சுதந்திர போராட்ட தியாகியும், கொங்கு மக்களின் வீரத்தின் அடையாளமாகவும் விளங்கும் தீரன்சின்னமலை சிலை குதிரையுடன் பிரமாண்டமாக அமைக்கப்பட்டு உள்ளது. இந்த சிலை நாள்தோறும் துடைத்து, பூக்கள் தூவப்பட்டு நல்ல முறையில் பராமரிக்கப்படுகிறது. இதுபோல் அறிஞர் அண்ணா சிவகிரியில் பேசியதன்நினைவாக அண்ணாமேடை எனபெயர் சூட்டப்பட்டு உள்ள பகுதியில் சுதந்திரபோராட்ட தியாகி திருப்பூர் குமரன் சிலை அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த சிலையும் நல்ல முறையில் பராமரிக்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இரவில் ஒளிரும் வகையில்

கோபியை சேர்ந்த ஜி.கே.நசீர் கூறியதாவது:-

கோபி பெரியார் திடலில் பெரியார் சிலை உள்ளது. இந்த சிலை பெரியார் பிறந்தநாள், நினைவுநாள் மற்றும் தலைவர்கள் வருகையின் போது தூய்மை படுத்தப்படுகிறது. இதுபோல் கோபியில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு ஒரு சிறப்பு உண்டு. இந்த சிலை காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் மூப்பனார் முன்னிலையில் முன்னாள் முதல் -அமைச்சர் கருணாநிதி திறந்து வைத்ததாகும். எம்.ஜி.ஆர். கழகத்தின் சார்பில் அமைக்கப்பட்ட இந்த சிலைக்கு இரவில் ஒளிரும் வகையில் மின் விளக்கு அமைக்கப்பட்டு இருந்தது. இப்போது அது எரிவது இல்லை. எனவே கோபியில் தலைவர்கள் சிலைகளை சரியாக பராமரிக்க சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கொடிகாத்த குமரன்

சென்னிமலை கொடிகாத்த குமரன் பேரவை தலைவர் பி.அய்யப்பன் கூறியதாவது:-

சென்னிமலையில் கடந்த 37 ஆண்டுகளுக்கு முன்பு எம்.பி.நாச்சிமுத்து முயற்சியால் கொடிகாத்த குமரன் சிலை அமைக்கப்பட்டது. இந்த சிலையை அப்போதைய துணை ஜனாதிபதி ஆர்.வெங்கட்ராமன் திறந்து வைத்தார். கொடிகாத்த குமரனின் தியாகத்தை போற்றும் வகையில் இந்த இடம் குமரன் சதுக்கம் என்று அழைக்கப்படுகிறது. எங்கள் பேரவை சார்பில் சிலையை பராமரித்து வருகிறோம். குமரனின் பிறந்தநாள், நினைவுநாள் மட்டுமின்றி, இங்குள்ள அரசியல் கட்சி, பொது அமைப்பு பிரமுகர்கள் அவர்களின் பிறந்தநாளின்போது வந்து சிலைக்கு மாலை அணிவிப்பது வழக்கம். யார் வந்தாலும், வரவில்லை என்றாலும் தினமும் சிலையை சுத்தம் செய்து இந்த வளாகத்தை தூய்மையாக வைத்திருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

சென்னிமலையை சேர்ந்த ரூபி சண்முகம் கூறியதாவது:-

சென்னிமலையில் உள்ள பொதுமக்கள் ஒவ்வொருவரிடமும் குறைந்த பட்சம் ரூ.1 என்ற வகையில் வசூலித்து ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் செலவில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு திருவள்ளுவர் சிலை அமைத்தேன். திருவள்ளுவர் தினத்தில் பலரும் வந்து திருவள்ளுவருக்கு மரியாதை செய்வார்கள். மற்ற நாட்களில் யாரும் கண்டுகொள்ளவதில்லை. நான் சிலையை முறையாக பராமரித்து வருகிறேன். சில ஆண்டுகளுக்கு முன்பு திருவள்ளுவர் சிலைகளுக்கு காவி சாயம் பூசப்படும் விரும்பத்தகாத நிகழ்வுகள் நடந்ததால் பாதுகாப்புக்காக கம்பி கூண்டு அமைக்கப்பட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

ஒத்துழைப்பு

அம்மாபேட்டை பகுதியை சேர்ந்த ஜெயராமன், வரதராஜன் ஆகியோர் கூறியதாவது:-

அம்மாபேட்டை ஒன்றிய அலுவலகம், ஒலகடம், எஸ்.பி.கவுண்டனூர் பகுதிகளில் காந்தி சிலை உள்ளது. வெள்ளித்திருப்பூர் அருகே குரும்பபாளையம், பூச்சானி அருகே செம்படாபாளையம் பகுதிகளில் எம்.ஜி.ஆர். சிலைகள் உள்ளன. குருவரெட்டியூர், குறிச்சி சமத்துவபுரத்தில் பெரியார் சிலைகள் உள்ளன. அம்மாபேட்டை போலீஸ் நிலையம் அருகே பாரதியார் சிலை உள்ளது. இங்குள்ள சிலைகள் அந்தந்த பகுதியினர் மற்றும் ஒன்றிய நிர்வாகத்தால் பராமரிக்கப்பட்டு வருகின்றன. பாரதியார் சிலையை காவேரி ரோட்டரி சங்கம் பராமரித்து வருகிறது. 1986-ம் ஆண்டு பிராமணர்கள் சங்கம் மூலம் இந்த சிலை அமைக்கப்பட்டது. தொடர்ந்து சிலை முறையாக பராமரிக்கப்படாத நிலையில் காவேரி ரோட்டரி சங்கத்தினர் பராமரிப்பு உரிமம் பெற்று தூய்மையாக வைத்து இருக்கிறார்கள். சிலை அமைந்து உள்ள பகுதியில் பொது இடத்தில் பலர் ஆக்கிரமிப்பு செய்து கடைகள் வைத்து இருப்பதால், சிலையை சுற்றி தினமும் பொதுமக்கள் தங்களை அறியாமல் அசுத்தம் செய்து வருகிறார்கள். தொடர்ந்து நாங்கள் பராமரிப்பு பணி செய்கிறோம். ஆனால் சிரமமாக உள்ளது. இதை கருத்தில் கொண்டு ஆக்கிரமிப்புகளை அகற்றவும், சிலை பராமரிப்பில் பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்கவும் வேண்டுகிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

ஒரு தலைவர் மறைந்து விட்டால், அவரது பெருமை மற்றும் சிந்தனைகளை மக்கள் அறிந்து கொள்ள சிலைகள் அமைக்கப்படுகிறது. தலைவர்கள் மட்டுமின்றி குடும்ப தலைவர்கள், கிராம தலைவர்கள் உள்பட பலருக்கும் ஆங்காங்கே சிலைகள் அமைக்கப்படுகின்றன. காலப்போக்கில் சிலைகள் பராமரிப்பு இல்லாமல் வீணாகும் நிலையும் உள்ளது. மறைந்த ஒருவருக்கு சிலை அமைக்கப்படுகிறது என்றால், அவர் வாழ்ந்த காலத்தில் எத்தனையோ மனிதர்களுக்கு வழிகாட்டியாக, மறக்க முடியாத சிறப்பு பெற்றவராக இருந்திருக்க வேண்டும். தலைவர்கள் மட்டுமின்றி தங்கள் தந்தை, தாய்க்கு சிலை வைத்து வழிபடும் மக்களும் இருக்கிறார்கள். ஈரோட்டில் ஜவுளி வியாபாரி ஒருவர் தனது பெற்றோரின் சிலையை வைத்து கோவில் கட்டி வழிபாடு செய்து வருகிறார். பெரியாரின் தந்தை வெங்கிட்டநாயக்கருக்கு அவரது சமாதி அமைந்து உள்ள இடத்தில் சிலை உள்ளது. இதுபோன்று தங்கள் வழிகாட்டிகளுக்கு சிலை அமைத்து பலரும் தங்கள் நன்றிக்கடனை செலுத்துகிறார்கள். சிலைகள் வைக்கப்படுவதில் இருக்கும் பெருமையை விட தொடர்ந்து அவை சரியாக பராமரிக்கப்பட்டு வருவதில்தான் பெருமை உள்ளது.


Next Story