ஆற்றின் குறுக்கே சேதமடைந்த தடுப்பணை சீரமைக்கப்படுமா?
கூத்தாநல்லூர் அருகே, பழைய காக்கையாடியில் ஆற்றின் குறுக்கே சேதமடைந்த தடுப்பணை சீரமைக்கப்படுமா? என்று விவசாயிகள் எதிர்பார்த்து உள்ளனா்.
கூத்தாநல்லூர்:
கூத்தாநல்லூர் அருகே, பழைய காக்கையாடியில் ஆற்றின் குறுக்கே சேதமடைந்த தடுப்பணை சீரமைக்கப்படுமா? என்று விவசாயிகள் எதிர்பார்த்து உள்ளனா்.
அதிவீரராமன் ஆறு
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே உள்ள ஓவர்ச்சேரி ஊராட்சி பகுதியில் உள்ள தண்ணீர்குன்னத்தில் அதிவீரராமன் ஆறு செல்கிறது. இந்த அதிவீரராமன் ஆற்றில், பழைய காக்கையாடி என்ற இடத்தில் அப்பகுதியில் உள்ள விவசாயிகளின் பயன்பாட்டுக்கு சுமார்40 ஆண்டுகளுக்கு முன்பு ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டது. இதனால், அப்பகுதியில் உள்ள விவசாயிகள், தடுப்பணை மூலம் தேக்கப்படும் தண்ணீரை பாசன வாய்க்கால் மூலம் விளைநிலங்களுக்கு கொண்டு சென்று நெல், உளுந்து, பயறு, பருத்தி சாகுபடி பணிகளை செய்து வருகின்றனர். இந்த தடுப்பணை மூலம் அப்பகுதியில் உள்ள 500 ஏக்கரில் சாகுபடி பணிகள் நடைப்பெற்று வருகிறது.
சேதமடைந்த தடுப்பணை
இந்த நிலையில், பழைய காக்கையாடியில் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட தடுப்பணை கடந்த10 ஆண்டுகளாக சேதமடைந்து உள்ளது. தடுப்பணையின் தளங்கள் இடிந்து சிதறிய நிலையில் காணப்படுகிறது. தடுப்பணை உடைந்து சேதமானதால், கடந்த சில ஆண்டுகளாக ஆற்றில் தண்ணீர் தேங்கி நிற்பதில்லை. இதனால், பாசன வாய்க்கால் வழியாக விளைநிலங்களுக்கு தண்ணீர் கொண்டு செல்ல முடியாமல் அப்பகுதி விவசாயிகள் சிரமம் அடைந்து வருகின்றனர்.
புதிய தடுப்பணை
பாசன வாய்க்கால் மூலம் தண்ணீர் போதிய அளவில் செல்லாததால், ஆற்றில் தண்ணீர் வரும் நேரங்களில் கூட, பயிர்களை காப்பாற்ற பம்பு செட் வைத்து தண்ணீர் பாய்ச்ச வேண்டிய நிலை உள்ளதாக அப்பகுதி விவசாயிகள் கூறுகிறார்கள். எனவே, நடப்பாண்டில் மேட்டூர் அணையில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டதும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, சேதமடைந்த தடுப்பணையை சீரமைக்க வேண்டும் அல்லது தடுப்பணையை அகற்றி விட்டு அதே இடத்தில் புதிதாக தடுப்பணை கட்டித் தர வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.