தரைப்பாலத்தில் ஆபத்தான பள்ளம் சீரமைக்கப்படுமா?
காரையூர் ஊராட்சியில் தரைப்பாலத்தில் உள்ள ஆபத்தான பள்ளம் சீரமைக்கப்படுமா? என வாகன ஓட்டிகள் எதிர்பார்த்துள்ளனர்.
திட்டச்சேரி:
காரையூர் ஊராட்சியில் தரைப்பாலத்தில் உள்ள ஆபத்தான பள்ளம் சீரமைக்கப்படுமா? என வாகன ஓட்டிகள் எதிர்பார்த்துள்ளனர்.
தரைப்பாலம்
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் காரையூர் ஊராட்சியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.காரையூரில் இருந்து வன்னியூர் செல்லும் முக்கிய சாலை உள்ளது. காரையூர் ஊராட்சி பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் இந்த சாலை வழியாக காரையூர் வந்து அங்கிருந்து காரைக்கால், மயிலாடுதுறை, கும்பகோணம், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வர பயன்படுத்தி வருகின்றனர். அதேபோல் விவசாயிகள் தாங்கள் விளைவித்த பொருட்களை உள்ளூர் மற்றும் வெளியூர்களுக்கு எடுத்து செல்வதற்கும் இந்த சாலையை தான் பயன்படுத்தி வருகின்றனர்.
ஆபத்தான பள்ளம்
இந்த நிலையில் காரையூர் தெற்கு பாசன வாய்க்காலில் தரைப்பாலம் சேதமடைந்து சாலை நடுவில் பள்ளம் உள்ளது.இதனால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்களில் செல்பவர் சாலையில் பள்ளம் இருப்பது தெரியாமல் வாய்க்காலில் விழுந்து காயம் அடைகின்றனர்.இதனால் உயிரிழப்புகள் ஏற்படும் ஆபத்தான நிலை உள்ளது.
நடவடிக்கை
இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அந்த பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே தரைப்பாலத்தில் உள்ள பள்ளத்தை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.