மூடப்பட்ட நொய்யல் ரெயில் நிலையம் மீண்டும் செயல்பாட்டுக்கு வருமா?


மூடப்பட்ட நொய்யல் ரெயில் நிலையம் மீண்டும் செயல்பாட்டு கொண்டு வரவேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கரூர்

நொய்யல் ரெயில் நிலையம்

கரூர் மாவட்டம் நொய்யல் வழியாக இரும்பு பாதை செல்கிறது. இந்த வழியாக ஈரோடு, திருப்பூர், கோவை, பாலக்காடு வழியாக கேரளா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும், அதேபோல் கரூர், திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை திருநெல்வேலி, சென்னை, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு பயணிகள் ரெயில்கள், விரைவு ரெயில்கள், சரக்கு ரெயில்கள் இயக்கப்படுகிறது.

இந்தநிலையில் கடந்த 70 ஆண்டுகளுக்கு முன்பு நொய்யல் சுற்று வட்டாரப்பகுதி மக்கள், வியாபாரிகள், பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகளின் நலன் கருதி நொய்யல் பகுதியில் ரெயில் நிலையம் அமைக்கப்பட்டது.

பால் பண்ணையாளர்கள்

இந்த ரெயில் நிலையத்தில் நின்று செல்லும் பயணிகள் ரெயில்கள் மூலம் காலை முதல் இரவு வரை பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், வியாபாரிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் பயன் அடைந்தனர். அதேபோல் நொய்யல் சுற்றுவட்டார பகுதிகளில் செயல்பட்டு வந்த பால் பண்ணையாளர்கள் விவசாயிகளிடமிருந்து வாங்கிய பாலில் இருந்து வெண்ணெயை எடுத்துவிட்டு பின்னர் அந்த பாலை நன்கு காய வைத்து பின்னர் ஆறவைத்து அதை தயிராக்கி கோவை, கேரளா, திருப்பூர், ஈரோடு மற்றும் திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை, கும்பகோணம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு பார்சல் மூலம் தினமும் பயணிகள் ரெயிலில் அனுப்பி வந்தனர்.

இதேபோல் நொய்யல் சுற்று வட்டார பகுதிகளில் செயல்பட்டு வரும் வெற்றிலை வியாபாரிகள் வெற்றிலை சுமைகளை பயணிகள் ரெயில்கள் மூலம் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வந்தனர்.

ரெயில் நிலையம் மூடப்பட்டது

இந்தநிலையில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு ரெயில் நிலையத்திற்கு பயணிகள் மற்றும் பார்சல்கள் மூலம் வந்த வருமானம் போதாததால் நொய்யலில் செயல்பட்டு வந்த ரெயில் நிலையம் மூடப்பட்டது. மேலும் அந்த ரெயில் நிலையத்தில் நின்று சென்ற பயணிகள் ரெயில்களும் நிறுத்தப்பட்டன. இதன் காரணமாக ரெயில் மூலம் பால், தயிர், வெண்ணெய், வெற்றிலை போன்ற பல்வேறு பொருட்களை அனுப்பி வைத்தவர்கள் சிரமப்பட்டு வருகின்றனர். அதேபோல் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளும் ரெயிலில் செல்ல முடியாமல் பஸ்களுக்கு காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

ரெயில் நிலையம் மூடப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் ரெயில் நிலையம் முழுவதும் சிதிலமடைந்து பல்வேறு செடி, கொடிகள் முளைத்து உள்ளன. அதே போல் கதவு, ஜன்னல் போன்றவற்றில் இருந்த மரப்பலகைகளை கரையான் அரித்து மிகவும் பழுதடைந்து உள்ளது. ரெயில்வே நிலையம் பாழடைந்த மண்டபமாக காட்சியளிக்கிறது. இதேபோல் ரெயில்வே நடைமேடை இருக்கும் இடம் தெரியாமல் போய்விட்டது.

திறக்க கோரிக்கை

இந்தநிலையில் பொதுமக்கள், பயணிகள், மாணவ- மாணவிகள், வியாபாரிகள் நலன் கருதி நொய்யல் பகுதியில் சிதிலமடைந்து இருக்கும் கட்டிடத்தை அகற்றிவிட்டு புதிதாக ரெயில் நிலையம் கட்டி, நடைமேடை அமைக்கப்பட்டு பயணிகள் ரெயில்கள் நொய்யலில் நின்று செல்ல மத்திய ரெயில்வே மந்திரி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

செல்லாண்டியம்மன் கோவில்

நொய்யல் பகுதியை சேர்ந்த பசுபதி:- கடந்த 70 ஆண்டுகளுக்கு முன்பு நொய்யல் பகுதியில் ரெயில் நிலையம் உருவாக்கப்பட்டது. இந்த ரெயில்வே நிலையத்தின் வழியாக மாணவ-மாணவிகள், வியாபாரிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் சென்று வந்தனர். அதேபோல் நொய்யலில் பிரசித்தி பெற்ற செல்லாண்டியம்மன் கோவிலுக்கும் பல்வேறு பகுதியில் இருந்து பயணிகள் ரெயில் மூலம் இங்கு வந்து சென்றனர். இந்தநிலையில் பயணிகளின் எண்ணிக்கை குறைந்ததால் ரெயில்வே நிலையத்தை மூடி விட்டார்கள். இதனால் இந்த வழியாக ரெயில்கள் மூலம் சென்றவர்கள் பாதிப்படைந்துள்ளனர். எனவே நொய்யல் ரெயில் நிலையத்தை மீண்டும் திறக்க ரெயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வாழைத்தார்

சேமங்கி பகுதியை சேர்ந்த விவசாயி மாரப்பன்:- நொய்யல் ரெயில்வே நிலையத்தில் கோயம்புத்தூரில் இருந்து வரும் ரெயில்களில் திருச்சிக்கும் மற்றும் பல்வேறு பகுதிகளுக்கும், திருச்சி பகுதியில் இருந்து வரும் ரெயில்களில் ஈரோடு, கோவை, பாலக்காடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும் விவசாயிகள் வாழைத்தார்களையும் மற்றும் பல்வேறு விளை பொருட்களையும் அனுப்பி வைத்தோம். அதேபோல் இங்குள்ள பால் வியாபாரிகள் இந்த வழியாக செல்லும் பயணிகள் ரெயில் மூலம் வெண்ணெய் எடுக்கப்பட்ட பால், தயிர், வெண்ணெய் போன்றவற்றை பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ரெயில்வே நிலையத்தை மூடி விட்டதால் ரெயில்கள் மூலம் அனுப்பப்படும் அனைத்து பொருட்களும் அனுப்ப முடியாமல் தடை ஏற்பட்டுள்ளது. எனவே விவசாயிகளுக்கு உதவும் வகையில் இந்த ரெயில் நிலையத்தில் அனைத்து ரெயில்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வெற்றிலை

வேட்டமங்கலம் பகுதியை சேர்ந்த வெற்றிலை விவசாயி செல்லப்பன்:- ரெயில் நிலையம் ஆரம்பித்த பகுதியில் இருந்து எங்களைப்போன்ற விவசாயிகள், வியாபாரிகள் வெற்றிலை சுமைகளை பாதுகாப்பாக ஈரோடு, கோவை, திருச்சி, கர்நாடகா, ஆந்திரா, கேரளா, மராட்டியம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் வழியில் ரெயில் மூலம் வெற்றிலை சுமைகளை அனுப்பி வந்தனர். ஆனால் போதிய வருமானம் இன்றி ரெயில் நிலையத்தை மூடி விட்டதால் வெற்றிலைகளை ரெயில் மூலம் அனுப்ப முடியவில்லை. இதனால் லாரிகள் மூலம் அனுப்ப வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு விட்டது. ரெயில் மூலம் அனுப்பும்போது குறைந்த செலவில் வெற்றிலைகளை அனுப்ப முடியும். எனவே ரெயில்வே அமைச்சர் நடவடிக்கை எடுத்து இப்பகுதியில் மூடப்பட்டுள்ள ரெயில் நிலையத்தை திறந்து வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ரெயில்கள் நின்று செல்ல வேண்டும்

நடையனூர் பகுதியை சேர்ந்த மருதையப்பன்:- எனக்கு தெரிந்தவரை விவசாயிகள், வியாபாரிகள், பால் வினியோகஸ்தர்கள், பால் வியாபாரிகள், மாணவ, மாணவிகள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் நொய்யல் ரெயில் நிலையம் மூலம் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வந்தனர். இதில் ஏழைகள் அதிகமாக பயணம் செய்தனர். ஆனால் தற்போது ரெயில்வே நிலையத்தை மூடி விட்டதால் புல் பூடுகள் முளைத்துள்ளன. எனவே ரெயில்வே அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து விவசாயிகள், வியாபாரிகள், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ரெயில் நிலையத்தை மீண்டும் திறந்து அனைத்து ரெயில்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story