பக்கிங்காம் கால்வாயில் படகு அணையும் தளம் நீட்டிக்கப்படுமா?
கொள்ளிடம் அருகே பக்கிங்காம் கால்வாயில் படகு அணையும் தளம் நீட்டிக்கப்படுமா? என்று மீனவர்கள் எதிா்பார்த்து உள்ளனர்.
கொள்ளிடம்:
கொள்ளிடம் அருகே பக்கிங்காம் கால்வாயில் படகு அணையும் தளம் நீட்டிக்கப்படுமா? என்று மீனவர்கள் எதிா்பார்த்து உள்ளனர்.
மீன்பிடி துறைமுகம்
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள பழையாறு மீன்பிடி துறைமுகம் மூலம் தினமும் விசைப்படகுகள், பைபர் படகுகள் மற்றும் நாட்டு படகுகள் மூலம் 5ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குள் சென்று மீன்பிடித்து வருகின்றனர். இந்த துறைமுகத்தின் வழியாக மடவாமேடு, கீழகொட்டாய்மேடு, நடுகொட்டாய்மேடு, கூழையார், கொடியம்பாளையம் உள்ளிட்ட மீனவ கிராமங்களிலிருந்து நூற்றுக்கணக்கான படகுகள் மூலம் மீன்பிடிக்கப்பட்டு வருகிறது.
மணல்மேடு
பழையாறு துறைமுகத்தில் படகு அணையும் தளம் உள்ளது. படகு அணையும் தளத்தை ஒட்டி கொள்ளிடம் ஆற்றில் இருந்து தண்ணீர் சென்று வங்கக்கடலில் கலந்து வருகிறது. பழையாறு துறைமுகத்தில் உள்ள படகு அணையும் தளத்தில் அனைத்து விசை படகுகளும் நிறுத்தப்படுகிறது. கொள்ளிடம் ஆற்றில் அதிகப்படியான தண்ணீர் வெளியேற்றும் போது பழையாறு துறைமுகத்தை ஒட்டி வங்கக்கடலில் சென்று கலக்கிறது.
இந்தநிலையில் அடிக்கடி ஏற்படும் கடல் சீற்றத்தால் கடல் முகத்துவாரத்தின் வழியே தண்ணீர் உள்ளே புகுந்து படகு நிறுத்தப்பட்டுள்ள இடத்தில் மணல்மேடு ஏற்பட்டு விடுகிறது. இந்த மணல்மேட்டை அகற்றுவதற்கு மீனவர்கள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில் மீன்வளத்துறை சார்பில் நடவடிக்கை எடுத்து மணல்மேட்டை அகற்றி வருகின்றனர்.
பக்கிங்காம் கால்வாய்
கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் எப்போதெல்லாம் அதிக அளவில் திறந்து விடப்படுகிறதோ அப்போதெல்லாம் படகு நிறுத்தப்பட்டுள்ள இடத்தில் மண்மேடு ஏற்பட்டு விடுகிறது. இதனால் நூற்றுக்கணக்கான படகுகளை , படகு அணையும் தளத்தில் நிறுத்த முடியாத நிலை ஏற்பட்டு விடுகிறது. இந்நிலையில் துறைமுகத்தை ஒட்டி சென்று கொண்டிருக்கும் பக்கிங்காம் கால்வாய் படகுகளை நிறுத்துவதற்கு ஏற்ற கால்வாயாக இருந்து வருகிறது.
படகுகள் சேதம்
இது குறித்து பழையார் மீனவர்கள் கூறியதாவது:-
பக்கிங்காம் கால்வாய் பழையாறு மீனவர்களுக்கு ஒரு இயற்கை கொடுத்த கொடையாக இருந்து வருகிறது. கடல் சீற்றம் ஏற்படு்ம் போதும், மழைக்காலத்தில் அதிக தண்ணீர் கொள்ளிடம் ஆற்றில் வெளியேற்றும் போதும் துறைமுகத்தில் படகு அணையும் தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள படகுகள் ஒன்றோடு ஒன்று மோதி சேதம் ஏற்படுகிறது. இந்த சேதத்தை தவிர்க்க முடியவில்லை.
இதனை தவிர்க்கும் வகையில் பழையாறு மீனவர்கள் பக்கிங்காம் கால்வாயை தேர்வு செய்து அதில் விசைப்படகுகள் மற்றும் பைபர் படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி விடுகின்றனர். பக்கிங்காம் கால்வாயில் படகுகள் நிறுத்தப்படுவதால் காற்று வேகமாக வீசும் போதும் படகுகள் சேதத்திலிருந்து பாதுகாக்கப்படுகிறது.
அலையாத்தி காடுகள்
மேலும் பக்கிங்காம் கால்வாயை ஒட்டி அழகான அலையாத்தி காடுகள் உள்ளன.
அலையாத்தி காடுகள் பழையாறு துறைமுகம் கொடியம்பாளையம் மற்றும் கோட்டைமேடு உள்ளிட்ட பகுதிகளில் பறந்து விரிந்து கிடக்கிறது. இந்த அலையாத்தி காடுகள் பக்கிங்காம் கால்வாயை ஒட்டி அதிக அளவில் வளர்ந்துள்ளன. அலையாத்தி காடுகள் சுனாமி பேரலைகளையும் தடுத்து பாதுகாக்கும் வல்லமை கொண்டதாக இருப்பதால் பக்கிங்காம் கால்வாயில் படகுகள் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டு வருகின்றன. ஆனால் பழையாறு துறைமுகத்தில் பிரத்தியேகமாக அமைக்கப்பட்டுள்ள படகு அணையும் தளத்தில் தொடர்ந்து படகுகள் நிறுத்தப்பட்டு வந்தாலும் இயற்கை சீற்றம் ஏற்படும் போது அனைத்து படகுகளையும் நிறுத்த முடியாமல் சில படகுகள் மட்டுமே நிறுத்தும் சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது.
எனவே இந்த துறைமுகத்தில் படகு அணையும் தளத்தை மேம்படுத்தும் போது பக்கிங் கால்வாயையும் மேம்படுத்தி அதில் அதிக படகுகளை நிறுத்தும் வகையில் படகு அணையும் தளத்தை துறைமுகத்திலிருந்து தொடங்கி கால்வாய் வரை நீட்டித்து பக்கிங்காம் கால்வாயில் அதிக படகுகளை நிறுத்துவதற்கு ஏற்றவாறு படகு அணையும் தளம் அமைக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினா்.
போதுமானதாக இல்லை
இது குறித்து கொள்ளிடம் அருகே பழையாறு கிராமத்தைச் சேர்ந்த உதயன் கூறியதாவது:-
பழையாறு ்துறைமுகம் இயற்கை துறைமுகமாக விளங்கி வருகிறது. இந்த மீன்பிடி துறைமுகத்தில் மீனவ கிராமங்களில் இருந்து 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் பழையார் மீன்பிடி துறைமுகத்தில் உள்ள படகு அனையும் தளத்தில் நிறுத்தப்பட்டு வந்தது. அங்கு இட நெருக்கடியால் அடிக்கடி படகுகள் சேதம் அடைந்து வருகிறது.
தற்போது மீனவர்கள் பக்கிங் கால்வாயில் உள்ள படகு அனையும் தளத்தில் படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ஆனால் அந்த இடமும் போதுமானதாக இட வசதியுடன் இல்லை.
பக்கிங்காம் கால்வாயில் படகு அனையும் தளத்தை நீடித்து, பக்கிங்காம் கால்வாயை ஆழப்படுத்தி மீனவர்கள் தங்கள் விசைப்படகு மற்றும் நாட்டுப் படகுகளை பாதுகாப்பாக நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.