செட்டிகுளத்தில் உள்ள தரைப்பாலத்தை மேம்பாலமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படுமா?
வடகாடு தெற்குப்பட்டியில் உள்ள தரைப்பாலத்தில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால், உயர் மட்ட மேம்பாலமாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வடகாடு:
போக்குவரத்து முடங்கியது
புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு தெற்குப்பட்டி அருகே செட்டிகுளம் பகுதியில் உள்ள தரைப்பாலமானது, வடகாட்டில் இருந்து கொத்தமங்கலம் செல்லும் 2 ஊர்களை இணைக்கும் முக்கிய ஊரக சாலையாக உள்ளது. இப்பகுதிகளில் கடந்த 12 ஆண்டுகளுக்கு பின்னர் வந்த காட்டாற்று வெள்ளத்தால் இந்த செட்டிகுளம் தரைப்பாலமே தெரியாத அளவுக்கு காட்டாற்று மழை தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் 2 ஊர்களுக்கு இடையேயான போக்குவரத்து முற்றிலும் முடங்கியது.
இதனால் இவ்வழியாக சென்ற அரசு பஸ்கள் கூட நிறுத்தப்பட்டன. மேலும் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள், வியாபாரிகள் மற்றும் இப்பகுதிகளில் அதிக அளவில் விவசாயிகள் மூலமாக உற்பத்தி செய்யப்பட்ட விவசாய விளை பொருட்களை அடுத்த ஊர்களில் உள்ள கமிஷன் கடைகளுக்கு கூட கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
மேம்பாலமாக மாற்ற கோரிக்கை
இதனையடுத்து இந்த தரைப்பாலத்தை திருவரங்குளம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நேரில் வந்து ஆய்வு செய்தனர். ஆனால் அவர்கள் அதன்பிறகு இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது இத்தரைப்பாலத்தின் நடுவே சிறிய அளவிலான பள்ளம் தோன்றிய அப்பள்ளம் தற்சமயம் பெரிய அளவிலான பள்ளமாக மாறி உள்ளது. எதேனும் மிகப்பெரிய அசம்பாவிதம் ஏற்படும் முன்பு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த ஆண்டு போல இந்த ஆண்டும் கன மழை பெய்து காட்டாற்று மழை தண்ணீர் வந்து இந்த செட்டிகுளம் தரைப்பாலத்தை கடந்து போகும்போது மீண்டும் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட கூடிய சூழல் நிலவும் நிலை உள்ளது. இனிமேலாவது இந்த தரைப்பாலத்தை சீரமைத்து உயர் மட்ட மேம்பாலமாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வடகாடு மற்றும் சுற்றுவட்டார பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-
மேம்பாலமாக மாற்ற வேண்டும்
வடகாடு பள்ளத்திவிடுதி பகுதியை சேர்ந்த ராஜசேகரன் கூறுகையில், இப்பாலத்தை மேம்பாலாமாக மாற்றினால் அனைவருக்கும் பயன் உள்ளதாக இருக்கும். இதனை உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.
பொதுமக்கள் வேலை பாதிப்பு
அனவயல் பகுதியை சேர்ந்த பாஸ்கர் கூறுகையில், இந்த வழியாக ஒரு அத்தியாவசிய தேவைகளுக்கு செல்லும் வழியில் திடீரென இந்த தரைப்பாலத்தில் காட்டாற்று தண்ணீர் செல்கின்றது. இதனால் பலரது வேலைகள் அதிக அளவில் பாதிக்கப்படுவதாகவும் இப்பாலத்தை மேம்பாலாமாக மாற்ற நடவடிக்கை வேண்டும் என்று கூறினார்.
மாணவர்கள் பள்ளிக்கு செல்ல முடியவில்லை
வடகாடு பரமநகர் பகுதியை சேர்ந்த சாத்தையா கூறுகையில், வடகாடு தெற்குப்பட்டி செட்டிகுளம் பகுதியில் உள்ள தரைப்பாலத்தில் கடந்த ஆண்டு வந்த காட்டாற்று வெள்ளத்தால் மாணவர்கள் உரிய நேரங்களில் பள்ளிக்கு செல்ல முடியவில்லை. மேலும் அவர்கள் பெரும் சிரமப்பட்டு வந்தனர்.
மேலும் தேர்வு நேரங்களில் திடீரென காட்டாற்று வெள்ளம் வந்தால் மாணவர்கள் தேர்வு எழுத முடியாத நிைல ஏற்படும். எனவே தரைப்பாலத்தை உயர் மட்ட மேம்பாலமாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.