குண்டும், குழியுமான புங்கோடை சாலை சரிசெய்யப்படுமா?
குண்டும், குழியுமான சாலையால் நேரத்திற்கு செல்ல முடியவில்லை, அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இதனால் அந்த சாலை சரிசெய்யப்படுமா? என வாகன ஓட்டிகள் எதிர்பார்த்துள்ளனர்.
குண்டும், குழியுமான சாலை
கரூர் மாவட்டம் வேட்டமங்கலம் ஊராட்சி கொடுமுடி- பரமத்தி வேலூர் செல்லும் நெடுஞ்சாலையில் நொய்யல் அருகே புங்கோடை பகுதியில் இருந்து கரூர் -ஈரோடு நெடுஞ்சாலையில் உள்ள குந்தாணிபாளையம் நத்தமேடு வரை சுமார் 7 கிலோமீட்டர் வரைக்கும் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் தார்சாலை போடப்பட்டது. இந்த தார்சாலை வழியாக ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.
இந்நிலையில் தார்சாலை போடப்பட்டு பல ஆண்டுகள் ஆனதன் காரணமாகவும், தரமற்ற தார்சாலை போட்டதன் காரணமாகவும் புங்கோடை முதல் குந்தாணிபாளையம் நத்தமேடு வரை வழி நெடுகிலும் தார்சாலை மிகவும் சிதிலமடைந்து குண்டும், குழியுமாகவும் உள்ளது.
வாகனங்கள் பழுது
இந்த தார்சாலை வழியாக தினமும் பள்ளி, கல்லூரி பஸ்கள், லாரிகள், கார்கள், டிராக்டர்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் சென்று வருகின்றன. அதேபோல் அப்பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்களும், விவசாயிகளும் தினமும் நடந்தும் சென்று வருகின்றனர். இந்நிலையில் தார்சாலை போடப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தார்சாலை பழுதடைந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இந்த தார்சாலை வழியாக நடந்து கூட செல்ல முடியாத மிகவும் மோசமான நிலையில் உள்ளது.
இந்நிலையில் விவசாயிகள் பெரிய வாகனங்களில் பயிர்களுக்கு போடப்படும் உரம் மற்றும் பல்வேறு பொருட்களையும் எடுத்துச் சென்று பயிர்களுக்கு போட்டும், விளை நிலங்களில் விளைந்த விளை பொருட்களையும் கொண்டு வருகின்றனர். அப்போது வாகனங்கள் நிலை தடுமாறி சென்று வருகின்றன. பகல் நேரத்தில் இந்த வழியாக அனைத்து வாகனங்களும் ஊர்ந்து செல்கின்றன. இரவு நேரத்தில் வாகனங்கள் வரும்போது குழிகள் இருப்பது தெரியாமல் வாகனத்தின் டயர் குழியில் இறங்கி விபத்து ஏற்பட்டு வருகிறது.
கோரிக்கை
கடந்த ஓராண்டுக்கு முன்பு இந்த தார்சாலை போடுவதற்கு டெண்டர் விடப்பட்டது. டெண்டர் எடுத்த ஒப்பந்ததாரர் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு காளிபாளையம் பகுதியில் தார்சாலையின் குறுக்கே குழாய் அமைத்து பாலம் போட்டார். அதே போல் வேட்டமங்கலம் காலனி அருகே தார்சாலையின் குறுக்கே குழாய் அமைத்து பாலம் போட்டார்.
அதோடு சரி இதுவரை இந்த பழுதடைந்த சாலையை சீரமைத்து தார் சாலை போடுவதற்கான எந்த முகாந்திரமும் இல்லை. இதனால் தொடர்ந்து வாகன ஓட்டிகளும், பொதுமக்களும், விவசாயிகளும், மாணவ, மாணவிகளும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே டெண்டர் எடுத்த ஒப்பந்ததாரர் மிகவும் மோசமான தார்சாலையை விரைந்து சீரமைத்து நல்ல தரமான தார்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள், வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறிய கருத்துக்கள் பின்வருமாறு:-
வெகுநேரம் ஆகிறது
குளத்துப்பாளையம் பகுதியை சேர்ந்த பால்வேன் டிரைவர் சவுந்தர்:-
நான் இந்த சுற்று வட்டார பகுதிகளில் உள்ள பால் டெப்போக்களில் இருந்து வாகனத்தில் பால் கேன்களை ஏற்றிக்கொண்டு வழக்கமாக இறக்க வேண்டிய இடங்களுக்கு கொண்டு செல்கிறேன். இந்த தார் சாலை நெடுகிலும் மிகவும் மோசமாக உள்ளது. இதனால் இந்த சாலை வழியாக வாகனத்தில் வேகமாக செல்ல முடியாமல் ஊர்ந்து செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. அதனால் மற்ற பகுதிகளுக்கு செல்வதற்கு வெகுநேரம் ஆகிறது. இதனால் குறிப்பிட்ட நேரத்திற்கு வாங்கிய பாலை கொண்டு போய் சேர்க்க முடியவில்லை. எனவே விரைந்து நடவடிக்கை எடுத்து மிகவும் மோசமான நிலையில் உள்ள இந்த தார்சாலையை சீரமைக்க வேண்டும்.
குறிப்பிட்ட நேரத்தில்...
குந்தாணிபாளையம் பகுதியைச் சேர்ந்த எலக்ட்ரீசியன் ஞானசுந்தரம்:-
நான் வேட்டமங்கலம் ஊராட்சி பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு எலக்ட்ரீசியன் வேலை செய்வதற்காக எனது மோட்டார் சைக்கிளில் சென்று வேலையை முடித்துவிட்டு வருகிறேன். ஆனால் சாலை நெடுகிலும் பழுதடைந்து குண்டும், குழியுமாக இருப்பதால் எனது இருசக்கர வாகனத்தில் குறிப்பிட்ட நேரத்தில் வேலை செய்யும் வீடுகளுக்கு செல்ல முடியவில்லை. தார் சாலையை சரி செய்ய டெண்டர் விடப்பட்டு ஒரு வருடங்கள் ஆகியும் இதுவரை நடவடிக்கை எடுக்க வில்லை. இதனால் இப்பகுதியை சேர்த்தவர்கள் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.
வேலைக்கு செல்ல முடியவில்லை
குளத்துப்பாளையம் பகுதியைச் சேர்ந்த கூட்டுறவு வங்கி முன்னாள் இயக்குனர் அப்பாவு:-
நான் வேலைக்கு செல்வதற்கு தினமும் மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு கூலி வேலை செய்து முடித்துவிட்டு மீண்டும் வீடு திரும்புவேன். வேலைக்கு செல்வதற்கு நேரமாக புறப்பட்டு சென்றால் மட்டுமே இந்த பழுதடைந்த சாலை வழியாக சென்று கூலி வேலைக்கு செல்ல முடியும். கால தாமதமாகவோ, குறிப்பிட்ட நேரத்திற்கு இந்த சாலை வழியாக சென்றால் வேலைக்கு செல்ல முடியாது. காலதாமதம் ஏற்பட்டுவிடும். இதேபோல் ஏராளமான தொழிலாளர்கள் பாதிப்படைந்து வருகின்றனர். தார்சாலை போடுவதற்கு பூமி பூஜை போடப்பட்டு சுமார் ஒரு ஆண்டுகள் ஆகிறது. இதுவரை பணி தொடங்கவில்லை எனவே காலம் தாழ்த்தாமல் விரைந்து தார் சாலையை புதுப்பிக்க வேண்டும்.
உடல் வலி ஏற்படுகிறது
வேட்டமங்கலம் பகுதியைச் சேர்ந்த வெற்றிலை விவசாயி செல்லப்பன்:-
நான் வேட்டமங்கலம் பகுதியில் இருந்து இந்த பழுதடைந்த தார்சாலை வழியாக தினமும் பரமத்தி வேலூர் பகுதியில் செயல்பட்டு வரும் வெற்றிலை ஏல மார்க்கெட்டிற்கு வெற்றிலை சுமைகளை ஏற்றி கொண்டு சென்று விற்பனை செய்து வருகிறேன். தினமும் இந்த வழியாகத்தான் செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. ஆனால் எனது இருசக்கர வாகனத்தில் இந்த தார்சாலை வழியாக மிகவும் குறைந்த வேகத்தில் மட்டுமே செல்ல முடியும். தினமும் நிலை தடுமாறி சென்று வருகிறேன். இதனால் எனக்கு அடிக்கடி இடுப்பு வலி, உடல் வலி ஏற்பட்டு விடுகிறது. எனவே இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.