சேதமடைந்த தடுப்பணை சீரமைக்கப்படுமா?
கூத்தாநல்லூர் அருகே பழையகாக்கையாடியில் சேதமடைந்த தடுப்பணை சீரமைக்கப்படுமா? என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.
கூத்தாநல்லூர்:
கூத்தாநல்லூர் அருகே பழையகாக்கையாடியில் சேதமடைந்த தடுப்பணை சீரமைக்கப்படுமா? என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.
சேதமடைந்த தடுப்பணை
கூத்தாநல்லூர் அருகே, ஓவர்ச்சேரி தண்ணீர்குன்னத்தில், அதிவீரராமன் ஆறு செல்கிறது. இந்த அதிவீரராமன் ஆற்றில், பழைய காக்கையாடி என்ற இடத்தில் விவசாயிகளின் பயன்பாட்டிற்காக 40 ஆண்டுகளுக்கு முன்பு தடுப்பணை கட்டப்பட்டது.
இந்த தடுப்பணை மூலம் பெரியகுருவாடி, பள்ளிவர்த்தி, பூதமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 500 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.இந்த நிலையில், கடந்த 10 ஆண்டுகளாக இந்த தடுப்பணை சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் ஆற்றில் தண்ணீர் தேக்கி வைக்க முடியவில்லை.
சீரமைக்க வேண்டும்
இதன் காரணமாக பாசன வாய்க்கால்கள் மூலம் விளை நிலங்களுக்கு தண்ணீர் கொண்டு செல்ல முடியாமல் விவசாயிகள் சிரமம் அடைந்து வருகின்றனர். ஆற்றில் அதிகளவில் தண்ணீர் வரும் போது மட்டுமே பம்பு செட் வைத்து பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச வேண்டிய நிலை உள்ளதாகவும், இதனால், ஒவ்வொரு ஆண்டும் விவசாய பணிகளை மேற்கொள்ள அவதி அடைந்து வருவதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சேதமடைந்த தடுப்பணையை சீரமைக்க வேண்டும் அல்லது அதே இடத்தில் புதிதாக தடுப்பணை கட்டித்தர வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.