துண்டிக்கப்பட்ட நடைபாதை சீரமைக்கப்படுமா?
மேல் கூடலூரில் துண்டிக்கப்பட்ட நடைபாதை சீரமைக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
கூடலூர்,
மேல் கூடலூரில் துண்டிக்கப்பட்ட நடைபாதை சீரமைக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
வெள்ளப்பெருக்கு
கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட 20-வது வார்டு பகுதியில் தாலுகா தலைமை அரசு ஆஸ்பத்திரி, தனியார் பள்ளிகள் உள்பட ஏராளமான வீடுகள் உள்ளது. 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். தேசிய நெடுஞ்சாலையில் உள்ளதால் ஏராளமான வாகனங்கள் இயக்கப்படுகிறது. இங்கு அரசு ஆஸ்பத்திரி, தனியார் பள்ளிகள் இருப்பதால் மக்கள் மற்றும் மாணவ-மாணவிகள் நடமாட்டம் அதிகமாக காணப்படும்.இந்தநிலையில் அரசு ஆஸ்பத்திரி எதிரே மேல் கூடலூர் கல்லறை தோட்டம் வழியாக ஓ.வி.எச். சாலையை இணைக்கும் வகையில் சில ஆண்டுகளுக்கு முன்பு அனைத்து தரப்பினரின் கோரிக்கையை ஏற்று நடைபாதை அமைக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் பயனடைந்து வந்தனர். இந்த நிலையில் கூடலூர் பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் கனமழை பெய்து வருவதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நடைபாதையில் பாய்ந்தோடியது.
உடைந்த நடைபாதை
இதில் நடைபாதை பலம் இழந்து பல இடங்களில் உடைந்தது. தொடரும் மழை பெய்து வெள்ளம் ஏற்பட்டதால் உடைந்து துண்டானது. இதனால் பொதுமக்கள், மாணவர்கள் நடந்து செல்ல முடியாமல் அவதி அடைந்து வருகின்றனர். இதன் காரணமாக ஆஸ்பத்திரி உள்பட பல்வேறு இடங்களுக்கு செல்வதற்கு சுற்றி செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் நடைபாதையை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதுதொடர்பாக நகராட்சி அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். ஆனால், இதுவரை அதற்கான பணிகள் தொடங்கவில்லை. இதனால் நடைபாதை புதர் மண்டி காணப்படுகிறது. அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் உடைந்து துண்டிக்கப்பட்ட நடைபாதையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.