உப்பனாற்றின் குறுக்கே பாலம் கட்டும் பணி விரைந்து முடிக்கப்படுமா?
கீழமூவர்கரை-திருமுல்லைவாசல் இடையே உப்பனாற்றின் குறுக்கே பாலம் கட்டும் பணி விரைந்து முடிக்கப்படுமா? என கிராம மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
திருவெண்காடு:
கீழமூவர்கரை-திருமுல்லைவாசல் இடையே உப்பனாற்றின் குறுக்கே பாலம் கட்டும் பணி விரைந்து முடிக்கப்படுமா? என கிராம மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
பாலம் கட்டும் பணி
மயிலாடுதுறை மாவட்டம் பழையாறு முதல் திருமுல்லைவாசல் வரையிலான 10 கடலோர கிராமங்களையும், உப்பனாற்றின் மறுகரையில் அமைந்துள்ள கீழமூவர்கரை முதல் தரங்கம்பாடி வரையிலான 16 மீனவ கிராமங்களையும் இணைக்கும் வகையில் கடந்த 2010-ம் ஆண்டு உப்பனாற்றின் குறுக்கே ரூ.27 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் பாலம் மற்றும் அணுகு சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது.இந்த கட்டுமான பணி கடந்த 12 ஆண்டுகளாக ஆமை வேகத்தில் நடைபெற்று, ஆற்றின் குறுக்கே மட்டும் பாலம் கட்டி முடிக்கப்பட்டது. ஆனால் பாலத்தை சாலையோடு இணைக்கும் அணுகு சாலை அமைக்கும் பணி நடைபெறாமல் காலம் தாழ்த்தப்பட்டு வந்தது.
அந்தரத்தில் தொங்கும் பாலம்
திருமுல்லைவாசல் பகுதியில் இணைப்பு அணுகுசாலை அமைக்க நிலங்கள் கையகப்படுத்துவதில் தாமதமானதால் பணிகள் நிறுத்தப்பட்டு பாலம் அந்தரத்தில் தொங்கும் நிலை ஏற்பட்டது. அதன் பின்னர் கூடுதலாக ரூ.14.9 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு மீண்டும் அணுகு சாலை பணியை தொடங்க முடிவு செய்யப்பட்டது. இதேபோல் மறுகரையான கீழமூவர்கரை கிராமத்தில் பாலம் கட்டும் பணி முழுவடையாமல் பாதியிலேயே நின்றது.12 ஆண்டுகளாக ஆற்றின் நடுவே அந்தரத்தில் நிற்கும் பாலத்தால் இப்பகுதியை சேர்ந்த மீனவர்கள் மற்றும் கடற்கரையோர கிராம மக்கள் ஆற்றின் மறுபக்கம் அமைந்துள்ள கிராமங்களுக்கு செல்ல 10 கி.மீ. தூரம் சுற்றி சென்று வருகின்றனர். அதே போல் நாகை, காரைக்கால் செல்ல 20 கி.மீ தூரம் சுற்றி செல்லும் அவல நிலை உள்ளது.
விரைந்து முடிக்க வேண்டும்
இந்த நிலையில் தற்போது 12 ஆண்டுகளுக்கு பிறகு கீழமூவர்கரை பகுதியில் பாலம் கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.இதுகுறித்து நாயக்கர் குப்பம் பகுதியை சோ்ந்த முத்து என்பவர் கூறுகையில், மயிலாடுதுறை மற்றும் நாகை மாவட்ட மீனவ கிராமங்களை இணைக்கும் வகையில் சாலைகள் அமைக்கப்பட்டு தற்போது போக்குவரத்து நடைபெற்று வருகிறது. ஆனால் கீழமூவா்கரை-திருமுல்லைவாசல் இடையே உப்பனாற்றின் குறுக்கே கட்டப்படும் பாலப்பணிகள் முடிவடையாத காரணத்தால், சீர்காழி சென்று சுற்றிவரும் நிலை உள்ளது.இதனால் கடலோர கிராம மக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே பால பணிகளை விரைந்து முடித்து போக்குவரத்து தொடங்க வேண்டும் என்பதே திருமுல்லைவாசல், கீழமூவர்கரை உள்ளிட்ட பல்வேறு கடலோர கிராம மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது என்றார்.