கோடைகால உழவு மானியம் கிடைக்க வழிவகை செய்யப்படுமா?


கோடைகால உழவு மானியம் கிடைக்க வழிவகை செய்யப்படுமா?
x

வடகாடு சுற்றுவட்டார பகுதிகளில் கோடைகால உழவு மானியம் கிடைக்க வழிவகை செய்யப்படுமா? என்று விவசாயிகள் எதிர்பார்த்து உள்ளனர்.

புதுக்கோட்டை

கோடை உழவு மானியம்

கோடை வெயில் காலங்களில் பெரும்பாலான விவசாயிகள் தங்களது விளை நிலங்களை உழவு செய்து சிறிது காலம் பொறுத்திருந்து, பின்னர் சாகுபடி பணிகளில் ஈடுபடுவது வழக்கம். அப்படி உழவு பணிகளை மேற்கொள்ள விரும்பும் விவசாயிகளுக்கு உதவும் வகையில் பதிவு செய்யும் விவசாயிகளுக்கு கோடை கால உழவு மானியம் அரசு வேளாண்துறை மூலமாக வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. ஆனால் புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு சுற்றுவட்டார பகுதிகளில் இது போன்ற அரசு திட்டம் இருப்பது குறித்து விவசாயிகள் யாரும் அறியாத நிலை இருந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

நவீன வேளாண் கருவிகள்

மேலும் வளர்ந்து வரும் நவீன காலத்திற்கு ஏற்ப எண்ணற்ற வேளாண் பண்ணை கருவிகள் இருந்தும் அவைகள் அனைத்தும் ஏழை, எளிய விவசாயிகளுக்கு கிடைப்பது, அரிதாகவே இருந்து வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் களையெடுப்பு சாதனம், கடலை, உளுந்து, சோளம், எள் உள்ளிட்டவைகள் விதைக்கும் விதைப்பு கருவிகள், தண்ணீர் பைப்புகள், சொட்டு நீர் பாசனம் இப்படி எண்ணற்ற விவசாய பண்ணை கருவிகள் இருந்தும் அவற்றை மானிய விலைகளில் பெறுவது குறித்து, விவசாயிகளிடையே போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவில்லை எனவும் இப்பகுதி விவசாயிகள் குறை கூறி வருகின்றனர். மேலும் இப்படி பல்வேறு வகையான வேளாண் பொறியியல் துறை சார்ந்த பண்ணை கருவிகளும், இப்பகுதி விவசாயிகளுக்கு எட்டா கனியாகவே இருந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து இப்பகுதி விவசாயிகள் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-

வழிவகை செய்ய வேண்டும்

மாங்காடு பகுதியை சேர்ந்த விவசாயி முத்து:- என்ன கோடை கால உழவு மானியமா? இப்படி ஒன்று இருப்பதே இப்பகுதிகளில் உள்ள பெரும்பாலான விவசாயிகளுக்கு தெரியாத நிலைதான் உள்ளது. அனைத்து விவசாயிகளுக்கும் பயன்பெறும் வகையிலும் பண்ணை கருவிகளும் கிடைக்க அரசு வழிவகை செய்ய வேண்டும்.

விவசாயிகள் பயன்பெற வேண்டும்

வடகாடு பகுதியை சேர்ந்த ஆறுமுகம்:- இப்பகுதிகளில் விவசாயிகள் ஆண்டு முழுவதும் கூட பருவத்திற்கு ஏற்ப பயிர் செய்து வருகின்றனர். ஆண்டு முழுவதும் உழைப்பை விதைத்து விவசாயிகள் சாகுபடி பணிகளில் ஈடுபட்டு வந்தாலும் கடைசியில் கணக்கு பார்க்கையில் எதுவுமே மிச்சப்படாத நிலை தான் இருந்து வருவதாகவும் பல விவசாயிகள் வருத்தப்பட்டு வருகின்றனர். இந்த நிலை மாற வேளாண் துறை அதிகாரிகள் உதவ வேண்டும்.

மாங்காடு பகுதியை சேர்ந்த விவசாயி மாணிக்கம்:- இப்பகுதிகளில் வேளாண் பொறியியல் துறை சார்ந்த அலுவலகம் அமைய வேண்டும். இதன் வாயிலாக விவசாயிகள் பயன்பெற வாய்ப்பு உள்ளது.

அரசின் கடமை

வடகாடு பகுதியை சேர்ந்த செல்வம்:- ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு விவசாயிகள் மற்றும் அவர்களின் மூலமாக, நடைபெறும் விவசாயமும் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆனால் இப்போது பெயரளவிற்கு மட்டுமே கூறப்படுகிறது. உண்மையில் விவசாயிகள் படும் துயரம் சொல்லி மாளாது. இதனால் விவசாயிகள் பயன்பெறும் வகையில், கிடைக்கும் நல்ல பல அரசு திட்டங்களை அவர்களிடம் கொண்டு சேர்ப்பதும் அரசின் கடமையாகும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story