சாலையோரம் கிடக்கும் தடுப்பு கம்பிகள் அகற்றப்படுமா?
சாலையோரம் கிடக்கும் தடுப்பு கம்பிகள் அகற்றப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
தஞ்சை தொம்பன்குடிசை சாலையின் மையப்பகுதியில் சிறிய அளவிலான பூங்கா ஒன்று பராமரிப்பு இன்றி காணப்படுகிறது. இந்த சாலையோர பூங்காவை சுற்றிலும் தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்டு இருந்தது. ஆனால் இரவு நேரங்களில் மது அருந்துபவர்கள் இந்த இரும்பு தடுப்புகளை தாண்டி சென்று பூங்காவின் மையப்பகுதியில் அமர்ந்து மது அருந்தி வருகின்றனர். இந்தநிலையில் இந்த பூங்காவை சுற்றி அமைக்கப்பட்டிருந்த தடுப்பு கம்பிகள் கீழே சாய்ந்து சாலையோரத்தில் கிடக்கிறது.கடந்த 2 நாட்களாக அப்படியே சாலையோரம் கிடக்கிறது. பகல் நேரத்தில் இந்த தடுப்பு கம்பிகள் கிடப்பது வாகன ஓட்டிகளுக்கு தெரியும். ஆனால் இரவு நேரத்தில் இவைகள் கிடப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் இந்த தடுப்பு கம்பிகள் மீது வாகனங்களை விடுவதற்கு வாய்ப்பு உள்ளது. எனவே தடுப்பு கம்பிகளை சம்பந்தப்பட்டதுறையினர் அகற்றுவதுடன் பூங்காவை முறையாக பராமரிக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாகும்.