கொள்ளிடம் ஆற்றங்கரையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?


கொள்ளிடம் ஆற்றங்கரையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?
x

அடிக்கடி உடைப்பு ஏற்படும் கொள்ளிடம் ஆற்றங்கரையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே அளக்குடி கிராமத்தில் கொள்ளிடம் ஆறு மோதி திரும்பும் இடத்தில் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு காங்கிரீட் தடுப்புச் சுவர் கட்டப்பட்டிருந்தது. கடந்த 2018-ம் ஆண்டு கொள்ளிடம் ஆற்றில் அதிக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபோது கரை பகுதியை தண்ணீர் வேகத்துடன் வந்து மோதியதால் காங்கிரீட் தூண்கள் மற்றும் தடுப்புச் சுவர் உடைந்து தண்ணீருக்குள் விழுந்து விட்டது. மேலும் தொடர் வெள்ளப்பெருக்கால் ஆற்றங்கரை பகுதியும் உடைய ஆரம்பித்தது. இதனையறிந்த அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மணல் மூட்டைகளை அடுக்கி உடைப்பை தற்காலிகமாக சரி செய்தனர்.

நிரந்தர தீர்வு

அதனைத்தொடர்ந்து கொள்ளிடம் ஆற்றில் அதிகளவு தண்ணீர் திறந்து விடும் போதெல்லாம் இந்த உடைப்பு பகுதியில் பாறாங்கற்கள் மற்றும் பனை மரங்களை கொண்டு வந்து போட்டு தற்காலிகமாக சரி செய்யப்பட்டு வருகிறது. சமீபத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபோதும் இதேநிலை தான் நீடித்தது. கடந்த 2018-ம் ஆண்டிலிருந்து அளக்குடி கான்கிரீட் சுவர் உடைப்பு ஏற்பட்டதிலிருந்து அந்த கரை பகுதியை தற்காலிகமாக அடைக்கும் பணி மட்டுமே நடைபெற்று வருகிறது. ஆனால், நிரந்தர தீர்வு காணப்படவி்ல்லை.

பொதுமக்கள் எதிர்பார்ப்பு

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், அளக்குடி கிராமத்தில் கொள்ளிடம் ஆறு மோதி திரும்பும் இடத்தில் இருந்த தடுப்புச்சுவர் இடிந்து தண்ணீரில் விழுந்து விட்டது. இதனால், கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போதெல்லாம் ஊருக்குள் தண்ணீர் புகுந்து விடுகிறது. இதனால், கிராமமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். ஆகவே, அளக்குடி கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றங்கரையை நிரந்தமாக சீரமைக்கவும், கொள்ளிடம் ஆற்றின் வலது கரையை மேம்படுத்தி காங்கிரீட் சுற்றுச் சுவர் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

நிரந்தர தீர்வு

இதுகுறித்து அப்பகுதி விவசாயி நெடுமாறன் கூறுகையில், கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போதெல்லாம் அளக்குடி கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் மிகவும் பாதிக்கப்படுகிறாா்கள். ஆகவே, இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீா்வு காணும் பொருட்டு இங்குள்ள கொள்ளிடம் கரையை பலப்படுத்துவதுடன், விழுந்த காங்கிரீட் சுவரை மீண்டும் கட்டிக் கொடுக்க வேண்டும். அப்போது தான் அடுத்து வரும் வெள்ள பாதிப்புகளில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க முடியும் என்றார்.



Next Story