சேதமடைந்த அரசு பள்ளி கட்டிடம் சீரமைக்கப்படுமா?


லெட்சுமாங்குடியில் சேதமடைந்த அரசு பள்ளி கட்டிடம் சீரமைக்கப்படுமா? என பெற்றோர் எதிர்பார்த்துள்ளனர்.

திருவாரூர்

கூத்தாநல்லூர்:

லெட்சுமாங்குடியில் சேதமடைந்த அரசு பள்ளி கட்டிடம் சீரமைக்கப்படுமா? என பெற்றோர் எதிர்பார்த்துள்ளனர்.

ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி

கூத்தாநல்லூர் அருகே லெட்சுமாங்குடி கம்பர் தெருவில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் லெட்சுமாங்குடி, கம்பர் தெரு, பூக்கொல்லை தெரு, கூத்தாநல்லூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப்புறங்களை சேர்ந்த மாணவர்கள் படித்து வருகின்றனர்.

இந்த பள்ளிக்கட்டிடம் மிகவும் குறுகலான இடத்தில் கட்டப்பட்டுள்ளது. இதனால் போதிய இடவசதி இல்லாமல் உள்ளது. மாணவர்கள் பள்ளிக்கு சென்று வருவது கூட சந்து வழியாகத்தான் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இந்த பள்ளியின் இரண்டு பக்கமும் வீடுகள் உள்ளன.

சேதமடைந்த கட்டிடம்

இந்த நிலையில் இந்த பள்ளி கட்டிடம் கடந்த சில ஆண்டுகளாக சேதமடைந்து காணப்படுகிறது. பள்ளியின் முகப்பு பகுதியில் உள்ள மேற்கூரையில் சிமெண்டு காரைகள் பெயர்ந்து விழுந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகிறது.

மேலும், கட்டிடத்தின் சில இடங்களில் விரிசல்கள் ஏற்பட்டு, மழை காலங்களில் வகுப்பறைக்குள் தண்ணீர் ஒழுகுவதால் மாணவர்கள் அவதி அடைந்து வருகின்றனர். வகுப்பறையில் மழைநீர் தேங்கி நிற்பதால் மாணவர்கள் கல்வி கற்க முடியாத நிலை ஏற்படுகிறது என்று பெற்றோர் வேதனை தெரிவிக்கின்றனர்.

சீரமைக்க வேண்டும்

கட்டிடம் சேதம் அடைந்துள்ளதால் மாணவர்களை பள்ளிக்கு அனுப்புவதற்கு அச்சப்படுகின்றனர்.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பெரும் விபத்து ஏற்படுவதற்கு முன்பு சேதம் அடைந்த பள்ளி கட்டிடத்தை சீரமைக்க வேண்டும் அல்லது சேதமடைந்த பள்ளி கட்டிடத்தை அகற்றி விட்டு புதிதாக கட்டித்தர வேண்டும். மேலும் கூடுதல் பள்ளி கட்டிடங்கள் கட்டித் தர வேண்டும் என்று பெற்றோர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து கூத்தாநல்லூரை சேர்ந்த ஜெயந்தி கூறுகையில் இந்த பள்ளி கட்டிடம் 18 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இந்த பள்ளியில் சுற்றுப்புறத்தை சேர்ந்த ஏழை, எளிய மாணவர்கள் படித்து வருகின்றனர். கடந்த 5 ஆண்டுகளாக பள்ளி கட்டிடம் சேதமடைந்து உள்ளது.1 முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள வகுப்புகள் ஒரே கட்டிடத்தில் செயல்படுகிறது. கூடுதல் கட்டிடங்கள் கட்டித்தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த பள்ளி கட்டிடமும் சேதமடைந்து சிமெண்டு காரைகள் பெயர்ந்து விரிசல்கள் ஏற்பட்டு மழை காலங்களில் வகுப்பறைகளுக்கு தண்ணீர் கசிந்து வருகிறது. இதனால் மாணவர்கள் கல்வி கற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது மட்டுமின்றி, பள்ளியை சுற்றிலும் மழை நீர் தேங்கி நிற்கிறது. வகுப்பறையில் மழைநீர் கசிந்து ஈரபதத்துடன் இருப்பதால் தரையில் அமர்ந்து படிக்கும் மாணவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே சேதமடைந்த பள்ளி கட்டிடத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


Next Story