நேரடி கொள்முதல் நிலையம் திறக்கப்படுமா?
கொள்ளிடம் அருகே, பழைய பாளையம் கிராமத்தில் நேரடி கொள்முதல் நிலையம் திறக்கப்படுமா? என விவசாயிகள் எதிர்பார்க்கிறார்கள்.
கொள்ளிடம்:
கொள்ளிடம் அருகே, பழைய பாளையம் கிராமத்தில் நேரடி கொள்முதல் நிலையம் திறக்கப்படுமா? என விவசாயிகள் எதிர்பார்க்கிறார்கள்.
நெல் சாகுபடி
தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய காவிரி டெல்டா மாவட்டங்களில் ஆண்டுதோறும் சம்பா, தாளடி, குறுவை என 3 போகம் நெல் சாகுபடி நடைபெறுவது வழக்கம். கடந்த ஆண்டு (2022) குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை முன் கூட்டியே அதாவது மே மாதமே திறந்து விடப்பட்டது.
வழக்கமாக ஜூன் மாதம் 12-ந் தேதி தான் மேட்டூர் அணை திறக்கப்படும். ஆனால் முன்கூட்டியே அணை திறக்கப்பட்டதால் டெல்டா மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் ஆர்வத்துடன் குறுவை சாகுபடியை மேற்கொண்டனர்.
அறுவடை
அதைத்தொடர்ந்து ஆண்டு முழுவதும் ஆறுகளில் தண்ணீர் வரத்து இருந்தது. இதன் காரணமாக சம்பா, தாளடி சாகுபடியையும் விவசாயிகள் மேற்கொண்டனர். மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் சம்பா சாகுபடி நடந்தது. கடந்த ஆண்டின் இறுதியில் பெய்த அதீத கனமழை காரணமாக கொள்ளிடம் பகுதியில் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி அழுகி வீணானது. அதனைத் தொடர்ந்து விவசாயிகள் மறு சாகுபடி செய்து, சம்பா பயிர்களை விளைவித்துள்ளனர்.
தற்போது கொள்ளிடம் பகுதியில் சம்பா பயிர் அறுவடைக்கு தயாராக உள்ளது. கொள்ளிடம் அருகே பழைய பாளையம், தாண்டவன்குளம், அகர வட்டாரம், புதுப்பட்டினம், வேட்டங்குடி, ஆலங்காடு ஆகிய பகுதிகளில் விவசாயிகள் விளைவித்த நெல்லை அறுவடை செய்து வருகிறார்கள்.
கொள்முதல் நிலையம்
அறுவடை செய்து நெல்லை வாங்குவதற்கு வியாபாரிகள் வராததால் விவசாயிகள் வீட்டிலேயே நெல்லை சேமித்து வைத்துள்ளனர். பல்வேறு இடங்களில் நெல்லை காய வைக்கும் பணிகளும் நடந்து வருகிறது. வியாபாரிகள் குறைந்த விலையில் நெல்லை வாங்குவதால் விவசாயிகள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர்.
எனவே பழையபாளையம் கிராமத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறக்க வேண்டும் என தாண்டவன்குளம் ஊராட்சி மன்ற தலைவர் வாசுதேவன் மற்றும் அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் நுகர்வோர் வாணிபக் கழகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.