வெண்ணங்குழி ஓடையை மாவட்ட நிர்வாகம் தூர்வாருமா?
பலமுறை கோரிக்கை விடுத்தும் அதிகாரிகள் செவிசாய்க்காததால் வெண்ணங்குழி ஓடையை மாவட்ட நிர்வாகம் தூர்வாருமா? எனவும், வாழ்வாதாரத்தை இழப்பதாகவும் விவசாயிகள் குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர்.
வெண்ணங்குழி ஓடை
அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அருகே உள்ள சலுப்பை கிராமத்தில் உள்ள பெரிய ஏரியில் இருந்து செல்லும் வெண்ணங்குழி ஓடை அரியலூர் மாவட்டத்தையும், கடலூர் மாவட்டத்தையும் இணைக்கும் வகையில் இந்த ஓடை செல்கிறது. கடலூர் மாவட்டத்தில் இருந்து செல்லும் இந்த ஓடையானது வடவாற்றில் கலந்து வீராணம் ஏரியில் கலக்கிறது. அரியலூர் மாவட்டத்தில் இருந்து செல்லும் இந்த ஓடையானது, கடலூர் மாவட்டம் எல்லையை தொட்ட இடத்தில் இருந்து வடவாற்றில் சென்று சேரும் இடம் வரை கடலூர் மாவட்ட பொது பணி துறையினர் வருடா வருடம் தூர் வாரி கரைகளை பலப்படுத்தி வருகின்றனர்.
இதுகுறித்து விவசாயிகளிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:- வெண்ணங்குழி ஓடையின் மூலம் சுமார் 500 ஏக்கர் நிலப்பரப்பு பாசனம் பெறுகிறது. கடலூர் மாவட்டத்தை பொருத்தவரை அவர்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.
செவிசாய்க்காத அதிகாரிகள்
ஆனால் அரியலூர் மாவட்ட பொதுப்பணி துறையினர் வெண்ணங்குழி ஓடையை தூர்வாராமல் அப்படியே கிடப்பில் போட்டதன் காணரமாக ஓடை முழுவதும் செடி-கொடிகள், கருவேலமரங்கள் முளைத்து தண்ணீர் செல்ல பெரிதும் தடையாக உள்ளது. இதனால் இப்பகுதி விவசாயிகள் பாசனத்திற்கு தேவையாக தண்ணீர் கிடைக்காமல் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து வருகின்றனர். மேலும் மழை பெய்யும்போது இந்த ஓடையில் மழைநீர் செல்ல வழியின்றி அருகில் உள்ள விவசாய நிலங்களில் வெள்ளநீர் புகுந்து விடுகிறது.
இதனால் கஷ்டப்பட்டு பயிர் செய்து அறுவடைக்கு தயாராகும் நேரத்தில் பயிர்கள் வெள்ளத்தில் சிக்கி விடுகிறது. நாங்கள் இந்த ஓடையை தூர்வாரக்கோரி பலமுறை பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் அவர்கள் இதுகுறித்து செவிசாய்ப்பதாக தெரியவில்லை. எனவே விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து வெண்ணங்குழி ஓடையை சீரமைக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.